

எதிர்மறையான கருத்துக்கணிப்பு வாக்குகள், பதவி விலகக் கோரும் தீர்மானம் என்றெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தாலும், ட்ரம்ப் ஒரு முக்கியமான தேர்தல் களத்தில் மற்றவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்: அதுதான் டிஜிட்டல் பிரச்சாரக் களம்.
பிராட் பார்ஸ்கேலின் மேலாண்மையின் கீழ் ட்ரம்ப்பின் மறுதேர்தல் இயந்திரம் ஜனநாயகக் கட்சியின் எந்த வேட்பாளரைக் காட்டிலும் மிக அதிகமாகப் பல கோடிக்கணக்கான டாலர்களை அதிநவீன சிற்றிலக்குத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறது. ஃபேஸ்புக்குக்காகவும் கூகுளுக்காகவும் ட்ரம்ப் செப்டம்பர் 19 வரை இந்திய மதிப்பில் ரூ.113 கோடி செலவிட்டிருக்கிறார். ஆனால், ஜனநாயகக் கட்சியின் உச்ச வேட்பாளர்கள் மூன்று பேருக்கும் சேர்த்தே ரூ.110 கோடிதான் இதற்குச் செலவாகியிருக்கிறது.
ட்ரம்ப்பின் செயல்முறைகளெல்லாம் 2016-லிருந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், அப்படி உருவாக்கி, அதன் மூலம் வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய தகவல்களையும் செய்திகளையும் மின்னணு தகவல்தொடர்புக்கு உரிய சாதனங்களையும் உருவாக்குவதுதான் அந்தச் செயல்முறைகளின் வேலை. ட்ரம்ப் தற்போது ஆட்சியில் இருப்பவர்; அவருக்குப் பிரதானமான எதிராளி என்று யாரும் இல்லை. இதெல்லாம் அவருடைய அணியினருக்கும் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவுக்கும் சாதனங்களை உருவாக்கவும் தரவுகளைத் திரட்டவும் மாதிரிகளைப் பரீட்சித்துப் பார்க்கவும் செய்திகள், தகவல்கள் அனுப்பவும், ஆதரவாளர்களை முடுக்கிவிடவும் மூன்று ஆண்டுகளை வழங்கின என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்த சாதகமான அம்சம் எப்படி இயங்குகிறது?
எம்ஏஐடிதான் இதற்கு அடிப்படை என்கிறார்கள். அதென்ன எம்ஏஐடி? செல்போன் விளம்பர அடையாள எண்தான் (mobile advertising id) அது. நமது எல்லா செல்போன்களும் தனித்துவமான செல்போன் விளம்பர அடையாளத்தைக் கொண்டுள்ளன. தேர்தல் பிரச்சாரம் செய்யும் கட்சிகள் இதைக் குறிவைக்கின்றன.
இதன் மூலம் வாக்காளர்கள் செல்போனின் தனித்துவ அடையாளத்தைக் கண்டுபிடித்து, அதனுடன் தொடர்புடைய தரவுகளை அள்ளிக்கொள்கின்றன. இந்த அளவுக்கு விரிவான தகவல்களைப் பெறுவதால் அதன் மூலம் விளம்பரங்கள், செல்போன் அழைப்புகள் மூலமாகவும், வீட்டுக்கே பிரச்சாரப் பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலமாகவும் வாக்காளர்களைக் குறிவைக்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியினரும் மிகப் பெரும் வாக்காளர் பட்டியல்களைப் பராமரித்து இற்றைப்படுத்தியும் (update) வருகிறார்கள். அவற்றில் கடன் அட்டைப் பயன்பாடு, பத்திரிகை சந்தாக்கள், கிளப்களுக்கு வைத்திருக்கும் பாக்கி, வேட்டை-மீன்பிடி உரிமங்கள் போன்ற தகவல்கள் எல்லாம் இருக்கும். இதன் மூலம் எந்த வேட்பாளரை, எந்த வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கணிக்க முடியும். எல்லாம் நம் செல்போனிலிருந்து எடுக்கப்படும் தகவல்கள்தான். இந்த உலகை நோக்கித்தான் நாம் போய்க்கொண்டிருக்கிறோம். இதில் தங்களிடம் உள்ள பணத்தால் பழம்பெரும் கட்சியான குடியரசுக் கட்சி, பல காத தூரம் முன்னால் இருக்கிறது என்கிறார்கள்.
அடுத்ததாக, சிற்றிலக்கு (micro-targetting). ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களுக்கு அருகில் உள்ள வாக்காளர்களை சமிக்ஞையின் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் இது. தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்களிக்கச் செல்லும்படி தூண்டும் செய்திகளை இதன் மூலம் அனுப்புவார்கள்.
நுகர்வோர் தரவுகள், மக்கள்தொகை அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் உத்தி இது. இதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் ஆர்வங்களையும், ஒரே மாதிரியான எண்ணங்களைக் கொண்ட குழுக்களையும் அடையாளம் கண்டு, அவர்களின் எண்ணங்களிலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும் உத்தி. இந்த இரு தரப்புப் போர் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
துரத்தப்படும் வாக்காளர்கள்
2004-ல் ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷின் மறுதேர்தலின் போதுதான் இந்தத் தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. குடியரசுக் கட்சி சார்பு மனநிலை கொண்டவர்களைத் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு ஈர்க்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. 2008-லும் 2012-லும் ஒபாமாவும் அவரது ஜனநாயகக் கட்சியினரும் அந்தத் தொழில்நுட்பத்தில் கரைகண்டு குடியரசுக் கட்சியை முந்தினர். இதன் மூலம் நன்கொடையாளர்கள், வாக்காளர்கள் போன்றவர்களிடம் எளிதாகச் சென்றுசேர்ந்தனர்.
