Published : 30 Oct 2019 08:29 am

Updated : 30 Oct 2019 08:29 am

 

Published : 30 Oct 2019 08:29 AM
Last Updated : 30 Oct 2019 08:29 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

results-are-news

செல்வ புவியரசன்

வேலூர் மக்களவைத் தேர்தலில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அதிமுக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தன்னை மீண்டும் நிலைப்படுத்திக்கொண்டிருக்கிறது. திமுகவின் வசமிருந்த விக்கிரவாண்டியும் காங்கிரஸின் வசமிருந்த நாங்குநேரியும் இப்போது அதிமுகவின் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. விக்கிரவாண்டியில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும், நாங்குநேரியில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்று அதிமுக வேட்பாளர்கள் வென்றிருக்கிறார்கள்.

பழனிசாமிக்கு இது மும்முனை வெற்றி. சட்டமன்றத்தில் அவருக்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு உறுதிப்பட்டிருக்கிறது, கட்சிக்குள் எழும் சலசலப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு தனது தலைமைக்குக் கூடுதல் வலுவைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார், கூட்டணிக் கட்சிகளுடனான பேர சக்தியையும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உற்சாகத் திருவிழா

தேர்தலில் கிடைக்கும் வெற்றி என்பது எப்போதுமே வெற்றிபெற்ற கட்சியினரை உற்சாகப்படுத்தும், ஊக்கப்படுத்தும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்த அதிமுகவுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அளவுக்கதிகமான உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களுக்குள் நுழைந்த அதிமுக நிர்வாகிகள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்; லட்டுகளை ஊட்டிவிடாத குறை மட்டும்தான்.

தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்குச் சாதகமாக இருப்பது உறுதிப்பட்டதும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த பழனிசாமி தொண்டர்களோடு தொண்டராய் நின்று இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். இதற்கு முன்பு உப்பரிகையைப் பார்த்து கையசைத்த தொண்டர்கள் தலைவரோடு கைகுலுக்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘திமுகவின் பொய்ப் பிரச்சாரம் எடுபடவில்லை, இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி, தர்மமும் நீதியுமே எப்போதும் வெல்லும்’ என்று பேசினார் பழனிசாமி. அதிமுகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அரசு இயந்திர பலம், பண பலம், படை பலம் என்று சர்வ பலங்களும் சேர்ந்து கொடுத்த வெற்றி இதுவென்றாலும் எல்லாவற்றைத் தாண்டியும் பழனிசாமியின் தலைமைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது!

மக்களவைத் தேர்தலில் அமைந்த அதிமுக-பாமக கூட்டணி, அந்தத் தேர்தலில் வெற்றிக்குப் பயன்படாமல்போனாலும் விக்கிரவாண்டி தொகுதியில் கைகொடுத்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவுடன் கைகோத்துக்கொள்ள பாமக ஆர்வம் காட்டுகிறது. பாஜக எதிர்ப்புதான் திமுகவின் முக்கிய அஸ்திரம் என்பதால், அதிமுகவுடன் நல்லுறவு பேணுவதுதான் பாமகவுக்குத் தற்போது இருக்கும் ஒரே வழி.

அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், பாமகவுக்கு இடையேயான உறவு சிக்கலாக இருந்தாலும், தேர்தல் வேலைகளில் பாமக தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம். தேர்தல் நேரத்தில் உள்முரண்பாடுகள் எழுந்துவிடாத வகையிலும் கூட்டணிக் கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாத வகையிலும் கண்ணும் கருத்துமாக நடந்துகொள்கிறார் பழனிசாமி. தொடர்புடையவர்களை நேரில் அழைத்து அவரே சமாதானப்படுத்தி அனுப்புகிறார். இதுவும் சேர்ந்துதான் அதிமுகவின் வெற்றிக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.

களத்தில் இறங்கிய ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரத்தின்போது வழக்கமான மேடைப் பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் சந்திப்பாக அதை மாற்றிக்கொண்டார் மு.க.ஸ்டாலின். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனோடு அவர் நடந்து சென்றே வாக்கு கேட்டார். வாக்காளர்களிடம் மனுக்களைப் பெற்று, அங்கேயே அப்போதே ஆலோசனைகளையும் தீர்வுகளையும் சொன்னார். திமுகவின் ஆட்சிக்காலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பற்றி பேசியபோது, அவரைச் சூழ்ந்து நின்ற பெண்கள் நெகிழ்ந்துபோனார்கள். ஸ்டாலின் கலந்துகொண்ட மற்றொரு மக்கள் சந்திப்பில் அங்கு வந்திருந்த மாற்றுத் திறனாளியால் அவரிடம் தன் எல்லாக் குறைகளையும் சொல்லி உரையாட முடிந்தது. இப்படி ஸ்டாலின் கலந்துகொண்ட வாக்குச் சேகரிப்புப் பயணங்கள் பலவும் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தாலும் திமுக கூட்டணிக்கு வெற்றியை அவை வழங்கவில்லை.

