Published : 25 Oct 2019 08:23 am

Updated : 25 Oct 2019 08:24 am

 

Published : 25 Oct 2019 08:23 AM
Last Updated : 25 Oct 2019 08:24 AM

பட்டாசுகள் புழக்கத்துக்கு வந்த கதை 

the-story-of-circulation

இரா.முத்துநாகு

வரலாற்றுக்குப் பல்வேறு பக்கங்கள் உண்டு என்பார்கள். அந்த வரலாற்றின் பக்கங்களில் மக்களிடம் புழங்கும் கதைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. எதிரிகளை வீழ்த்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட வெடிகள், எப்படி கொண்டாட்டத்தின் பகுதியாக மக்களின் கைகளுக்கு வந்துசேர்ந்தது என்பதை மக்களின் கதைகள் வழி பார்ப்போம்.


கிபி 4 முதல் 9-ம் நூற்றாண்டு வரை பாறைகளில் குடைந்த குடைவரைகள், அதனையடுத்து 19-ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ள கோயில்கள், ஒற்றைக்கல் தூண்கள், ஒரு பாறையில் குடையப்பட்ட காகதீயப் பேரரசின் தலைமையிடமான வாரங்கல் அரண்மனை இவையெல்லாம் வெடியில்லாமல் சாத்தியமில்லை. உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பைக் காய்ச்சி தரையில் குழி தோண்டி ஊற்றினால் கெட்டியாகும். அந்தக் கெட்டியான உப்பு உருண்டையைத் தண்ணீரில் போட்டாலோ அல்லது அதன் மீது தண்ணீரை ஊற்றினாலோ வெடிக்கும். இப்படித்தான் நம் முன்னோர்கள் பாறைகளைக் குடைந்தார்கள் என்று சொல்கின்றன சில ஆய்வுகள்.

வியப்பான வரலாறு

வெடி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களான கந்தகம், பாஸ்பரஸ், பாதரசத்தைக் கொண்டே பீரங்கிகளுக்குக் குண்டுகள் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் மத்திய சீனம், திபெத், பலுஜிஸ்தான், ஆப்கன் பகுதியிலேயே கிடைத்தன. இந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்துகளாகவும் பயன்படுகின்றன. இவற்றை உயிரைக் குடிக்கும் வெடியாகத் தயாரிக்கும் தொழில்நுட்பம் 1620-களில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 1655 வாக்கில் உலகம் முழுவதும் பரவியது. அவை பாதுகாப்புப் படைகளின் கைக்கு வந்து மிரட்டின. பெரும் யானைப் படைகளுடன் வலிமையாக இருந்த டெல்லி சுல்தானியர்களை பீரங்கிகளின் உதவியோடுதான் பாபர் வெற்றிகொண்டார் என்பது வரலாறு.

கடல் வழி மார்க்கமாக மேற்குக் கடற்கரை வந்தடைந்த வாஸ்கோடகாமா, வெடி ஆயுதங்களைக் கொண்டே கொச்சியைச் சரணடைய வைத்தார். கந்தகம் மூலம் வெடி தயாரிக்கும் தொழில்நுட்பம் வந்த பின்பு, வெடிமருந்து வியாபாரத்தை அதிக அளவில் ஆங்கிலேயர்கள் கையில் எடுத்துக்கொண்டனர் என்கிறது ஜெயசீலன் ஸ்டீபனின் ஆய்வு. ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்காகப் பயன்பட்ட வெடி எப்படி சிறுவர்கள் கையில் விளையாட்டுப் பொருளாக மாறியது என்பது வியப்பான வரலாறுதான்.

விஜயநகர ஆட்சியிலே துப்பாக்கி இருந்தது என்பதை 1522-ல் வரையப்பட்ட விஜயநகரத் தலைமையிடமான ஹம்பி விருபாக்‌ஷி கோயிலின் விதான ஓவியம் தெளிவுபடுத்துகிறது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியின் தளகர்த்தரான மன்னன் திருமலை நாயக்கர் காலத்திலே வெள்ளையர்களை எதிர்க்க வெடி ஆயுதம் பெருவாரியாகக் குவிக்கப்பட்டது.

