Published : 23 Oct 2019 07:39 am

Updated : 23 Oct 2019 08:28 am

 

Published : 23 Oct 2019 07:39 AM
Last Updated : 23 Oct 2019 08:28 AM

அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்

communist-party

வானம் அதிகாலையில்தான் வெக்காளித்திருந்தது. திரும்பவும் மழை வந்துவிட்டது. நேரத்துக்கு முன்கூட்டி இயங்குபவரான முதுபெரும் தலைவர் சங்கரய்யா, மழையையும் போக்குவரத்து நெரிசலையும் யோசித்திருக்க வேண்டும். பயண நேரம் என்னவோ அரை மணிதான் என்றாலும், கட்சி அலுவலகத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு வந்திருந்தார்.

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். உடலின் தளர்ச்சி செயல்பாட்டில் தெரியவில்லை. “அன்றாடம் ஏழு பத்திரிகைகள் வாசிக்கிறார். வானொலி கேட்கிறார். கட்சிக்காரர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அரசியலில் ஓய்வு என்பது ஏது?” என்கிறார்கள். சங்கரய்யாவை அன்றைய தினம் சந்தித்த பலரும் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருந்தார்கள். இக்கட்டான சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம், தன் தலைமகனுக்கு ஒருசேர முகங்கொடுப்பதற்கு ஒப்பான சூழல் அது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் சிந்தனை உதித்த நூற்றாண்டைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியில் சங்கரய்யாவுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ‘தோழர்களே!’ என்று தொடங்கி ‘இன்குலாப்... ஜிந்தாபாத்!’ என்று முடித்த சங்கரய்யா, “இந்த உலகம் முழுக்க சோஷலிஸ ஒளி பரவ வேண்டும் என்றால் அதற்கு, ஆசியாவில் 130 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது.

இந்தியாவுக்கான ஒளிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது” என்றார். இந்த நூற்றாண்டு முழுக்க இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் எதிர்கொண்ட அடக்குமுறைகளைத் தன் பேச்சில் கொண்டுவந்தார் சங்கரய்யா. “எவ்வளவோ வேட்டையாடப்பட்டும் பொதுவுடைமை இயக்கம் நீடித்து நிற்கக் காரணம், இந்த இயக்கத்தோடு கரைத்துக்கொண்டவர்கள் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பு; அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள்” என்று சங்கரய்யா சொன்னபோது, அவருடைய வாழ்க்கையை அறிந்தவர்கள் கண் கலங்கியதில் ஆச்சரியமில்லை. பசி, பட்டினி, தடியடி, சிறை எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்தவர் சங்கரய்யா.

மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர் சங்கரய்யா. 1939-ல் மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகள் ஆலயப் பிரவேசம் நடந்தபோது தன் பங்குக்கு மாணவர்களோடு சென்று நின்றவர். பெரியார் தொடங்கிய முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சத்தில் இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதன் விளைவாக சங்கரய்யாவின் கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வந்தது. காந்தியால் நாடு முழுக்க முன்னெடுக்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லையில் பேரணி நடத்திய சங்கரய்யா போலீஸாரின் தடியடியையும் காயங்களையும் எதிர்கொண்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

பிற்பாடு பொதுவுடைமை இயக்கம் தடைக்குள்ளானபோது, மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். ஒரு சலவைத் தொழிலாளியின் வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்தவர் தோல் நோயோடு வெளியே வந்தார். தன் வாழ்வில் எட்டாண்டுகளைச் சிறையில் கழித்தவர், வேலூர் சிறையில் இருந்த நாட்களில் அரசியல் கைதிகளின் உரிமைக்காக 19 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தான் சாதி – மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டதோடு, தன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சுற்றத்தினர் மத்தியிலும் சுயமரியாதைத் திருமணங்களை உறுதியாக ஊக்குவித்ததன் விளைவாக தன்னுடைய குடும்பத்தையே பல்வேறு சமூகங்களின் சங்கமமாக உருமாற்றினார்.

சங்கரய்யாவின் வாழ்க்கைக் கதையைப் படிப்பது இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் எப்படியான பாதைகள் வழியே வந்திருக்கிறது; கடந்த ஒரு நூற்றாண்டில் இங்கே பொதுவுடைமை இயக்கத்தினர் வாழ்க்கையும் அக்கறைகளும் எப்படியெல்லாம் பயணப்பட்டிருக்கின்றன என்பதைக் குறுக்குவெட்டாகப் பார்ப்பதற்குச் சமம்.