காரணம் ஸ்டாலினுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு, மகன் உதயநிதியை அவர் இளைஞர் அணியின் தலைவர் ஆக்கியதும், உதயநிதி செல்லும் இடங்கள் எல்லாம் இப்போதே அவர்தான் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர் என்பது மாதிரி செய்யப்படும் தடபுடல் ஏற்பாடுகளும் திமுக மீண்டும் குடும்ப வாரிசு அரசியல் கலாச்சாரத்துக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதை அக்கட்சியினரே பிரகடனப்படுத்துவதுபோல் அமைந்துவிட்டது.

ஸ்டாலின் மீது இன்னமும்கூட குடும்ப வாரிசு எனும் அடையாளம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், உதயநிதியின் வருகை யாராலும் ரசிக்கப்படவில்லை. கட்சிக்குள்ளுமே எல்லா நிலைகளிலும் நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளைக் களம் இறக்கிவிடுவார்களோ என்ற கவலை எல்லோரையும் தொற்றியிருக்கிறது. மக்கள் வெற்றியைக் கொடுத்துவிட்டதாலேயே முழுக்க தான் நினைப்பதுபோலெல்லாம் செயல்படலாம் என்ற நிலைக்கு திமுக செல்வதை யாரும் விரும்பவில்லை என்பதற்கான சமிக்ஞை என்றும் இந்தத் தோல்வியைத் தாராளமாகச் சொல்லலாம்.

மேலும், அதிமுகபோல நேரடி சாதி அரசியல் கணக்குகளுக்குள் திமுக செல்வதும் அதற்குத் தோல்வியையே தரும் என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு’ என்ற அறிவிப்பு சமூக நீதிக்கு வலு சேர்ப்பதாக இருக்கலாம். ஆனால், தேர்தல் சமயத்தில் அதை அறிவித்ததில் உள்ள ஓட்டரசியல் கணக்கு மோசமானது. சாதிரீதியில் ஏற்கெனவே திமுகவை உசுப்பிவிடுவதுபோல பாமக பேசிவந்த நிலையில், திமுக இதன் மூலம் தன் பங்குக்குத் தானே அந்த வலையில் போய் சிக்கிக்கொண்டது. விளைவாக, வன்னியர் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குப் பதிலாக தலித்துகள் ஆதரவை திமுக இழந்ததுதான் நடந்தது.

தேர்தலுக்குத் தயாரா?

‘இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தானே வாக்குகள் விழும், அவர்கள் வெல்வதுதானே வழக்கம்’ என்ற வழக்கமான வாதத்தை எதிர்க்கட்சிகள் இப்போது அதிமுகவுக்கு எதிராக வைக்க முடியாது. ஏனென்றால், இந்த ஆட்சி எப்போதும் கவிழக்கூடும் என்று தினம் ஒரு கணிப்புக்கு ஆளான ஆட்சி இது, உட்கட்சிச் சிக்கல்கள் இன்னமும்கூட முழுமையாக முடிவுக்கு வராமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது அதிமுக. இவ்வளவுக்கும் இடையில்தான் அக்கட்சியால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடிந்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் நிலவிய பாஜகவுக்கு எதிரான மனோநிலை, அதிமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோல்வியடையச் செய்தது. அந்த மக்களவைத் தேர்தலில் திமுகவால் பெருவெற்றியைப் பெற முடிந்தாலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் முழு வெற்றியைப் பெற முடியாமல்போனது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் மக்களின் அதே பாஜக எதிர்ப்பு மனோபாவம் தொடரும் என்று சொல்ல முடியாது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அது ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் இடையிலான போட்டி என்பதும், பழனிசாமி எளிதில் தோற்கடிக்கப்படக்கூடியவர் இல்லை என்பதும் இப்போது உறுதியாகியிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனோநிலை மட்டுமே தற்போது ஸ்டாலினுக்கு ஆதரவான ஒரே வாய்ப்பு. அதுவும் இந்த இடைத்தேர்தலில் எதிரொலிக்கவில்லை. அதை மட்டுமே நம்பிக்கொண்டு எதிர்க்கட்சிகள் களம் காண்பதும் அசட்டுத்தனம். மேடைகளில் கொள்கை, அனுபவம் என்று எவ்வளவோ பேசினாலும் தேர்தல் வெற்றிகள் என்பவை தங்கத் தட்டில் வைத்து தானாகப் பரிசளிக்கப்படுவதில்லை. முயல், ஆமை கதையெல்லாம் பள்ளிநாட்களில் எல்லோரும் படித்ததுதானே?

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

விக்கிரவாண்டிநாங்குநேரிமுடிவுகள்வேலூர் மக்களவைத் தேர்தல்திமுகஅதிமுகசட்டமன்ற இடைத்தேர்தல்உற்சாகத் திருவிழாஸ்டாலின்

You May Like

More From This Category

More From this Author