

நவீனா
திருமண நிகழ்ச்சிகளை மேலாண்மை செய்யும் நிறுவனம் ஒன்று, தனது வலைதளத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்குத் தான் சேவையளிக்கும் பொருட்களின் பட்டியல், விலை, படங்களைப் பதிவேற்றியிருந்தது. சாரட் வண்டி, அம்பாரி யானை, மேடை அலங்காரப் பொருட்கள், இதர பல சாதனங்களினூடாக இளஞ்சிவப்பு உடையணிந்த நான்கு பெண்கள் பிரகாசமான புன்னகையுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படமும், மற்ற பொருட்களின் புகைப்படங்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது. விலைப் பட்டியலிலும் ‘ஃப்ளவர் கேர்ள்ஸ்’ எனும் தலைப்பின் கீழ் அவர்களுக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகைப்படம் பற்றிய கூடுதல் தகவலைக் கூறுமாறு அந்த நிறுவனத்தின் முகவரிடம் விசாரித்தபோது, “இந்த நான்கு பெண்களையும் திருமண நிகழ்வின்போது நீங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் விருந்தினர்களை வரவேற்பது, கையில் மலர்கள் வைத்துக்கொண்டு மணமக்களுடன் புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்வார்கள். கல்யாண வீட்டில் அழகான பெண்கள் இருப்பதை ஒரு அந்தஸ்தாகப் பலரும் கருதுகிறார்கள்” என்றார்.
1962-ல் வெளிவந்த சில்வியா பிளாத்தின் ‘தி அப்பிளிகேண்ட்’ (விண்ணப்பதாரர்) என்னும் கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பதாரர் ஒரு ஆண். ஏதோ ஒரு பொருளை வாங்குவதற்காகக் கடை ஒன்றுக்கு வருகைபுரிந்திருக்கும் அந்த நபர், விற்பனையாளரிடம் அந்தப் பொருள் குறித்த கேள்விகளைக் கேட்டவண்ணம் நகர்ந்து செல்லும் கவிதையின் போக்கில், ஒரு புள்ளியில் அந்தப் பொருள் ஒரு பெண்தான் என்பதும், திருமணச் சந்தையில் மனைவி என்னும் பொருளை அந்த நபர் வாங்க வந்திருப்பதாகவும் வாசகர்கள் உணரும் விதமாகக் கவிதையை வடித்திருப்பார் சில்வியா.
பெண்களைச் சந்தைப் பொருளாகப் பார்ப்பதையும், அதனால் வருங்காலத்தில் நிகழவிருக்கும் அவலங்களையும் உணர்த்தும்படி எழுதப்பட்ட அந்தக் கவிதை, பெண் சார்ந்த படைப்புகளில் முக்கிய கவனம் பெற்ற ஒன்று. இந்தக் கவிதை இயற்றப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெண்களின் சமூக நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதையே இப்போது மலர்ப் பெண்களின் புகைப்படமும், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் விலையும் உணர்த்துகின்றன.
வறுமை, குடும்பச் சூழல் என ஏதோவொரு காரணத்தால் இத்தகைய சமூகக் கதாபாத்திரங்களை ஏற்று நடக்கும் பெண்கள் ஒருகட்டத்தில், சந்தையில் விற்பனை செய்யப்படும் சோப்பு, சீப்புக்கு நிகரான பொருளாகவே மாறிவிடுகின்றனர். பெண்களைத் தரம்தாழ்த்துவதில், அவர்களைக் காட்சிப் பொருளாக்கும் ஊடகங்களுக்கு, அவர்களை சந்தைப் பொருளாகக் கருதும் சமூகம் எந்த வகையிலும் சளைத்ததில்லை. அந்தப் புகைப்படத்தில் தோற்றமளிக்கும் பெண்களின் ஒளிப்பட செயற்கைப் புன்னகை, அவர்களது நிஜ வாழ்விலும் அவர்களுக்கு வாய்க்கும்படி சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
- நவீனா, உதவி ஆங்கிலப் பேராசிரியர்.
தொடர்புக்கு: writernaveena@gmail.com