சென்னையில் மட்டுமல்ல; நாடு முழுக்கவுமே கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் உணர்ச்சிப்பெருக்கோடுதான் நடந்தன. இயக்கம் அதன் வரலாற்றிலேயே மிகப் பெரும் சரிவுக் காலகட்டத்தில் இருக்கிறது; மக்களவையில் அவர்களுக்கான இடம் ஐந்தாகச் சுருங்கிவிட்டது. எதிரே வலதுசாரி சித்தாந்தம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வேர் பரப்புகிறது.

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புத்தொளி எதுவும் இடதுசாரிகளுக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், நூற்றாண்டு தருணத்திலும் கொண்டாட்டத்தைவிடவும் கலக்கம்தான் சூழ்ந்திருக்கிறது. இவ்வளவு பலவீனமான சூழலிலும்கூட இந்திய பொதுவுடமை இயக்கத்தின் இரு பெரும் பிரிவுகளான மார்க்ஸிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தனது வரலாற்றுச் சுமையிலிருந்து வெளியே வந்து ஒன்றிணைய முடியவில்லை. இந்த நூற்றாண்டு கொண்டாட்டமும்கூட அதற்கு விதிவிலக்காக இல்லை.

1917 ரஷ்யப் புரட்சிக்குப் பின் இந்தியாவிலும் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவ முயற்சி மேற்கொண்ட எம்.என்.ராய் உள்ளிட்ட குழுவினர் 1920, அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட்டில் அதற்கான திட்டத்தை விதைத்தார்கள். இதற்குப் பின்பு அன்றைய பம்பாய், கல்கத்தா, சென்னை, பஞ்சாப் உள்ளிட்ட பிராந்தியங்களில் உதித்த சிறுசிறு கம்யூனிஸ குழுக்கள் 1925-ல் கான்பூரில் ஒரு கம்யூனிஸ மாநாட்டுக்காக ஒன்றுசேர்ந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது பிந்தைய நிகழ்வை இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் தொடக்கமாகக் கருத, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ முந்தைய நிகழ்வைத் தொடக்கமாகக் கருதுகிறது. விளைவாக, இப்போதும் மார்க்ஸிஸ்ட் கட்சியினரின் இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் பேராளுமையான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் வாழ்க்கைச் சரிதம் இந்த இரு கதையாடல்களுக்கு இடையில் உள்ள முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

1917-க்குப் பிந்தைய நாட்களிலேயே பொதுவுடைமை இயக்கச் செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் வேரூன்றிவிட்டதை அவருடைய வாழ்க்கைக் கதை சொல்கிறது. அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்த நம்பூதிரிபாட் தன் வாழ்வில் முதல் முறையாக ‘போல்ஷ்வியம்’ என்ற சொல்லை 1923 மெட்ராஸ் மாகாணத் தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டதாகச் சொல்கிறார். வேட்பாளர்களில் ஒருவர் நிலப்பிரபுக்களின் அதிகாரங்களை முடக்கும் சட்டத்தைக் கொண்டுவருவேன் என்று பேசியதையும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால், நம்பூதிரிபாட்டின் குடும்பம் ரஷ்யாவில் நடந்ததைப் போல சொத்துகளை இழக்க நேரிடும் என்று வீட்டில் பேசிக்கொள்ளப்பட்டதையும் எழுதுகிறார்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா?

பல நாடுகளையும்போல நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரதான பாத்திரத்தை இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் வகிக்க முடியாமல் போயிருக்கலாம். நாடாளுமன்றத்தில் பெரும் சக்தியாக அது உருவெடுக்காமல் போயிருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கடந்த நூற்றாண்டு நெடுகிலும் அது செய்திருக்கிறது. சுதந்திர இந்தியா இன்று எந்த அளவில் எல்லா இனத்தவர், மதத்தினர், வர்க்கத்தினருக்குமான நாடாக இருக்கிறது என்றாலும், அது குறைந்தபட்சம் அந்த அளவிலான பண்பைப் பெறவும் தங்களாலான பங்கைச் செலுத்தியவர்கள் பொதுவுடைமை இயக்கத்தினர்.

