Published : 24 Oct 2019 08:37 AM
Last Updated : 24 Oct 2019 08:37 AM

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் 

செந்தில் ஆறுமுகம்

ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 29 அன்று வெளியிட்ட உத்தரவின் அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை: “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி இழந்த பிரேம் சிங் தமாங்கின் தகுதி இழப்புக் காலம் ஓராண்டு, ஒரு மாதமாகக் குறைக்கப்படுகிறது.” இந்தியா முழுமைக்கும் தாக்கம் ஏற்படுத்தவுள்ள இந்த உத்தரவு சுமந்துவரும் அரசியல் கூடுதல் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வுத்தரவின் பின்னணி என்ன? 2019 ஏப்ரலில் நடந்த தேர்தலில், சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 17 தொகுதிகளையும், ஒரே மக்களவைத் தொகுதியையும் வென்று ஆட்சியைப் பிடிக்கிறது தமாங்கின் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி. தேர்தலில் போட்டியிடாத தமாங் முதல்வராகிறார். அவர் போட்டியிடாததற்குக் காரணம் இருக்கிறது.

தேர்தலில் போட்டியிடாதவர்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து, இந்தியாவில் நீண்ட காலம் (1994-2019) முதல்வராக இருந்தவர் சிக்கிம் மாநிலத்தின் பவன் குமார் சாம்லிங். இவரின் சிக்கிம் ஜனநாயகக் கட்சியில் 1994-1999 ஆட்சிக்காலத்தில் கால்நடைத் துறை அமைச்சராக இருந்தவர்தான் தமாங். அப்போது கால்நடைகள் வாங்கும் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பிலான வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை 2017-ல் விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்ற காலகட்டத்திலேயே, தாய்க் கட்சியிலிருந்து வெளியேறி, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) என்ற தனிக் கட்சி தொடங்கினார். சிறைவாசம் முடித்து ஆகஸ்ட் 2018-ல் வெளிவந்தார் தமாங்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பதால் 2024-ம் ஆண்டுவரை தமாங் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், 2019 சட்டமன்றத் தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறது. தேர்தலில் போட்டியிடாத தமாங் முதல்வராகிறார். இப்படிப் பதவியேற்றால், அடுத்த ஆறு மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்கிறது சட்டம். எனவே, ஆறு ஆண்டுகள் என்று உள்ள தனது தகுதி இழப்புக் காலத்தைக் குறைக்கக் கோரி, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்புகிறார் தமாங்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுதான் தகுதி இழப்பை ஓராண்டு, ஒரு மாதமாகக் குறைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். சட்டப்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 11-ன் கீழ் தகுதி இழப்புக் காலத்தை இப்படிக் குறைப்பதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், சிக்கிமில் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான விமர்சனம் இதற்கு எழுந்தது. ஏன்? ஏனென்றால், இடையில் சிக்கிமில் நடந்த காட்சி மாற்றங்கள் அப்படி!

பாஜக பகடையாட்டம்

சிக்கிமில் பாஜக செல்வாக்கு மிக்க கட்சி கிடையாது. 25 ஆண்டு காலம் அங்கு அசைக்க முடியாத நிலையில் இருந்தவர் பவன் குமார் சாம்லிங்; அவருடைய சிக்கிம் ஜனநாயக முன்னணி, இம்முறை சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவிடம் ஆட்சியை இழந்தாலும் 47.63% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. ஆளுங்கட்சி 47.03% வாக்குகளைப் பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி வென்ற 15 தொகுதிகளில் இரு தொகுதிகள் ஒரே நபர்கள் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தொகுதிகள்.

ஆகையால், 13 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அது அமர்ந்தது; ஆனால், தேர்தல் முடிந்த வேகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை பாஜக தன் பக்கம் தூக்கியது; தொடர்ந்து தன் பங்குக்கு அதே கட்சியைச் சேர்ந்த மேலும் 2 உறுப்பினர்களைத் தூக்கியது ஆளும் ‘சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா' (எஸ்கேஎம்). ஆக, பவன் குமார் சாம்லிங் கட்சியில் இன்று அவர் மட்டுமே ஒரே உறுப்பினர்; ஆனால், தேர்தலில் வெறும் 1.6% வாக்குகளைப் பெற்ற பாஜக 10 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சி!