இதுவே 2016-ல் காற்று திசைமாறி ட்ரம்ப் பக்கம் வீசியது. இதற்கு முக்கியக் காரணம், ட்ரம்ப் தனது டிஜிட்டல் செயல்பாடுகளுக்காக பிராட் பார்ஸ்கேலைத் தேர்ந்தெடுத்தது. 2016-ல் ஹிலாரி கிளிண்டனும் ட்ரம்ப்பும் ஜூன் - நவம்பருக்கு இடையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக்குக்காகப் பெருமளவு செலவழித்திருக்கிறார்கள் என்று ஃபேஸ்புக்கின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. ஹிலாரி 66 ஆயிரம் வேறுபட்ட விளம்பரங்களைப் பரீட்சித்துப் பார்த்தார் என்றால், ட்ரம்ப் 59 லட்சம் வேறுபட்ட விளம்பரங்களைப் பரீட்சித்துப் பார்த்தார்.
ட்ரம்ப்பின் பிரச்சார பாணி
ட்ரம்ப்பின் அசாதாரணமான பேச்சு உருவாக்கிய அதிர்ச்சியையும் வியப்பையும் மக்களுக்குக் கடத்துவதுதான் தங்கள் பிரச்சார பாணி என்கிறார் பார்ஸ்கேல். தங்கள் பிரச்சாரத்தின் முரண்நகையையும் பார்ஸ்கேல் தொட்டுக்காட்டுகிறார். “இந்த சமூகத் தளங்களெல்லாம் அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் உள்ள மிகவும் தாராளவாத சிந்தனை கொண்டவர்களால் உருவாக்கப்பட்டன. நாங்களோ அவற்றைக் கொண்டு மரபுவாதச் சிந்தனைகளை எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது என்பதைக் கண்டறிந்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்” என்கிறார்.
கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை ட்ரம்ப்புக்கு சிறுபான்மை வாக்குகளே கிடைத்திருக்கின்றன. நிஜத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை அவர் பெறுவது தற்போதுள்ள சூழலில் அரிதாக இருக்கிறது. இந்தச் சூழலில் அவர் தனது வாக்கு வங்கியை மட்டும் சார்ந்திருக்க முடியாது. அவர் சார்புள்ள சிந்தனை கொண்டிருப்பவர்கள், ஆனால் வாக்களிக்கச் செல்லாத மக்களை நோக்கி அவர் திரும்ப வேண்டும். அவர்களை ஈர்த்தால் மட்டுமே அவர் வெற்றி பெறுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இதற்கிடையே ட்ரம்ப்பும் பார்ஸ்கேலும் கிடைக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கொண்டு, ஜனநாயகக் கட்சிக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவுத் தளத்தைத் தடுத்து நிறுத்த முயன்றுகொண்டிருப்பார்கள்.
உயர் தொழில்நுட்பப் போர்க்களத்தில் சமீப கால வரலாற்றைப் பொறுத்தவரை ஆட்சியுள்ளவர்களுக்கு, அதிலும் பிரதானப் போட்டியாளர்கள் இல்லாதவர்களுக்கே நிலைமை பெரிதும் சாதகமாக இருந்துவந்திருக்கிறது. 2004-ல் புஷ்ஷும், 2012-ல் ஒபாமாவும் இதற்கு உதாரணங்கள். இவர்கள் இருவரின் போட்டியாளர்களான ஜான் கெர்ரி, மிட் ரோம்னி ஆகியோரிடம் போதுமான பணமோ நேரமோ இருந்ததில்லை. எனினும், இந்த முறை வேறுவிதமாகவும் அமையலாம்.
சமூக வலைதளப் போர்க்களம்
பணத்தைப் பொறுத்தவரை, ட்ரம்ப் மீதான வெறுப்பு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்குப் பண வெள்ளத்தைக் கொண்டுவரலாம். ஆனால், தங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான நேரம்தான் ஜனநாயகக் கட்சியினருக்கு இருக்காது. கூடவே, அந்தக் கட்சிக்குத் தங்கள் செய்தியைச் சரியாக மக்களிடம் கொண்டுசேர்க்கத் தெரியாத பிரச்சினையும் இருக்கிறது. ஒரு தரப்பானது டிஜிட்டல் பிரச்சாரத்தை ஆயுதமாக்கியிருக்கிறது.
இன்னொரு தரப்பு அப்படிச் செய்யவில்லை என்கிறது. ஜனநாயகக் கட்சியினர் உண்மைகள் மீதும் உண்மையான தரவுகள் மீதும் கவனம் செலுத்துகிறார்கள். குடியரசுக் கட்சியோ மக்களின் அச்சங்களைத் தட்டியெழுப்பி, அவர்களின் உணர்வுகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; உண்மையல்லாத தகவல்களைக் கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். “ஃபேஸ்புக்தான் நாங்கள் 2016-ல் வென்றதற்குக் காரணம்” என்கிறார் பார்ஸ்கேல். அதிபர் தேர்தலுக்கான சமீபத்திய டிஜிட்டல் விளம்பரம் தொடர்பான தரவுகளை மட்டும் கொண்டு பார்க்கும்போது, வரலாறு தன்னைத் தானே திரும்பவும் நிகழ்த்திக்கொண்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
தி நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை