அரசு மருத்துவர்களின் போராட்டம் மக்களுக்கான போராட்டம்! 

அரசு மருத்துவர்களின் போராட்டம் மக்களுக்கான போராட்டம்! 
Updated on
3 min read

ஜி.ஆர்.இரவீந்திரநாத்

காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்புகளில் ஏற்கெனவே இருந்த 50% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகிறது.

பல மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களையும், மத்திய அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களையும் ஒப்பிடும்போது, தமிழக அரசு மருத்துவர்கள் குறைவான ஊதியத்தையே பெற்றுவருகின்றனர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் மத்திய அரசுப் பணியில் சேரும்போது, ஒரே அடிப்படை ஊதியத்தையே பெறுகின்றனர். ஆனால், பணியில் சேர்ந்த 20-ம் ஆண்டில், மத்திய அரசு மருத்துவரின் அடிப்படை ஊதியம் மாநில அரசின் மருத்துவரைவிட பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.

இருவரும் ஒரே படிப்பைப் படித்தவர்கள் என்பது மட்டுமல்ல; ஒரே பணியைச் செய்பவர்களும்கூட. இன்னும் சொல்லப்போனால், உடற்கூறாய்வு செய்வது, நீதிமன்றம் செல்வது, இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் கூடுதல் பணி மேற்கொள்வது, தொடர்ச்சியாக 24 மணி நேரம் பணியாற்றுவது என மத்திய அரசு மருத்துவர்களைக் காட்டிலும் கூடுதல் பணிகளை மாநில அரசு மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடஒதுக்கீடு தொடர வேண்டும்

தமிழக மருத்துவர்கள் தற்போது பணியில் சேர்ந்த 20-ம் ஆண்டில் பெறும் ஊதியத்தை 12-ம் ஆண்டிலேயே வழங்கலாம் என 2009-ம் ஆண்டு எட்டப்பட்ட தமிழக அரசின் அரசாணை எண் 354-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அனைத்து மருத்துவர்களுக்கும் நிறைவேற்றாமல் விட்டதுதான் இந்தப் போராட்டத்துக்கு வழிவகுத்துவிட்டது. முதுநிலை மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவர்களுக்கானது மட்டுமல்ல; அது மக்களுக்கானதும்கூட.

இதனால், அரசு மருத்துவமனையின் சேவைத் தரம் மேம்படும் மேலும், அரசு மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு மறுக்கப்படுகிறது. அவர்கள் ஓய்வு பெறுவது வரை சேவையளிக்கிறார்கள். இது அரசு மருத்துவர்களை நம்பியிருக்கும் ஏழைகளுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறது. அதுபோலவே, இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியதும் கிராமவாசிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. அதை ரத்துசெய்தது கார்ப்பரேட் நிறுவனங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும், கார்ப்பரேட் மருத்துவமனை களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.

பொது சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றால், இடஒதுக்கீடு தொடர வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தில் உரிய திருத்தங்கள் செய்து மாநில அரசுகளின் மருத்துவமனைகள், மத்திய அரசுகளின் மருத்துவமனைகள், பொதுத் துறையில் பணியாற்றுபவர்கள், உயர் சிறப்பு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு என 50% இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

பிற கோரிக்கைகள்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிப்பது ஆபத்தானது. சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் மருத்துவர்களைக் குறைப்பதால், நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவர்களும் முந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை இரு தரப்புக்குமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, பணியிடங்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக, மருத்துவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அவர்கள் சேவையிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள், குடும்ப நலனிலும் அக்கறை காட்டினார்கள். இப்போது கலந்தாய்வு முறையை ரத்துசெய்துவிட்டு, நேரடியாக உத்தரவு அடிப்படையில் பணியமர்த்துவது ஊழல் முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. போலவே, குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாத சூழலும் ஏற்படுகிறது.

மருத்துவத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த முடியும். மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். தற்போது ஜிடிபியில் 1.04% மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதனால்தான், மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியவில்லை. மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாகக் கோடிக்கணக்கான ரூபாயை வாரிவழங்குகிறார்கள். வாராக்கடன் எனும் பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஆக, நிதி இல்லை எனும் வாதம் ஏற்புடையதல்ல.

தமிழக அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கைகளை வைத்தபோதும்கூட, அரசு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இதன் காரணமாகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு, தவிர்க்கவே முடியாமல்தான் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இது அவர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டமாகும். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்கள் தமிழகத்தில் பரவிவரும் நிலையில், ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், மருத்துவர்களின் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நோயாளிகளை மிகவும் பாதித்துள்ளது. இது அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடியாகும்.

தவறான அணுகுமுறை

எனவே, போராடும் மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசாமல், வேறொரு சங்கத்தை அழைத்துப் பேசியது போராடும் மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், சிறுபான்மையாக உள்ள ஒரு சங்கத்தை அழைத்துப் பேசியிருப்பதும், போராடும் மருத்துவர்களைப் புறக்கணித்திருப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. “அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகாரம் பெறாத அமைப்பு. எனவே, அந்த அமைப்புடன் பேச முடியாது” என மக்கள் நலத் துறை அமைச்சர் கூறியிருப்பது விந்தையாக இருக்கிறது.

இதே மக்கள் நலத் துறை அமைச்சர், கடந்த ஆகஸ்ட் 27 அன்று இதே கூட்டமைப்பை அழைத்துப் பேசினார். ஆறு வாரங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டாக்டர் செந்தில் ராஜ் ஐஏஎஸ் தலைமையில், ஒரு குழுவையும் அமைத்தார்கள். எனவே, அமைச்சரின் இந்த வாதம் முரண்பாடானது.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பிரித்தாளும் சூழ்ச்சியுடன் அரசு செயல்படுவது நியாயமற்றது. ஜனநாயகத்துக்கு எதிரானதும்கூட. போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசாதது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வைக் காண வேண்டும்.

- ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in