Published : 29 Oct 2019 08:01 AM
Last Updated : 29 Oct 2019 08:01 AM

மராட்டிய அரசியலின் முடிசூடா மன்னர்!

வ.ரங்காசாரி

மக்களோடு எப்போதும் தங்களை இணைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களை, மக்களோடு பிணைத்துக்கொள்ளக் கடினமாக உழைக்கும் தலைவர்களை இந்திய வாக்காளர்கள் என்றுமே கைவிட மாட்டார்கள் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் சரத் பவார். மகாராஷ்டிர மாநிலக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் என்றாலும், தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவராகவும் அறியப்பட்டவர்.

புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதோடு, 80 வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரே தலைமை வகித்தார். எதிர்க்கட்சிகள் கண்ணியமான இடத்தை சட்டமன்றத்தில் உட்காரும் சூழலை அவரே உருவாக்கியிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட மராத்தா சமூகத்தின் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் 1940-ல் பிறந்த சரத் பவார், 18 வயதிலேயே இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தவர். 22 வயதில் பூனா மாவட்டத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 24 வயதில் மகாராஷ்டிர இளைஞர் காங்கிரஸின் செயலாளர்களில் ஒருவர்.

27 வயதில் பாராமதி சட்டமன்ற உறுப்பினர் என்று உயர்ந்து 1978-ல் தன்னுடைய 38 வயதில் மகாராஷ்டிரத்தின் இளம் வயது முதல்வர் ஆனவர். நான்கு முறை முதல்வர் பதவியை இதுவரை அலங்கரித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்று மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பி மீண்டும் காங்கிரஸிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்திவந்தாலும், அவருடைய வரலாறு காங்கிரஸுடனேயே தொடர்வது.

தனிக்கட்சி கண்ட பிறகு, 1999 தேர்தலில் காங்கிரஸும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் தனித்தே களம் கண்டன. காங்கிரஸ் 75 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 58 இடங்களையும் வென்றன. விளைவாக, பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தேர்தலுக்குப் பின்பு இரண்டும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. 2004 தேர்தலில் கூட்டணி அமைத்த இந்த இரு கட்சிகளும் சேர்ந்து 140 இடங்களை வென்று ஆட்சியமைத்தன.

2009 தேர்தலிலும் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் தேர்தல் கூட்டணி அமைத்து 144 இடங்களில் வென்று ஆட்சியமைத்தன; அதாவது, காங்கிரஸ் 82 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களிலும் வென்றிருந்தன. இந்தக் காலகட்டம் நெடுகிலும் பாஜகவின் ஆட்சிக் கனவுக்கு முட்டுக்கட்டை விழ முக்கியமான காரணம் சரத் பவார்தான்.

ஆனால், 2014 தேர்தலிலோ கதை தலைகீழாக மாறியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக, சிவசேனை நான்கு கட்சிகளும் தனித்தனியே களம் கண்ட இத்தேர்தலில் காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41, சிவசேனை 63, பாஜக 122 இடங்களில் வென்றன. தன்னுடைய கடைசி ஆட்சி காலகட்டத்தில் மோசமான ஆட்சியைத் தந்த அந்த இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு இருந்த அதிருப்தியை மோடி அலையின் துணையில் பாஜக நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது.

பெரும் எண்ணிக்கை பலத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைப் பந்தாடியது என்றே சொல்லலாம். மாநிலத்திலுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 41 தொகுதிகளை 2014, 2019 இரு தேர்தல்களிலும் வென்றது பாஜக - சிவசேனை கூட்டணி. இரு தேர்தல்களிலுமே தேசியவாத காங்கிரஸ் வெறும் 4 தொகுதிகளோடு முடங்க நேர்ந்தது.

அடுத்த அடியாக விழுந்தது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள். எதிர்க்கட்சி வரிசையில் செல்வாக்கோடு இருக்கும் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாஜக, மகாராஷ்டிரத்திலும் பெரும் ஆட்டம் ஆடியது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கூடுதல் அடியாகக் கட்சித் தலைவர்கள் பலரைத் தன் பக்கம் இழுத்தது பாஜக. அவர்களில் செல்வாக்கு உள்ளவர்களைத் தன் தரப்பிலிருந்து போட்டியிட வாய்ப்பும் வழங்கியது.

சமூகரீதியாக மராத்தா சமூகத்தைப் பெரும் வாக்கு வங்கியாகக் கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸை மராத்தாக்களை ஈர்க்கும் அறிவிப்புகள் வழியாகவும் முடக்கியது; மராத்தாக்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு மிக முக்கியமான தாக்குதல். கிட்டத்தட்ட வாழ்வா, சாவா யுத்தமாக இருந்தது. அதில்தான் தன் கட்சியையும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸையும் முக்கியமான இடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் சரத் பவார்.

காங்கிரஸின் தற்காலிகத் தலைவராகப் பதவி வகிக்கும் சோனியாவின் உடல்நிலை தீவிரப் பிரச்சாரத்துக்கு இடம் தரவில்லை, தலைமைப் பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்ற நிலையில், முன்னாள் காங்கிரஸ்காரரான சரத் பவார், தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

அவருடைய மகள் சுப்ரியா சுலே பாராமதி மக்களவை உறுப்பினராகக் குறிப்பிடும்படியாகவே செயல்பட்டாலும் மாநில மக்களுடனான தொடர்பு போதாமல் இருக்கிறது. பவாரின் சகோதரர் மகன் அஜீத் பவார், இன்னொரு உறவினர் பிரஃபுல் படேல் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் மனம் தளராமல் தேர்தலை எதிர்கொண்டார் பவார்.

சர்வ பலத்துடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏனைய மத்திய அமைச்சர்கள் புடைசூழ பாஜக கூட்டணி கடும் பிரச்சாரம் செய்தபோது, இந்த வயதிலும் சளைக்காமல், கொட்டும் மழையிலும் நனைந்தபடி பொதுக்கூட்டங்களில் பேசிய சரத் பவாருக்கு நல்ல இடங்களையே தந்திருக்கிறார்கள் மகாராஷ்டிர மக்கள்.

ஆட்சியமைக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறவில்லை என்றாலும், அது அடைந்திருந்த பின்னடைவுடன் கணக்கிட இது புத்தெழுச்சி. முதல்வர் போட்டிக்கு பாஜக - சிவசேனை இடையே மோதல் உண்டான சூழலில், தேசியவாத காங்கிரஸுக்குத் தூது அனுப்பியது பாஜக. ஒருவேளை பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டால் சிவசேனைக்கு ஆதரவளிக்கலாம் எனும் முடிவு நோக்கி நகர்ந்தது காங்கிரஸ்.

ஆனால், பவார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார், மக்கள் எதிர் வரிசையில் செயலாற்ற அனுப்பியிருக்கிறார்கள்; அங்கிருந்தே செயல்படுவோம் என்று. ஒற்றைமயமாக்கல் ஆட்சிக்கு எதிரான அவருடைய உறுதியான பயணம் தொடர்கிறது. பாஜக - காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே இதில் செய்தி இருக்கிறது, மாநிலத்தில் வலுவான தலைவர் இருந்தால் மட்டுமே தேசியக் கட்சிகளாலும் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதே அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x