

ஆசை
மகாராஷ்டிரம் 1960-க்கு முன்பு வரை ஒன்றுபட்ட பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இதில் குஜராத்தும் ஒரு பகுதியே. இரு மொழி மாநிலமாக பம்பாய் இருந்தது. அதன் தலைநகரும் பம்பாயே. குஜராத்திகள் தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் கோரி, ‘மகா குஜராத்’ இயக்கத்தைத் தொடங்கினார்கள். இரு மொழி மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிர இயக்கம்’ உருவானது. மொழி அடிப்படையிலான இந்தப் பிரிவினைக்கு நேருவும் காங்கிரஸும் எதிராக இருந்தனர். ஆர்எஸ்எஸ்ஸும் அதன் அப்போதைய தலைவர் கோல்வால்கரும் இந்தப் பிரிவினைக்கு எதிராக இருந்தார்கள். இடதுசாரிகளால் பெரிதும் முன்னெடுக்கப்பட்டது ‘சம்யுக்த மகாராஷ்டிர இயக்கம்’. பல உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் 1960-ல் உருவானது.
மகாராஷ்டிரத்தின் நாக்பூர் இரண்டு இயக்கங்களுக்கு மிக முக்கியமானது. ஒன்று, ஆர்எஸ்எஸ். இன்னொன்று, அம்பேத்கரின் தலித்திய இயக்கம். மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு மிக்க ‘சித்பவன்’ பிராமணர் சமூகத்திலிருந்து வந்தவரும் நிறுவனருமான ஹெட்கேவார் தொடங்கி அதன் இன்றைய தலைவர் மோகன் பாகவத் வரை தங்களுடைய ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் கலாச்சாரத்துக்கான எதிர்க் கலாச்சாரமாகத் தன்னுடையதை முன்னிறுத்தும் குறியீடாகவே, தலித் சமூகத்திலிருந்து வந்த அம்பேத்கர் இரண்டு லட்சம் தலித் மக்களோடு பௌத்த மதத்தைத் தழுவுவதற்கான இடமாக நாக்பூரைத் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லப்படுவதுண்டு. இரு இயக்கத்தவருக்கும் நாக்பூர் என்றைக்குமே ஒரு திருவிழா நகரம்தான். ஆனால், இவ்வளவு பெரிய வரலாற்றையும் தாண்டி, சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாக்பூர், காங்கிரஸின் கோட்டையாகத்தான் பெரும்பாலும் இருந்துவந்திருக்கிறது. நாக்பூர் மக்களவைத் தொகுதி என்று எடுத்துக்கொண்டாலேகூட இதுவரை காங்கிரஸ் 14 முறை வென்றிருக்கிறது என்கிற ஒரு வரித் தகவல், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் செல்வாக்கையும் அங்கே பாஜக வளர எவ்வளவு உழைக்க வேண்டியிருந்திருக்கும் என்பதையும் சொல்லிவிடக் கூடியதாகும்.
பாஜகவுக்கு முன்...
