

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்திய திரையிசைக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை விளக்க வேண்டியதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் 16 மொழிகளில், 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய அவருடைய சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.
ஆனால், பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் திரையுலகக் கலைஞர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் அவர் பாகுபாட்டை எதிர்கொண்டிருப்பதன் வேதனையை ட்விட்ட்டரில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்ததுமே அவரிடம் செல்பேசியை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
ஆனால், உள்ளே பாலிவுட் நடிகர்களும் நடிகைகளும் பிரதமருடன் நின்றுகொண்டு தங்கள் செல்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். “எங்களுக்கு மறுக்கப்பட்டது; அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதைப் பார்த்தபோது அதிர்ந்தேன்” என்று சொல்லியிருக்கிறார் பாலச்சுப்பிரமணியம்.
“பாலிவுட் நட்சத்திரங்கள் என்றால் மருகும் டெல்லி அதிகாரிகளுக்கு மதராஸி பாலசுப்பிரமணியத்தின் மதிப்பு தெரியாமல் போனதற்கு என்ன காரணம்; பிரதமர் நிகழ்ச்சியிலேயே இப்படிப் பாகுபாடு இருக்கலாமா?” என்று கேட்டு வறுத்தெடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் வரவேற்கும் சடங்குகளில் சில மாற்றங்கள்
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையின்போது விருந்து நிகழ்ச்சிகளில் பிரதமரும் பங்கேற்கும் சடங்கு மாற்றப்படுகிறது. அரசுக்கும் நாட்டுக்கும் தலைவராக இருக்கும் (அதிபர் போன்ற) அந்தஸ்து மிக்க தலைவர்கள் வருகையின்போது மட்டும் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் விருந்தில் பிரதமர் பங்கேற்பார்.
இப்போதுள்ள நடைமுறைப்படி, எல்லா தலைவர்களையும் பிரதமர் வரவேற்று உபசரித்து, உரையாடி முடித்த பிறகு அவர் குடியரசுத் தலைவர் இல்லம் செல்கிறார். அங்கு போய் மீண்டும் அவருடன் இருந்து 2 மணி நேரத்தைக் கழிப்பதால் பிரதமரின் அலுவலக வேலைகள் பாதிப்படைகின்றன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் முக்கியத்துவம் கருதி வெளிநாட்டுத் தலைவர்கள், நிர்வாகிகள் வருவது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.
எனவே, நேரத்தை மிச்சப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இல்லத்தின் முன்பு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் இனி பங்கேற்க மாட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கும்போது மதுபானத்தைக் கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு ‘டோஸ்ட்’ செய்யும் வழக்கமும் கைவிடப்படுகிறது. விருந்தில் ஒயின் குடிப்பது ஐரோப்பிய வழக்கம். குடியரசுத் தலைவர் மாளிகையில் மதுபானங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே, ‘டோஸ்ட்’ நடைமுறையும் கைவிடப்படுகிறது.
அமெரிக்கக் கழிப்பறைகளில் அழியும் காடுகள்!
மலம் கழித்த பிறகு மெல்லிய காகிதத்தால் ஆசனவாயைத் துடைப்பது அமெரிக்கர், ஐரோப்பியர் வழக்கம். ஒரு அமெரிக்கர் வீட்டில் சராசரியாக ஆண்டுக்கு 141 ரோல் காகிதம் செலவிடப்படுகிறதாம். அமெரிக்காவில் இந்தக் காகித விற்பனை விற்றுமுதலின் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ.2.2 லட்சம் கோடி! அதோடு, ஆயிரக்கணக்கான மரங்களையும் இவை கபளீகரம் செய்துவிடுகின்றன. ஏனென்றால், இந்தக் காதிதமானது மரக்கூழால் தயாரிக்கப்படுவது.
“காடுகளை அழிக்கிறோம். கழிப்பறைப் பழக்கத்துக்காக. இது சரியா!” என்ற குரல்கள் இப்போது அமெரிக்காவில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தியர்களுக்கு அந்தப் பாரம்பரியம் இல்லை. ஆனால், நம்முடைய நட்சத்திர விடுதிகள் தொடங்கி வைத்திருக்கின்றன. சரியா இது என்று நாமும் யோசிக்கலாம். கை துடைக்கும் காகிதத்தையும் சேர்த்துதான்!