இந்திய மாநிலங்கள் மொழிவாரியில் பிரிக்கப்பட்டு, இந்திய வரைபடமானது கூட்டாட்சிக்கான உண்மையான அர்த்தத்தைச் சிறு அளவிலேனும் பெற்றதன் பின்னணியில் அவர்களுடைய மகத்தான உழைப்பு இருக்கிறது. இந்தியாவில் நடந்திருக்கும் நிலச் சீர்திருத்த வரலாற்றையும், லட்சக்கணக்கான குடியானவர்கள் பெற்ற நிலவுரிமை அதிகாரத்தையும் பொதுவுடைமை இயக்கத்தினரின் பெயரைத் தவிர்த்துவிட்டு எவராலும் எழுத முடியாது.

இந்தியாவின் ஒற்றுமை அதன் வேறுபட்ட மகத்தான பண்புகள் மத்தியிலிருந்து விளைவதே அன்றி, அவற்றை ஒடுக்கி ஒற்றைமயமாக்குவதன் வழி அல்ல என்பதற்கு எப்போதும் குரல் கொடுத்துவந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஆதிக்க சக்திகளால், அரச அடக்குமுறையால் ஒரு சாமானியன் தாக்கப்படும்போது அவனுக்காக நீளும் முதல் கை அவர்களுடையதாகவே இருக்கிறது.

அது எப்படியோ! இன்றைக்கு இந்தியச் சமூகமானது இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திடம் எதிர்பார்ப்பது அதன் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது என்பது போன்ற அவர்களுக்கு இடையேயான வரலாற்று முரண்பாட்டுக்கான வாதங்களை அல்ல; பொதுவுடைமை இயக்கமானது மீண்டும் ஒன்றுபட்டு, அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதேயாகும்.

இன்றைய இடிபாடுகளிலிருந்து பொதுவுடைமை இயக்கம் எப்படி மீண்டெழுவது? அது, சமகாலத் தேவைக்கேற்ப சித்தாந்தரீதியாக ஒரு முழு அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்வதேயாகும். என்னளவில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள பொதுவுடைமை இயக்கத்தினரை நோக்கிப் பேசுவதை விடுத்து அவர்களுக்கு முன் வழிகாட்ட பெரும் சாத்தியங்களைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தினரை நோக்கி இதைப் பேசவே விழைகிறேன்.

கம்யூனிஸமா, சோஷலிஸமா?

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல்லை விடுத்து, ‘சோஷலிஸ்ட்’ என்ற சொல்லைப் பொதுவுடைமை இயக்கத்தினர் சுவீகரித்துக்கொள்ளலாம் என்று சமீபத்தில் பரிந்துரைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் இதே விஷயத்தை நான் குறிப்பிட்டிருந்தது ‘இந்து தமிழ்’ வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். பொதுத் தளத்தில் கம்யூனிஸம்சோஷலிஸம் இந்த இரு சொற்களையும் ஒரே தொனியில் பயன்படுத்துவதும், மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் எழுத்துகள் வாயிலாக ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல்லுக்குக் கோட்பாட்டுரீதியாக அர்த்தம் கொடுக்க விழைவதும் இந்தியாவிலுள்ள பொதுவுடைமை இயக்கத்தினரின் இயல்பு.

இரு சொற்களும் முழுக்க இருவேறு தத்துவங்களாக இன்று ஆகிவிட்டிருக்கின்றன என்பது போக, நூறாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றில் உலகெங்கும் கம்யூனிஸத்தின் பெயரால் ஆட்சியமைத்த அரசுகள், அவர்களுடைய ஆட்சியில் தந்திருக்கும் அனுபவங்கள் வாயிலாகவே ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சென்னைக்கு சமீபத்தில் வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு, தங்களுடைய அதிகாரபூர்வ பத்திரிகையான ‘தீக்கதிர்’ நாளிதழின் முதல் பக்கத்தில் ‘சென்னை வருகிறார் தோழர் ஜின்பிங்’ என்று உற்சாக வரவேற்பு அளித்திருந்தார்கள் தோழர்கள். இந்தியாவிலிருந்து சீனா திரும்பும் வழியில் நேபாளம் சென்றார் ஜின்பிங். ஹாங்காங்கில் சுயாட்சி உரிமைக்காக – பிரிவினைக்காகவோ, விடுதலைக்காகவோ அல்ல – போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நேபாளம் எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது என்று நேபாள பிரதமரிடம் வலியுறுத்தியவர், “சீனாவைப் பிளவுபடுத்தத்தக்க எந்தப் போராட்டமும் சிதைக்கப்பட்ட உடலாகவும் நொறுக்கப்பட்ட எலும்புகளாகவும்தான் மிஞ்சும்” என்றார். காஷ்மீரில் அங்குள்ள மக்களின் சுயாட்சி போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசைப் பொதுவுடைமை இயக்கம் கடுமையாக விமர்சிக்கிறது; ஜின்பிங் அரசு எந்த வகையில் மோடி அரசிடமிருந்து அடக்குமுறையில் மேம்பட்டது? எப்படி ஜின்பிங் தோழர் ஆகிறார்?

