Published : 30 Oct 2019 08:11 am

Updated : 30 Oct 2019 08:11 am

 

Published : 30 Oct 2019 08:11 AM
Last Updated : 30 Oct 2019 08:11 AM

மாப்பிள்ளை வந்த புள்ள!

groom

ஷஹிதா

என் வீட்டில் எனக்கு இருக்க இடமுண்டு, எழுத இடமில்லை என்று அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் பேசியதாக எங்கோ படித்த நினைவு. அப்படியும் முழுமுற்றாக நானெல்லாம் சொல்லிவிட முடியாது. வேலைகள் அத்தனையும் ஓய்ந்துவிட்டன என்று சமாதானப்படுத்திக்கொள்ள முடிகிற, வீட்டில் எல்லோரும் இணக்கமான அமைதியில் இருக்க வாய்க்கிற நேரங்களிலெல்லாம் எழுத வேண்டியதுதானே! அப்படியெல்லாம் அமையவில்லை என்றாலும்கூட, ஒரு முத்தத்துக்காக ஏங்கி அழும் சிநேகிதிகள் வாய்க்கப்பெற்ற துக்கம் தீர நிச்சயமாக எழுதித்தானே ஆக வேண்டும்?

எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் அடுக்ககத்தில் சில மாதங்கள் முன்பு வரையில் வசித்துவந்தவள் ஜமீமா. ஒரே பெண் பிள்ளையும், அடுத்தடுத்துப் பிறந்த நான்கு ஆண் மக்களுமாக, சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் கணவர் ஊர் வந்துபோகும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு விசேஷப்பட்டுப்போகும் அவள் வீடு. எங்கள் அடுப்படி ஜன்னலுக்கு நேரெதிரில் அவள் வாசல்.

விடியலில் நான் தேநீர் தயாரிக்க வரும் பொழுதிலேயே அடர் ரோஜா நிற சமிக்கிப் பொட்டுகள் பாவிய, வெறிக்கும் மஞ்சள் நிறப் புடவை, தகதகக்கும் தங்கப் பொட்டுகளுடன் கூடிய பீட்ரூட் வண்ணச் சேலை என்று முகத்திலும் உதட்டிலும் பூச்சுடன் பார்க்கும் விழிகளைச் சட்டென திடுக்கத்தில் விதிர்க்கச்செய்வாள்.
“ஃபஜருலியே இப்புடியா பயமுறுத்தாட்டுவிய” என்று யார் கேலி பேசினாலும் கிளுகிளு புன்னகைதான். “நான் மாப்புள வந்த புள்ளைலா... இனி ரெண்டு வருஷத்துக்கு இந்த ரெண்டு மாச வாழ்க்கதானே!” என்பாள். இரண்டு வருஷம் அல்ல. இந்த சபர் ஆறு வருடங்களாக நீண்டது.

சேர்ந்து தேநீர் அருந்தவென ஒரு இளமாலையில் அழைத்து, “அவுக இன்னொருத்திய கட்டிக்கிட்ட மாதிரி கனவு கண்டேன் சய்தா” என்று முகம் வீங்கி விம்மினாள். பள்ளிப்படிப்புகூட அற்றவள், மக்களைப் பள்ளிக்கு அனுப்பி, வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி, நேரங்கெட்ட பொழுதுகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சுகக்கேடுகளுக்கு அலறிக்கட்டி ஓடி மருத்துவம் பார்த்து, மகளுக்கு மாப்பிள்ளை பேச ஊர் ஊராக அலைந்து, பொருத்தமானவனைத் தேர்ந்து, கல்யாணம் சொல்லி... அத்தனையும் தானே செய்தாள். பத்திரிகை கொடுக்க வந்தபோதும் மிகு ஒப்பனையும் அவளுக்கே உரிய பளீர் ஆடைகளும் துப்பட்டியை மீறி தெரியத்தான் செய்தன.

“இப்பவும் என்ன பட்டிக்காட்டு துப்பட்டி? மவ கல்யாணத்துக்கு ஆசாத் அத்தா வரயில நல்ல மாடர்னா புர்கா கொண்டாரச்சொல்லிப் போடுங்க” என்றதில் உடைந்தாள். “அந்த ஆம்பள என்னைய மோசம் பண்ணிட்டாரு சய்தா. பொண்டாட்டி புள்ளையள மறந்து எங்கியோ மாட்டிக்கிட்டாரு. நிக்காவுக்கு வரலேண்டா நான் மவுத்தாப் போவேண்டு போன் பேசிருக்கேன். பொண்ணுக்கு வாப்பா கல்யாணத்துக்கு வந்துருவாஹளாண்டு கேக்குற சம்மந்தபொரத்துக்கு யாரு ஜவாபு சொல்றது!”

பிறந்ததிலிருந்து பார்த்தறியாத வாப்பாவுடன் ஒட்டிக்கொண்டு திருமணத்துக்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான் ஆசாத். நாங்கள் வீடுகட்டிக் குடிவந்த சமயத்தில் வாசலில் மீதமிருந்த மணலில் என் மகளோடு விளையாடிய குழந்தை, ரிஃபி. திருமணப்பட்டில் அத்தனை பெரியவளாகத் தெரிந்தவளைக் கண்களால் அள்ளிக்கொண்டேன். நிக்காஹ் ஓதி, கருகமணி அணிவிக்கும் பொழுதில் எனக்குமே கொஞ்சம் சிலிர்த்துக்கொண்டபோது, மேலில் முழுதாகச் சாய்ந்து என் கழுத்தில் கண்ணீர் பெருக்கினாள் ஜமீம்.

“இந்நேரத்துக்கு யாராவது அளுவாகளா? எம்புள்ளைக்கி ஆயுச நீட்டிச்சிப் போட்டு, பெரு வாழ்க்கையக் குடுடா அல்லாஹ்ண்டு துவா செய்யாமே?” என்றேன். “அவளுக்கென்ன! உள்ளூர்வாசி மாப்புள்ள தங்கமா அமஞ்சுபோனான். பொறகென்ன? இவுகதேன். ஆசாதுக்கு அத்தா வந்தெறங்கி மூணு நாளாச்சு. இன்னும் சூடா ஒரு முத்தங்கூடக் குடுக்கல.”

- ஷஹிதா, ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலின் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: shahikavi@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மாப்பிள்ளைபெண்ஆண் மக்கள்கல்யாணம்திருமணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author