Published : 18 Oct 2019 07:36 am

Updated : 18 Oct 2019 07:36 am

 

Published : 18 Oct 2019 07:36 AM
Last Updated : 18 Oct 2019 07:36 AM

மகாராஷ்டிர முடிவைத் தீர்மானிக்கும் சாதி - பிராந்தியக் கணக்குகள்

the-caste-that-decides-the-maharashtra-decision

ஆசை

எல்லா மாநிலங்களிலும் தேர்தல் அரசியலில் சாதியக் கணக்குகளும் பிராந்தியக் கணக்குகளும் செயல்படுகின்றன என்றாலும், மகாராஷ்டிரத்தில் இது அதிகம். மகாராஷ்டிரத்தில் சாதிரீதியிலான அரசியலும், பிராந்தியரீதியிலான அரசியலும் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது முக்கியம். ஏனெனில், இந்தக் கணக்குகள்தான் எல்லா தேர்தல் முடிவுகளிலும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மராத்தாக்கள்

மகாராஷ்டிர மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தாக்களுக்கு பாஜக முதல்வராக ஃபட்நவீஸ் ஆட்சியில் அமர்ந்தது உவப்பானதாக இல்லை. ஏனெனில், சிவாஜிக்குப் பிந்தைய பேஷ்வாக்கள் காலத்திலிருந்து தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் புறக்கணிக்கப்படுவதாகவுமான எண்ணம் பெரும்பான்மை மராத்தாக்களிடம் உண்டு. இத்தனைக்கும் அவர்கள் கைகளில்தான் மகாராஷ்டிர அரசியலின் பெரும்பான்மை அதிகாரம் இருந்துவந்திருக்கிறது.

சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 45% இடங்கள் எப்போதும் அவர்கள் கைகளில் இருக்கும். அமைச்சரவையிலும் சராசரியாக 52% மராத்தாக்களுக்கு ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. இதுவரையிலான 18 முதல்வர்களில் 11 பேர் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஏறத்தாழ 55% மராத்தாக்களுடையவை. 70% கூட்டுறவு அமைப்புகள், 70% விவசாய நிலங்கள் மராத்தாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தாங்கள் புறக்கணிக்கப்படுவதான மராத்தாக்களின் முறைப்பாடு பிராமணர்களுடனான ஒப்பீட்டின் விளைவாகும்.

சித்பவன் பிராமணர்கள்

ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்கள்தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 9%; இதில் சித்பவன் பிராமணர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு. எனினும், அரசியல் தளத்தில் சித்பவன் பிராமணர்களின் செல்வாக்கு அதிகம். மராத்தா மன்னர்களுக்கு பேஷ்வாக்களாக – பிரதான அமைச்சர்களாக இருந்த இச்சமூகம், காலப்போக்கில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டது என்பது மராத்தாக்களின் முறைப்பாடு. பொதுவில், ஏனைய பிராமணர்களைவிடவும் தங்களை உயர்வாகக் கருதும் எண்ணமும் சித்பவன் பிராமணர்களிடம் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலிருந்தே மகாராஷ்டிரத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கும் முக்கியமான தலைவர்களைத் தந்த சமூகமும் இது.

காங்கிரஸின் இரு பெரும் போக்குகளாக உருவெடுத்த பால கங்காதர திலகர், காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகலே, காந்தியின் சீடர் வினோபா பாவே மூவருமே இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். காந்தியைக் கொன்ற கோட்ஸேவும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார், அதன் முக்கியமான சித்தாந்தி சாவர்க்கர், இன்றைய தலைவர் மோகன் பாகவத் யாவரும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

மகாராஷ்டிர முதல்வர் ஃபட்நவீஸும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். வாக்கு வங்கியாக இவர்களுக்குப் பெரிய பலம் இல்லை என்றாலும், அரசியல் சித்தாந்தத் தளத்திலும், வியூகத்தின் வழி தேர்தல் போக்கை நிர்மாணிப்பதிலும் மகாராஷ்டிரத்தைத் தாண்டியும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், மராத்தாக்கள் மத்தியில் மறைமுகப் போட்டி இவர்களுடன் எப்போதும் நிலவுகிறது.

மராத்தாக்களை இழுத்த ஃபட்நவீஸ்

பிராமணரான ஃபட்நவீஸ் முதல்வரானதற்குப் பின் இந்த அரசின் மீதான தங்கள் பொருமலைக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக கோபார்டி சம்பவத்தைப் பயன்படுத்தினார்கள். 2016 ஜூலையில் கோபார்டி கிராமத்தில் 14 வயது மராத்தா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த கிராமத்துக்கு முதல்வர் ஃபட்நவீஸ் இரண்டு வாரங்கள் வரை சென்றிடாத நிலையில், ஔரங்காபாதில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தடைச் சூழலையும் மீறி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மராத்தாக்கள் திரண்டார்கள். அவர்களைப் பகைத்துக்கொண்டு ஃபட்நவீஸால் ஆட்சியைத் தொடர முடியாது என்பதைத் துலக்கமாக்கிய போராட்டம் இது.