சோவியத் ஒன்றியம் தொடங்கி சீனா வரை; க்யூபா தொடங்கி வியட்நாம் வரை கம்யூனிஸ நாடுகளில் இந்த நூறாண்டுகளில் ஜனநாயக அனுபவம் என்னவாக இருந்திருக்கிறது? இந்தியாவில் ஜனநாயகத்துக்காக உரத்த குரல் கொடுக்கும் பொதுவுடைமை இயக்கத்தினர், இதில் எந்த நாட்டின் அணுகுமுறையை நியாயப்படுத்த முடியும்? ‘சமத்துவம்’தான் ஒரே லட்சியம் என்பதை உறுதியாக்கிக்கொண்டால் ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘சோஷலிஸ்ட்’ என்ற சொல் இங்குள்ள பொதுவுடைமை இயக்கத்தினருக்குக் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.

என்னைப் பொறுத்த அளவில் இன்றைக்கு சீனத்தைக் காட்டிலும் பிரிட்டனும், வெனிசுலாவைக் காட்டிலும் டென்மார்க்கும் கூடுதல் இடதுசாரித்தன்மையுள்ள - மனிதத்தன்மையுள்ள நாடுகள். அயல்நாடுகளின் சர்வாதிகார வரலாற்றுச் சுமையிலிருந்து நம் நாட்டு பொதுவுடைமை இயக்கத்தினரை இந்தப் பெயர் மாற்றமானது விடுவிப்பதோடு, சமகாலத்தில் இந்திய அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் நான்கு பெரிய சிக்கல்களுக்கும் அது விடை கொடுக்கும்.

உலகமயமாக்கல் காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது, மதத்தை எப்படி அணுகுவது, தேசியத்தை எப்படி அணுகுவது, அரசியத்தை எப்படி அணுகுவது இந்த நான்கு விஷயங்களிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினருக்குப் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் ‘சோஷலிஸம்’ இதற்குத் தீர்வு கொடுக்கலாம். ஏனென்றால், அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் கம்யூனிஸம், அவரவர் தேவைக்கேற்ற பலன்களைத் தரச் சொல்கிறது; அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் சோஷலிஸமோ அவரவர் உழைப்புக்கு ஏற்ற பலன்களைத் தரச் சொல்கிறது.

அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.

டெல்லியிலிருந்தா, மாநிலங்களிலிருந்தா?

ராமச்சந்திர குஹாவைப் போல ‘இந்திய சோஷலிஸ்ட் கட்சி’ என்ற பெயரை நான் பரிந்துரைக்க மாட்டேன். மாறாக, ‘தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம்’ என்ற பெயர் வரலாற்றுப் பொருத்தமுடையதாக இருக்கும்; இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களோடு இணைந்த அந்தந்த மாநில மொழியில் அமைந்த பெயர்; தேசிய அளவிலான பிரச்சினைகளை மட்டும், ஒன்றுகூடி முடிவெடுக்கும் ஒரு நிழற்குடை அமைப்பாக தேசிய அமைப்பு இருக்கலாம்; தேசிய ஜனநாயகக் கூட்டணி; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று கூட்டணி அமைப்புகள் செயல்படுவதுபோல அந்த நிழற்குடை இன்னும் கூடுதல் இணக்கத்துடன் செயல்படலாம்.

சரியாக அரை நூற்றாண்டுக்கு முன்னர் நம் காலத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.என்.நாகராஜன் எழுப்பிய கேள்வியை இங்கே நினைவுகூரலாம். அவர் ‘கம்யூனிஸ்ட்’ என்ற பெயரைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆனால், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகக் கிளையாகப் பாவிக்கப்படுவதற்குப் பதிலாக, ‘கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு’ என்ற பாவிப்பு வேண்டும்” என்று கோரினார். “நாம் ஒரு அகில இந்திய கட்சி ஸ்தாபனத்தைக் கட்டப்போவதில்லை. அது சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை. இந்தியா என்பதே ஒரே தேசம் அல்ல என்று கூறுவதால், நாம் அகில இந்திய ஸ்தாபனம் ஆக முடியாது எனும் அடிப்படையிலிருந்தே தொடங்குவோம்” என்று 1969-ல் எழுதினார் நாகராஜன்.

