Published : 29 Oct 2019 08:09 am

Updated : 29 Oct 2019 08:09 am

 

Published : 29 Oct 2019 08:09 AM
Last Updated : 29 Oct 2019 08:09 AM

பணக்காரர்கள் ஏன் சம்பாதிப்பதை நிறுத்துவதே இல்லை? 

why-the-rich-don-t-stop-earning

அலெக்ஸ் வில்லியம்ஸ்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், “பெருங்கோடீஸ்வரர்கள் (பில்லியனர்) இருக்கவே கூடாது” என்று கடந்த மாதம் கூறினார். அமெரிக்காவில் காணப்படும் ஏழை-பணக்காரர் வேறுபாடு என்பது, “தார்மீகரீதியிலும் பெருளாதாரரீதியிலும் பேரவலம்” என்று அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் விவாதத்தின்போது அவர் கூறினார். “யாருமே பெருங்கோடீஸ்வரர்களைப் பாதுகாக்க விரும்பவில்லை. பெருங்கோடீஸ்வரர்கள்கூடப் பெருங்கோடீஸ்வரர்களைப் பாதுகாக்க விரும்புவதில்லை” என்றார், இன்னொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆமி க்ளோபுசார்.


இந்தச் சிந்தனை பொதுவாக உலவிக் கொண்டிருக்கும் ஒன்றுதான். இந்திய மதிப்பில் 4.9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான மார்க் சக்கர்பெர்க் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கத் தயாராக இருக்கிறார். “ஒரு மனிதர் எவ்வளவு பணத்தைக் கொண்டிருக்கலாம் என்பதற்கான துல்லியமான எல்லைக்கோடு என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை” என்று தன் நிறுவன ஊழியர்களுடனான நேர்காணலில் தெரிவித்தார். “ஆனால், ஒருகட்டத்தில் அவ்வளவு பணத்தை வைத்திருக்கும் தகுதி யாருக்குமே இல்லை” என்கிறார்.

திகட்டாத செல்வம்

எனினும், செல்வச் செழிப்பில் திளைத் திருப்பவர்களுக்கு அளவற்ற செல்வம் திகட்டவேயில்லை. அது ஏன் என்று கோடீஸ்வரர் அல்லாத, சாதாரண மக்கள் வியக்கிறார்கள். சமூகத்தில் கோடீஸ்வரர்களுக்கு அடுத்த படிநிலையில் உள்ளவர்களில் வயதானவர்களைப் போல் இல்லாமல், பணக்காரர்கள் அதிக நேரம் உழைக்கிறார்கள், சமூக உறவுகளுக்குக் குறைந்த நேரமே செலவிடுகிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், பல கோடி டாலர்களுக்குச் சொந்தக்காரருமான டிம் குக் தான் காலை 3.45 மணிக்கு எழுந்திருப்பதாகக் கூறுகிறார். போட்டி நிறுவனங்கள் மீதான தாக்குதலைத் தொடுப்பதற்கு இப்படி சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.

டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரும் ரூ.1.6 லட்சம் கோடி சொத்து வைத்திருப்பவருமான இலான் மஸ்க் வாரத்துக்கு 120 மணி நேரம் உழைக்கிறார். இதை, 80 அல்லது 90 மணி நேரமாகக் குறைத்தால் தனக்கு வெற்றியே என்கிறார். பணக்காரர்கள் தொடும் அனைத்தும் பணமாகின்றன. ஆனால், தற்போது கொழுந்துவிட்டெரியும் பணத்தீக்கும் பொருளாதாரப் படிநிலையில் கீழே உள்ள 50%-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் 2003-ல் கொண்டிருந்ததைவிட 32% குறைவாகவே சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள். உச்சியில் உள்ள ஒரு சதவீதத்தினர் கடந்த தசாப்தத்தில் 85% சொத்துகளைப் பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றில் முதலீடுசெய்து அவை பெரிய அளவில் பல்கிப் பெருகக் கண்டிருக்கின்றனர்.

அந்தோணியோ கார்ஸியா மார்ட்டினெஸ் தனது புதிய நிறுவனத்தை ட்விட்டரிடம் விற்றார். ஃபேஸ்புக்கில் உற்பத்திப்பொருள் மேலாளராக இருந்தவர் அவர். “புதிய பொழுதுபோக்கை நீங்கள் ஏன் உருவாக்கிக்கொள்வதில்லை, அறப்பணிகள் செய்யலாமே என்று பணக்காரர்களிடம் மக்கள் கேட்கிறார்கள். எனினும், பெரும்பாலானவர்களால் அது முடிவதில்லை. அவர்கள் முதலாளித்துவத்திலிருந்து அப்பாற்பட்ட அர்த்தத்தைப் பெறுகிறார்கள். பணம் இல்லையென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்” என்கிறார் மார்ட்டினெஸ்.