போராட்டத்தின் தொடர்ச்சியாக அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்த மராத்தாக்கள், மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அது மாற்றியமைக்கப்பட வேண்டும், கோபார்டி சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.

மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை புதியதல்ல. 1980-களிலிருந்து மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகிறது. 2014-ல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு மராத்தாக்களுக்கு 16% இடஒதுக்கீடு வழங்கினாலும் மும்பை உயர் நீதிமன்றம் அதை ரத்துசெய்தது. அதையடுத்து அமைந்த பாஜக அரசின் கீழும் முன்பைவிட இடஒதுக்கீட்டுக்கான குரல் வலுவாக ஒலித்தது. இத்தனைக்கும் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மராத்தாக்களின் ஆதிக்கம்தான் அதிகம்.

மராத்தாக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக 2016-ல் மராத்தா சமூகங்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை ஃபட்நவீஸ் அரசு அறிவித்தது. எனினும், இதற்கெல்லாம் அவர்கள் அடிபணிந்துவிடவில்லை. அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மராத்தாக்களின் தலைவர்கள் எச்சரித்தார்கள். சொன்னதுபோலவே செய்தும் காட்டினார்கள். 2017 ஜனவரியில் நடந்த மராத்தாக்களின் போராட்டங்களால் மாநிலமே பற்றியெரிந்தது. போராட்டங்களில் ஏற்பட்ட கலவரங்கள், தற்கொலை போன்றவற்றால் 2018-ன் இறுதிக்குள் 42 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதையடுத்து, நவம்பர் 29 அன்று மும்பையின் ஆசாத் மைதானத்தில் மராத்தாக்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர். ஆனால், ஃபட்நவீஸ் சுதாரித்துக்கொண்டார். அன்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்தியிலும் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த இடஒதுக்கீடு நீடிக்கும் என்று மராத்தாக்கள் நினைக்கிறார்கள். மராத்தாக்களை ஃபட்நவீஸ் உள்வாங்கிக்கொண்ட தருணம் இது.

தலித்துகள்

மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு அடுத்தபடியாக பெரிய சமூகம் பட்டியலினத்தவர்கள். மொத்த மக்கள்தொகையில் 11.8% உள்ள பட்டியலினத்தவரை எந்தக் கட்சியும் பகைத்துக்கொள்ள முற்படாது. ஆனால், அப்படியொரு சூழல் பாஜகவுக்கு உருவானது. 1818-ல் பேஷ்வா படையினருக்கும், தலித்துகளில் ஒரு பிரிவான மஹர்கள் இடம்பெற்றிருந்த ஆங்கிலேயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் வென்றனர்.

இந்த வெற்றியைப் பிராமணிய ஆதிக்கத்துக்கு எதிரான வெற்றியின் குறியீடாகக் கருதி, ஆண்டுதோறும் கொண்டாடுவது தலித்துகளின் வழக்கம். பொதுவாக, பெரிய சர்ச்சைகள் ஏதுமின்றி உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றுவந்த இந்நிகழ்வுக்கு எதிராக பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பிவந்தன. 2018 ஜனவரி 1-ல் நடைபெற்ற விழாவின்போது இந்துத்துவ - மராத்தா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கீழே இறங்கக் கலவரம் மூண்டது. இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரம் முழுவதும் தலித் மக்கள் கொதித்தெழுந்தார்கள். மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது.3

இடதுசாரி அமைப்புகள் இப்போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த நிலையில், தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த இடதுசாரிச் செயல்பாட்டாளர்களையும் ஒடுக்குவதில் இறங்கிய பாஜக அரசு, இப்போராட்டத்துக்குப் பொதுத்தளத்தில் சிவப்பு வண்ணம் பூசுவதில் வெற்றி கண்டது. அதாவது ரோனா வில்ஸன், வரவர ராவ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாத், கௌதம் நவ்லக்கா உள்ளிட்டோருக்கு மாவோயிஸ்ட்டுகள் தொடர்பு இருக்கிறது என்றும், பீமா கோரேகான் கலவரத்துக்கு இவர்கள்தான் காரணம் என்றும் இவர்களையெல்லாம் கைதுசெய்தது.

அதன் விளைவாக ஒருபுறம் இவையெல்லாம் ‘மாவோயிஸ்ட்டுகளின் வேலை’ என்றும், ‘இவர்கள் தேசவிரோதிகள்’ என்றும் பிம்பத்தை உருவாக்கியதோடு, அரசினுடைய எதிர்வினை தலித்துகளுக்கு எதிரானது அல்ல; மாறாக மாவோயிஸ்ட்டுகளுக்கும், அவர்களுக்கு ஆதரவான தலித்திய அமைப்புகளுக்கும் எதிரானது என்ற பார்வையை உருவாக்கியது. மறுபுறம், தலித் அமைப்புகள் மீதான கடும் நடவடிக்கையின் மூலம், தலித் அல்லாத சமூகங்களுக்கு ஆதரவான அரசு இது எனும் சமிக்ஞையை அனுப்பியது.