இந்தியாவை டெல்லியிலிருந்து பார்க்கும், மாநிலங்களை அதன் கிளைகளாகப் பார்க்கும் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக, இந்தியாவை மாநிலங்களின் தொகுப்பாகப் பார்க்கும் பார்வையைத் தாங்கள் கொண்டிருப்பதாகவே பொதுவுடைமை இயக்கத்தினர் கருதிவந்திருக்கிறார்கள். “நாட்டில் எத்தனை மொழிவழிப்பட்ட கலாச்சாரக் குழுக்கள் அல்லது தேசிய இனங்கள் உள்ளனவோ அத்தனை அரசியல் நிர்ணய சபை இருக்க வேண்டும்” என்று கோரிய பாரம்பரியம் அவர்களுக்கு உண்டு. அப்படியென்றால், கேரளமும் வங்கமும் தமிழ்நாடும் உத்தர பிரதேசமும் பிஹாரும் சம மதிப்பு கொண்டவை. அதாவது, மாநிலங்கள் இல்லையேல் இந்தியா இல்லை; மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா.

அப்படி இருக்கும்போது, ‘இந்த நாடு எதிர்காலத்தில் எப்படியான கூட்டாட்சி அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்’ என்று பொதுவுடைமை இயக்கத்தினர் கருதுகிறார்களோ அதற்கேற்ப முதலில் தங்களுடைய கட்சி அமைப்பை மாற்றியமைப்பதுதானே நியாயமானதாக இருக்க முடியும்?
அகில இந்திய அமைப்பாகத் தங்களைக் கருதிக்கொண்டாலும், வங்கம், கேரளா, திரிபுரா மூன்று மாநிலங்களில் மட்டுமே இதுநாள் வரை பிரதான இடத்தில் இருந்துவந்திருக்கிறார்கள். சிறிய மாநிலமும் மக்கள்தொகையில் வங்காளிகள் ஆதிக்கமும் கொண்ட திரிபுராவை வங்கத்தின் வாலாக வைத்துக்கொண்டோமானால், நூறாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றுப் போக்குகளை இரு பெரும் பிரிவுகளாக வகுத்துவிடலாம். வங்கத்துப் போக்கு, கேரளத்துப் போக்கு. ஏனைய மாநில அமைப்புகள் இவற்றை அடியொற்றுபவையாகவே இருந்துவந்திருக்கின்றன.

எப்படியும் மக்களவையில் 225 தொகுதிகளையும், 41% பிரதிநிதித்துவத்தையும் கொண்ட டெல்லி, ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்ராகண்ட், பிஹார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இந்தி பிரதேசத்தில், ஒட்டுமொத்த இந்தி சமூகத்தின் மத்தியில் ஒரு மாநிலத்தில்கூட பெயரளவிலான செல்வாக்கும் இல்லாத ஒரு கட்சி தன்னை ‘டெல்லிபாணி தேசியக் கட்சி’ என்ற இடத்தில் வைத்து மதிப்பிட்டுக்கொள்வதிலும், அதன் பொருட்டாக மேலிருந்து கீழ் நோக்கி யோசிக்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பதிலும் எந்த நியாயமும் இல்லை. பாஜக, காங்கிரஸிடமிருந்து தாங்கள் மாறுபட்டவர்கள் என்றால், அந்த அணுகுமுறை இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினரிடம் முதலில் இங்கு வெளிப்பட வேண்டும்.

இந்தப் பார்வையை வெறுமனே மாநிலங்கள் உரிமை அல்லது மாநில சுயாட்சி என்பதாகச் சுருக்கிட முடியாது; உண்மையான கூட்டாட்சிக்கு இதுவே அடிப்படை. உலகின் முற்போக்குச் சமூகங்களுடன் ஒப்பிட எப்படி சமூகநீதியில் இன்னமும் இந்தியா பல காத தூரம் பின்னே நிற்கிறதோ, அதைக் காட்டிலும் மோசமாக கூட்டாட்சியில் அது பின்னே நிற்கிறது. ஆனால், எதிர்வரும் காலத்தின் அரசியல் இதுவாகத்தான் இருக்கப்போகிறது.