இப்படிப்பட்ட சூழலில்தான் இடைத்தேர்தல் அங்கு வந்தது. அக்டோபர் 21 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தங்களுடன் கூட்டணிக்கு ஆளுங்கட்சியை அழைத்த பாஜக, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மூன்றில் இரண்டு தொகுதிகளைத் தனக்குக் கேட்டது. ஆச்சரியம் என்ன தெரியுமா? ஆளுங்கட்சி இதற்கு ஒப்புக்கொண்டு ஒதுக்கியது.

அதாவது, 47% வாக்கு வங்கியுடன் ஆட்சியையும் கையில் வைத்திருக்கும் ஒரு கட்சி வெறும் 1.6% வாக்குகளைப் பெற்ற, இதுவரை சிக்கிமில் ஒருமுறைகூட வென்றிராத ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு தொகுதிகளை ஒதுக்கியது!
இந்த அறிவிப்பு வெளியான நாள் செப்டம்பர் 28, சனிக்கிழமை. முதல்வர் தமாங், தேர்தலில் போட்டியிட வழிவகுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியான நாள் செப்டம்பர் 29. தமாங் வேட்புமனு தாக்கல் செய்தது செப்டம்பர் 30. வேட்புமனு தாக்கல் செய்ய அன்றைய நாள்தான் இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில்தான் பாஜக கண்ணசைவில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை அங்குள்ள எதிர்க்கட்சிகள் எழுப்பின.

ஏன் இது ஒரு தேசியப் பிரச்சினை?

பாஜக எதிர்கொள்ளும் இதே குற்றச்சாட்டை எதிர்கொள்ளவில்லை என்றாலும், இத்தகைய குற்றச்சாட்டை – அதாவது மத்தியில் பெரும்பான்மை பலத்திலுள்ள ஆளுங்கட்சியாக இருக்கும்போது தேர்தல் ஆணையத்தைக் கண்ணசைவுக்கு ஆட்படுத்துவது – காங்கிரஸும் எதிர்கொண்டிருப்பதை இங்கே நினைவில் கொண்டுவர வேண்டும். ஆக, பிரச்சினை பாஜக அல்லது காங்கிரஸ் தொடர்பானது மட்டும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், அரசியல் அழுத்தங்களுக்கு அது அடிபணியாத தன்மை தொடர்பானதும்கூட!

இதற்கு என்னதான் தீர்வு? தேர்தல் ஆணைய சீர்திருத்தங்களைத் தூசுதட்டி எடுத்துச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, மூன்று மாற்றங்கள் உடனே அவசியமாகிறது. மத்தியில் ஆளுங்கட்சியானது, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரை நியமிக்கும் தற்போதைய முறை மாற்றப்பட வேண்டும். ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி-உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளடங்கிய குழுவானது, தலைமை ஆணையரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2015-ல் வெளியான மத்திய சட்ட அமைச்சகத்தின் 255-வது அறிக்கை, இதனை வலியுறுத்துகிறது.

இம்முறையானது நடைமுறைக்கு வந்தால் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மேலும் அதிகரிக்கும். அதேபோல், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தித்தான் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கம் செய்ய முடியும் என்ற நடைமுறையானது மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்குப் பொருந்துவதாக இல்லை. ஆகவே, இந்த இரு தேர்தல் ஆணையர்களும் மத்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டிய சூழல் எழுகிறது. தலைமை ஆணையரை நீக்குவதற்கு உள்ள நடைமுறையை, மற்ற இரு ஆணையர்களுக்கும் அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கட்சியின் பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை, 1988 முதல் நிலுவையில் உள்ளது. இது நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டின் வருமானவரித் துறை, மத்தியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என்று ஒவ்வொரு அமைப்பும் இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல; மேலும், இந்தியாவின் கூட்டாட்சிப் பண்பை அது சீர்குலைப்பதோடு கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்துவிடும்!

தொடர்புக்கு: senth.aru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x