

புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளை, அவர்களது பள்ளியிலோ பள்ளிக்குச் செல்லும்போதோ பள்ளியிலிருந்து திரும்பும்போதோ கைதுசெய்ய மாட்டோம் என்று கல்வியாண்டு தொடங்கியதும் இஸ்ரேலின் மக்கள்தொகை, புலம்பெயர்வு மற்றும் எல்லை ஆணையத்தின் இயக்குநர் ஷ்லோமோ மோர்-யூசுஃப் வாக்குறுதி அளித்திருந்தார். இது மிகவும் வெளிப்படையானது: ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்புணர்வுடன் பள்ளி செல்லும் உரிமை உண்டு.
இஸ்ரேலில் பிறந்து, வளர்ந்து, ஹீப்ரூவைத் தங்கள் தாய்மொழியாகப் பேசி, இஸ்ரேலைத் தங்கள் தாய்நாடாகக் கருதிவருபவர்கள், இஸ்ரேலில் சட்டபூர்வமாக நுழைந்து, அவர்கள் அங்கே இருக்கும்போதே அவர்களுக்குத் தற்செயலாகப் பிறந்ததற்காக, அதாவது தங்கள் தாயின் தேர்வுகளுக்காக இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. எனினும், இந்த வாரம் மோர்-யூசுஃபின் வாக்குறுதிகளுக்கு அர்த்தமில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
அது அக்டோபர் 29-ம் தேதி காலை 6.15 மணி, 13 வயதுச் சிறுமி ஜீனா ஆண்டிகோ தனது பள்ளிப் பையை எடுத்துவைத்துக்கொண்டு பள்ளி செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள். வெளியே அவளின் பள்ளித் தோழி காத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் புலம்பெயர்வுத் துறை காவலர்கள் வீட்டுக்குள் நுழைந்து, அந்தச் சிறுமியைக் கைதுசெய்தார்கள்.
இது அந்தச் சிறுமியை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியே. அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு 10 வயது ரால்ஃப் ஹாரெல் என்ற சிறுவன், அதே மாதிரி தன் பள்ளிக்குச் செல்லத்தயாராகிக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டிருக்கிறான்.
தற்போது அந்த இரண்டு குழந்தைகளும் அவர்களது தாய்களும் சிறையில் இருக்கிறார்கள். சிறை என்பது பிள்ளைகளுக்கு உகந்த இடமே இல்லை என்று ஜூலையில் நீதிபதி இலன் ஹலபாகா குறிப்பிட்டார். “சாதாரண மக்களும் சட்டபூர்வ வயதுவராதவர்களும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜீனா எந்த விசாரணையுமின்றிக் கைதுசெய்யப்பட்டிருப்பது, 12 வயதான அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகக் கைதுசெய்யும்போது, புலம்பெயர்வு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நீதித் துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிரானது. இந்த உத்தரவைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தைகளை நாட்டை விட்டு அனுப்பும் பிரச்சினையில் குழந்தைகளின் விருப்பங்களும் நலனும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
உரிய அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படாததே ஜீனாவிடம் விசாரணை நடத்தப்படாததற்குக் காரணம் என்று புலம்பெயர்வு ஆணையம் சொல்கிறது. தேவையான அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்து, அதற்குப் பிறகு அவர்களைக் கைது போன்ற வன்முறையான நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, 10 வயதும் 13 வயதும் ஆன இரண்டு குழந்தைகளைக் கைதுசெய்வது உடனடித் தேவை என்று புலம்பெயர் ஆணையம் கருதியிருக்கிறது.
இஸ்ரேலில் பிறந்து தங்கள் வகுப்புத் தோழர்கள்போலவே ஹீப்ரூ பேசும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுவதை விடுத்து, இஸ்ரேல் அவர்களைக் கொடூரமாகவும் ஈவிரக்கமின்றியும் நடத்துவது மோசமானது; கண்டனத்துக்குரியது!
தமிழில்: ஆசை