இந்த வெடி ஆயுதத்தைப் பயன்படுத்த இஸ்லாமியர்களை மட்டுமே அனுமதித்தது நாயக்கர் அரசு. இதனால், படைகளுக்குத் தேவையான குதிரைகளை அரபு தேசத்திலிருந்து இறக்குமதி செய்ததுடன், வெடி இயக்கத் தெரிந்த வீரர்களையும் இறக்குமதி செய்தனர். பன்னெடுங்காலம் தமிழகக் கடல் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐரோப்பியர்கள், நாயக்கர் அரசுக்குக் கட்டுப்படாமல் இருந்ததற்கும் அவர்களிடம் அதிக அளவு வெடிமருந்துகள் இருந்ததுதான் காரணம்.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், முகலாயர்கள், திப்பு சுல்தான் இவர்களுடன் நாயக்கப் பிரதிநிதிகளும் தமிழகப் பாளையக்காரர்கள் என பலரும் ஆட்சிசெய்தார்கள். இந்தக் காலகட்டத்தில் முகலாய சுல்தானின் பிரதிநிதியான ஆற்காடு வாலாஜா மன்னரின் பிரதிநிதி முகமது யூசூப்கான் மதுரையை ஆண்டார். இவரைப் போலவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சேலம், ஈரோடு, கோவை பகுதிகள் மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட திப்பு சுல்தானின் ஆளுமையின்கீழ் இருந்தன. நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியால் தமிழகத்தின் தென்பகுதி பாளையங்கள் தன்னாட்சி செலுத்தி ஆட்சியைப் பிடித்தன.

மக்களிடம் வந்துசேர்ந்தது

மதுரை அரசுக்குக் கப்பம் கட்ட மறுத்த நெற்கட்டுசேவல் பூலித்தேவன், சிவகிரி போன்ற பாளையங்கள் மீது முகமது யூசூப்கான் படையெடுத்தார். தன்னாட்சி செய்த சிவகங்கை அரசு, முகமது யூசூப்கானை எதிர்த்து விஜய சொக்கநாத திருமலை நாயக்கரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முனைந்தது. இவர்கள் மீதும் முகமது யூசூப்கான் படையெடுத்தார். இதை நாயக்கர் மற்றும் சேது சீமை வரலாற்று நூல்கள் மூலம் அறிய முடிகிறது.

முகமது யூசூப்கானை எதிர்கொள்ள திப்பு சுல்தானின் ஆதரவைப் பாளையப்பட்டு மன்னர்கள் நாடினார்கள். இந்தக் காலத்தில் அதிகமாகக் கொள்ளை நடந்தது. தனது எல்லையில் உள்ள மக்களைக் கொள்ளையர்களிடமிருந்து காத்திட மக்களைப் படை வீரர்களாக ஆக்கினார் முகமது யூசூப்கான். இந்த சமயத்தில் ‘கைமருந்தாக’ மக்களுக்கு வெடிமருந்துகள் வழங்கப்பட்டன.

அதிக பாதரசம் சேர்த்த வெடிமருந்தை இரும்புக் குழாயில் போட்டு அதிகம் கிட்டிக்காமல் தீ வைத்தால் தீப்பிழம்பைக் கக்கும். (பூந்தொட்டி, பூ மத்தாப்பூ இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது.) எதிரிகள் வருவது தெரிந்தால் இந்த வெடியைப் பற்ற வைத்தார்கள். தீப்பிழம்பைப் பார்க்கும் படைகள் வெடி இருப்பதாக நினைத்துப் பயந்து ஓடும். இது ஓரளவுக்கு மக்களைக் காத்ததால் முகமது யூசூப்கானுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. இந்த ஆதரவைத் தக்கவைக்க மக்களுக்கு வெடிமருந்தைத் தயாரிக்கும் முறையைச் சொல்லிக்கொடுக்க உத்தரவிட்டார்.