தேசியத்தின் குரல் ஓங்கும்போது அதன் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கான முயற்சி ஒன்றே வெற்றிகரமான மாற்று அரசியலாக இருக்க முடியும்; இந்தியாவில் ஒற்றைத்தன்மை கொண்ட மதவழி உள்ளடக்கத்தின் இடத்தை எதிர்காலத்தில் மொழிவழிப் பன்மைத்துவமே இட்டு நிரப்பும். வரலாற்றுரீதியாக கூட்டாட்சி சிந்தனைக்கு இந்தியாவிலேயே முன்னோடியும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்டதுமான தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தினரால் ஏனைய மாநிலத்தோருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். அந்தரத்தில் மிதக்கும் வேரற்ற தாவரமான சர்வதேசியவாதத்துக்கு, ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்.

இணையுங்கள்… இந்தியத்தன்மை பெறுங்கள்

பொதுவுடைமை இயக்கத்தினர் இப்படி ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்கையில், கூட்டு பலமே அதற்குப் பெரும் உத்வேகம் கொடுப்பதாக அமைய முடியும். ஊருக்குப் பத்து குழுக்களாக வெவ்வேறு பெயர்களில் உதிரிகளாகப் பிரிந்து கிடப்பவர்கள் சக்தி மிக்க அமைப்பாக உருமாற முதலில் ஒன்றிணைய வேண்டும். இணைப்புக்கு எதிரான மயிர்ப்பிளப்பு வாதங்களைக் கடந்த கால வரலாற்றிலிருந்து மீண்டும் இடதுசாரிகள் தோண்டியெடுக்க வேண்டியதில்லை.

வங்கத்தில், மம்தாவை எதிர்கொள்கிறோம் என்ற பெயரில் 2016 தேர்தலில் காங்கிரஸோடும், 2019 தேர்தலில் பாஜகவுடனுமே கைகோத்து இரண்டற ஒன்றுகலந்துவிட்ட பின் இனியும் 1964 முரண்பாடுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செங்குத்துப் பிளவை எதிர்கொண்டு மார்க்ஸிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினர்களான 32 பேரில் ஒருவர் சங்கரய்யா; இன்றைக்கு அவருடைய மனமும்கூட இணைப்பையே விரும்புவதை அவருடைய நூறாண்டு உரை சூசகமாக வெளிப்படுத்தாமல் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இன்னொரு போராளியுமான நல்லகண்ணு இணைப்புக்கான தன் விருப்பத்தைப் பல முறை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோசிமின், ஃபிடல் காஸ்ட்ரோ என்று இந்திய நிலத்துக்கு வெளியே தங்கள் முன்னுதாரணங்களைத் தேடிய பொதுவுடமை இயக்கத்தினர் இங்கே நிகழ்ந்த அற்புதங்களிலிருந்தும் காலம் கடந்தேனும் பாடம் கற்க முனைய வேண்டும். காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா இவர்களையெல்லாம் கடந்த காலங்களில் கண்கொண்டு காண முடியவில்லை என்றால் தங்களுடைய லட்சியத்தைப் புத்தகங்கள் வழியாகப் பார்க்கிறோமா, வாழ்க்கையனுபவம் வழியாகப் பார்க்கிறோமா என்ற கேள்வியைத் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும். இடதுசாரித்தன்மை என்பதற்கு இந்தியாவில் நீண்ட பொருள் தேவைப்படுகிறது.

காந்தி, பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா தொடங்கி இன்று வரை வெவ்வேறு தளங்களில் சமத்துவத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கும் எல்லோரையுமே இந்திய இடதுசாரிகள் சுவீகரித்துக்கொள்ளலாம். இந்திய மக்கள் இன்று கற்பனையும் துடிப்பும் செயலூக்கமும் மிக்க எதிர்க்கட்சிகளைத் தேடுகிறார்கள். பழைய தோலை உரித்துப்போட்டுவிட்டு புது வடிவம் எடுப்பதன் வாயிலாகவே அந்த இடம் நோக்கி இடதுசாரிகள் நகர முடியும். பெயர் மாற்றம் - பண்பு மாற்றம் வரலாற்றில் புதிது அல்ல; லெனினிடமிருந்தே அவர்கள் முன்னுதாரணம் கொள்ளலாம்.

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Communist Partyநூற்றாண்டுபொதுவுடைமை இயக்கம்பல நாடுகள்கம்யூனிஸம்சோஷலிஸம்இந்திய மாநிலங்கள்மொழிவாரிஇந்தியப் பொதுவுடைமைஇந்திய சோஷலிஸ்ட் கட்சிலெனின்ஸ்டாலின்மாவோஹோசிமின்ஃபிடல் காஸ்ட்ரோ

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author