தலித் அமைப்புகளைப் பகைத்துக்கொண்டும் அதை மீறி எப்படி மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றது என்பது இந்தப் பின்னணியில்தான் நடந்தது. தலித் வாக்கு வங்கி பிளவுபட்டது என்பதும், ரிபப்ளிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, வஞ்சித் பகுஜன் ஆகாதி என்று பல அமைப்புகள் அங்கே தலித்துகளின் ஓட்டுகளைப் பிரித்துக்கொள்கின்றன என்பதும் இங்குள்ள சூழல். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று எதிர்க்கட்சிகள் அழைப்பதன் மூலம் இங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ள முற்படலாம்.

பிராந்திய அரசியல்

மகாராஷ்டிர அரசியலில் சாதிசார் அரசியலுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் போன்றே பிராந்தியம்சார் அரசியலுக்கும் முக்கியமான பங்குண்டு. பம்பாய் மாநிலத்தின் மேற்கு, தென்மேற்கு பகுதிகளையும் பேரர், விதர்பா பகுதிகளையும் ஹைதராபாத் மாகாணத்தின் வடமேற்குப் பகுதிகளையும் இணைத்து மகாராஷ்டிரம் உருவாக்கப்பட்டது.

அப்படிச் சேர்க்கப்பட்டபோது கர்நாடகத்தில் மராத்தி மொழி பெருவாரியாகப் பேசப்படும் பெல்காம், கார்வார் பகுதிகள் மகாராஷ்டிரத்தோடு இணைக்கப்படவில்லை. இந்தப் பகுதிகளும் மகாராஷ்டிரத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் முன்னணியில் இருப்பது சிவசேனை கட்சி.

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கொன்று இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை பெல்காம் உள்ளிட்ட 865 மராத்தி பேசும் கிராமங்களை மத்திய அரசின் ஆளுகைக்குக் கொண்டுவர வேண்டும் என்று மகாராஷ்டிரம் கேட்டிருக்கிறது. கர்நாடகத்தின் மராத்திப் பகுதிகளை மகாராஷ்டிரத்துடன் இணைப்பதற்கு எதிராக கர்நாடக அமைப்புகளும் போராட்டங்கள் நடத்த, பிரச்சினை இழுபறியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இத்தகைய பிரச்சினைகள் சிவசேனைக்குப் பலம் சேர்ப்பவை.

பிற மாநிலப் பகுதியை மகாராஷ்டிரத்துடன் சேர்ப்பது தொடர்பாக மட்டும் கோரிக்கைகள் எழவில்லை. மகாராஷ்டிரத்திலிருந்து இன்னொரு மாநிலம் உருவாக்கவும் கோரிக்கைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. மகாராஷ் டிரத்தின் வறட்சி மிகுந்த பகுதியான விதர்பாவைத் தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று பல பத்தாண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. கூடவே, விவசாயிகளின் தற்கொலையும் நாட்டிலேயே இங்குதான் அதிகம். இதற்காக விதர்பாவைச் சார்ந்து சிறுசிறு இயக்கங்கள், கட்சிகளெல்லாம் உருவாகியிருக்கின்றன. இந்தக் குரல்களுக்குத் தேர்தல் சமயத்தில் ஒரு செல்வாக்கு உண்டு.

வாக்கு வங்கி யாருக்கு?

ஆக, இந்தச் சாதியக் கணக்குகள், பிராந்தியக் கணக்குகள் எல்லாமும் சேர்ந்துதான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. நரேந்திர மோடி எனும் பெரும் பிம்பம், பெருகிவரும் தேசியவாத அலை, இந்துத்துவ எழுச்சி இவற்றைத் தாண்டி இந்தச் சாதி – பிராந்தியக் கணக்குகளையெல்லாமும் கூட்டிக்கழித்தே முன்னகர்ந்துவருகிறது பாஜக-சிவசேனை கூட்டணி.

ஐந்தாண்டு கால ஆட்சியில் சாதனைகள் என்று சொல்லத்தக்க வகையில் அது எதையும் செய்திடவில்லை. கூட்டணிக்குள்ளும் அது உரசலைச் சந்திக்கிறது. ஆனால், எதிரே காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் அவற்றின் மோசமான சூழலில் இருக்கின்றன. ஆக, இரு தரப்பினருமே எதிர்த்தரப்பின் பலவீனத்தை நம்பியே களத்தில் நிற்கின்றனர். ஆட்சி யார் கையில் செல்லும் என்பது எப்படியானாலும் மகாராஷ்டிரத்தைத் தாண்டியும் அதன் முடிவுகள் தேசிய அளவில் தாக்கம் செலுத்தும்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மகாராஷ்டிரதீர்மானிக்கும் சாதிபிராந்தியக் கணக்குகள்Casteமராத்தாக்கள்சித்பவன் பிராமணர்கள்ஃபட்நவீஸ்தலித்துகள்பிராந்திய அரசியல்வாக்கு வங்கி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author