முகமது யூசூப்கான் தனது எல்லையான மேலூர் நாடு, வெள்ளளூர், சூரக்குடி நாடுகளில் ஊருக்கு வெளியிலுள்ள கோயில்களில் வெடி வெடித்து பாளையக்காரப் படைகளுக்குப் பயம்காட்ட ஆட்களை நியமித்தார். வெடி வெடிப்பவர்களுக்கு நிலங்களை மானியமாகக் கொடுத்த செய்திகள் செவிவழிச் செய்தியாக இன்றளவும் மேலூர் பகுதியில் உலவுகின்றன. உயிர் பறிக்காத இந்த வெடிக்கு ‘வெத்துவெடி’ என்று மக்கள் பெயரிட்டார்கள். எதுவும் செய்யாத ஆளை ‘வெத்துவேட்டு’ எனக் கிண்டலாகச் சொல்லும் வழக்கம் இன்றும் கிராமங்களில் இருக்கிறது என்கிறார் தொ.பரமசிவன்.

இதே காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தை ஆண்ட திப்பு சுல்தான் வெள்ளக்கோயிலிலுள்ள செல்லாண்டியம்மன் கோயில், பொங்களூரின் பொன்னிவாடி கிராமத்திலுள்ள வீரக்குமார், கருப்பசாமி கோயில்களிலுள்ள மந்தைகளில் வெடி வெடிப்பதற்காக ஆட்களை நியமித்தார். அவர்கள் ‘பொட்டிலி’ என்று அழைக்கப்பட்டார்கள். பொட்டிலிகளுக்குக் காணிக்கை கொடுக்கவும் மக்களுக்கு ஆணை பிறப்பித்தார் அவர். இதுதான் காலப்போக்கில் வெடி காணிக்கையாக வந்திருக்கும் என்கிறார் புலவர் ராசு. இப்படித்தான் அரசப் படைகளிடமிருந்த வெடி என்ற பயங்கரமான ஆயுதம் சாமானிய மக்களிடம் வந்தடைந்தது.

வணிகமாக மாறிய வெடி

அன்றைய காலகட்டத்தில் விவசாயம் செழித்தோங்கியிருந்தது. விளைச்சலை அதிகரிக்கக் கிணறு வெட்டுவதற்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வாரிவழங்கினார்கள். இதனால்தான், தமிழகத்திலே அதிகக் கிணறுகள் இருக்கும் பகுதியாகக் கொங்கு மண்டலமும், அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலமும் இருக்கின்றன. வேளாண்மைக் குடிகளிடம் வெடி சகஜமாகப் புழங்கியதால் இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திய பிரிட்டிஷார், வெடிமருந்துக்கென தனிச் சட்டமெல்லாம் கொண்டுவந்தனர்.

நாயக்கர் ஆட்சியின்போது தசரா பண்டிகையின்போதும், துர்க்கை வழிபாடான நவராத்திரி விழா முடிந்த பின்பு தீபாவளி நாளிலும் வெடிகளை வெடித்து அரண்மனைவாசிகள் மகிழ்ந்தனர். இதேபோல, நாயக்கர் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியேறும்போது வெடி வெடிக்கும் நிகழ்வும் நடந்தது. நாயக்கர் மன்னர்களின் வருகையின்போது கோயில்களில் வெடி வெடித்து வரவேற்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான கோயிலில் வெடித்த வெத்து வெடிகளே காலப்போக்கில் திருவிழாக்களில் வெடிக்கும் பழக்கமாக உருமாறியது.

இஸ்லாமிய அரசின் வெடிப்படை வீரர்கள் இறந்தபோது வெடி வெடித்து துக்கம் அனுசரித்தனர். இன்றும் அரசியல் பிரமுகர்கள், படைவீரர்கள் இறந்தால் வெடி வெடித்து சோகம் கடைப்பிடிக்கப்படுவது இதன் நீட்சியே. அரண்மனைகளில், கோயில் திருவிழாக்களில் வெடித்த வெடிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதைக் கணக்கிட்ட பிரிட்டிஷார், வெடியில் நல்ல வருவாய் கிடைப்பதை அறிந்து, அதைப் பெரும் வணிகமாக மாற்றினார்கள். ஒரு நூற்றாண்டுக்குள் அந்த வணிகம் ராக்கெட் வேகத்தில் முன்னேறியிருக்கிறது.

- இரா.முத்துநாகு,

‘சுளுந்தீ’ நாவலாசிரியர்.
தொடர்புக்கு: rmnagu@gmail.com


பட்டாசுகள்வரலாறுபுழக்கத்துக்கு வந்த கதைStory of circulationCirculationவியப்பான வரலாறுவணிகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x