ஆறாவது கியர்

வாழ்க்கை முறையைச் சரிப்படுத்துதல் தொடர்பான புத்தகங்களை எழுதுபவர் டிம் ஃபெர்ரிஸ். அவர் சிலிக்கான் பள்ளத்தாக்கில் நாயக முதலீட்டாளராக ஒரு தசாப்தம் இருந்தவர். அதிபணக்காரர்களைப் பற்றி இவர் கூறும்போது “அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் வேலையையும் ஆறாவது கியரில் செலுத்திக்கொண்டிருப்பவர்கள்” என்கிறார். தொடர்ச்சியான வேலை இல்லையென்றால், இருத்தல் என்ற இயற்கையை நாம் எதிர்கொண்டாக வேண்டுமல்லவா? “வேலை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை அவர்கள் கடந்த பின் அவர்கள் பொருளாதார நிலையைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அந்நிலையில், குறைந்த கியர்களுக்கு மாறுவது அவர்களுக்குச் சிரமம்” என்கிறார் ஃபெர்ரிஸ். “இடைவெளியை நிரப்புவதற்கு வேட்கை மிகுந்த திட்டங்கள் இல்லையென்றால், அங்கே பெரும்பாலும் வெறுமை தோன்றி, நம்மால் தவிர்க்க முடியாத கேள்விகளைக் கொண்டுவந்துவிடும்” என்கிறார் அவர். ஒருவகையில் இது கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் போய்க் கொண்டிருக்கிறது. “அரசர்களையும் சோம்பேறிப் பணக்காரர்களையும் தூக்கியெறிந்து நாம் உருவாக்கிய நாடு அமெரிக்கா. இந்த மாபெரும் செயல்பாடு அமெரிக்கர் என்றால், என்ன என்பது குறித்துப் பொதுமக்கள் கொண்டிருக்கும் கருத்துகளில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது” என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான மார்கரெட் ஓ’மாரா.

ஹார்வார்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் நான்காயிரம் கோடீஸ்வரர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. இவர்களில் 10 லட்சம் டாலர் சொத்து கொண்டவர்களைவிட 80 லட்சம் டாலர் சொத்து கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஹார்வார்டு கண்டறிந்திருக்கிறது. 2006-ல் நடத்தப்பட்ட பிரபல ஆய்வொன்றில், பணக்காரர்கள் தங்கள் முழு மனதோடு அல்லாமல் கட்டாயத்தின் பேரிலேயே பல விஷயங்களையும் செய்வதில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பது தெரியவந்தது. ஏன் இதைத் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்கிறார்கள்? முன்பு எப்போதையும்விட அதிக செல்வம் கொண்ட செல்வந்தர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது இதற்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

போட்டியால் இயங்குபவர்கள்

“நிறைய பேருக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால், இன்னும் சில வகை மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் வைத்திருந்தாலும் இன்னும் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அவர்களை நான் ‘புள்ளிக்காரர்கள்’ என்று அழைப்பேன். அதாவது, புள்ளிகளை அதிகரித்துக்கொண்டே போக வேண்டும் என்பவர்கள். போட்டியால் மட்டுமே முற்றிலும் இயங்குபவர்கள் அவர்கள்” என்கிறார் சிஎன்பிசி தொலைக்காட்சியைச் சேர்ந்தவரும் நூலாசிரியருமான ராபர்ட் ஃப்ராங்க்.

“ஆரக்கிள் இணை நிறுவனரும் பெருங்கோடீஸ் வரருமான லாரி எலிஸனை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ், பால் ஆலன் ஆகியோரைக் கண்டால் பொறாமையாக இருக்கும். ஆகவே, பால் ஆலன் தனது 400 அடி படகை உருவாக்கும்போது அந்த வேலை முடியும் வரை லாரி எலிஸன் காத்திருப்பார். பிறகு, 450 அடியில் ஒரு படகை உருவாக்குவார். தான் முதல் ஆளாக வரும்வரை அவரால் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது” என்கிறார் ஃப்ராங்க். “குமிழிகளுக்கு உள்ளே வாழ்வதற்குப் பணக்காரர்களுக்குத் தங்கள் உயரத்துக்கேற்ப அதீதங்கள் தேவைப்படுகின்றன” என்கிறார் மனநல நிபுணர் ஸ்டீவன் பெர்கிளாஸ்.

“நீங்கள் மதுவுக்கு அடிமையானவர் என்றால் ஒரு கோப்பை, இரண்டு கோப்பை, ஐந்து கோப்பை, ஆறு கோப்பை தேவைப்படும் போதையை உணர்வதற்கு. ஆனால், உங்களுக்கு 10 லட்சம் டாலர்கள் கிடைக்கின்றன என்றால், உங்களை ஒரு அரசர் போன்று நீங்கள் உணர ஒரு கோடி டாலர்கள் தேவைப்படும். பணம் என்பது ஒரு போதை வஸ்து” என்கிறார் அவர்.

எல்லையற்ற வாய்ப்பு, அதீதத் தனிமை. இந்தப் பணக்காரர்களுக்கு ஏற்கெனவே நிகழ்காலம் சொந்தமாக இருக்கிறது. வாங்குவதற்கு வேறென்ன இருக்கிறது, நாளை என்ற ஒன்றைத் தவிர; அதற்குப் பிறகு நாளை மறுநாள் என்ற ஒன்று தவிர?

தி நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை


பணக்காரர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்பெர்னி சாண்டர்ஸ்திகட்டாத செல்வம்ஆறாவது கியர்இந்திய மதிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x