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக உழைத்துவந்தாலும், 1990-களின் பிற்பகுதியில்தான் பாஜக இங்கே எழுந்து நிற்க ஆரம்பித்தது. வரலாற்றுரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால், தேவேந்திர ஃபட்நவீஸின் தந்தை கங்காதர ராவ் ஃபட்நவீஸ் அதன் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். பல தோல்விகளுக்குப் பிறகே மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அன்றைக்குப் பலர், தேர்தலில் வைப்புத்தொகையே கிடைக்காது என்ற நிலையிலும்கூட தோல்வி தெரிந்தும் போட்டியிட்டார்கள்; அப்போதெல்லாம் ஜனசங்கம், ‘பட்ஜி சேட்ஜி கட்சி’ என்றே அழைக்கப்பட்டது. அதாவது, பிராமண - பனியா கட்சி என்று மராத்தியர்கள் அதை அழைத்தார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை உள்ளே கொண்டுவரத் தொடங்கிய பின், இந்த நிலை மாறியது. இப்படி அதை இந்த இரு சமூகங்களுக்கு வெளியே எடுத்துச்சென்ற தலைவர்களில் முக்கியமானவர் வினோத் குதாதே படீல். அவர்தான் ஜனசங்கத்தின் சார்பாக மாநகராட்சித் தேர்தலிலும் பிற்பாடு பாஜகவுக்காக நாக்பூர் சட்டமன்றத் தேர்தலிலும் வென்ற முதல் நபர். இப்படிச் சிறுகச் சிறுகப் பெற்ற வெற்றிகளை வைத்து ஜனசங்கமும் பிற்பாடு பாஜகவும் மகாராஷ்டிரத்தில் வளர்ந்தன. மகாராஷ்டிர மாநிலம் காங்கிரஸின் கோட்டைகளுள் ஒன்று. அந்த நிலையிலிருந்து இன்று பாஜக வந்திருக்கும் இடத்துக்கிடையே நிறைய திருப்புமுனைகள் உண்டு. அதில் முக்கியமானது 1992 பாபர் மசூதி இடிப்பு. இதன் தொடர்ச்சியாக நடந்த கலவரங்களுக்குப் பிந்தைய காலகட்டம் இந்த இரு அமைப்புகளும் வேகமாக வளர வழிவகுத்தது. 1995 தேர்தலில் முதல் முறையாக பாஜகவும் சிவசேனையும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.
பாஜகவுக்கு முக்கியமான பல தலைவர்களை மகாராஷ்டிரம் தந்திருக்கிறது. அவர்களில் கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன், நிதின் கட்கரி என்று ஆரம்பித்து ஏக்நாத் கட்சே, பங்கஜா முண்டே, சுதிர் முன்கண்டிவார் போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்களில் கோபிநாத் முண்டே விபத்தொன்றில் கொல்லப்பட்டார். பிரமோத் மகாஜன் தனது சகோதரரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நிதின் கட்கரி மாநிலத்தைவிட மத்திய அரசுக்கு உரியவராகப் பார்க்கப்படுகிறார். மீதமுள்ளவர்களைக் காட்டிலும் இன்று வலுவான தலைவராகக் கட்சிக்கு தேவேந்திர ஃபட்நவீஸ் மாறியுள்ளார்.
ஃபட்நவீஸின் பின்னணி
1970-ல் நாக்பூரில் பிறந்தவர் தேவேந்திர ஃபட்நவீஸ். இவரது தந்தை கங்காதர ராவ் ஃபட்நவீஸும் அரசியல்வாதி. ஜனசங்கம், பின்னர் பாஜக என்று இரண்டிலும் உறுப்பினராக இருந்தவர். நெருக்கடிநிலையின்போது இந்திரா காந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர். தேவேந்திர ஃபட்நவீஸுக்கு 17 வயது ஆகும்போது அவரது தந்தை காலமானார் என்றாலும், தன் மகனை அரசியல் செல்வாக்கு சூழத்தான் விட்டுச்சென்றார்.
நிதின் கட்கரி, ஃபட்நவீஸின் தந்தையின் சீடர். ஃபட்நவீஸின் அத்தை ஷோபாதாய் ஃபட்நவீஸும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர்கள் புடைசூழ வளர்ந்த ஃபட்நவீஸ், சிறுவயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யிலும் பின்னாளில், பாரதிய ஜன யுவ மோர்ச்சாவிலும் உறுப்பினரானார். சட்டம் படித்துக்கொண்டிருந்தபோதே 21 வயதில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி உறுப்பினரானார். 27 வயதில் நாக்பூரின் இளம் மேயரானார். 1999-லிருந்தே நாக்பூர் தென்மேற்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்.
2014-ல், 44 வயதேயான தேவேந்திர ஃபட்நவீஸ் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பலருக்கும் ஆச்சரியம். வயதில் மற்றவர்களைவிட இளையவர், அதிகம் பிரபலமாகாதவர். ஆயினும், மோடி-அமித் ஷா ஆகிய இருவரின் கடைக்கண் பார்வை பட்டதால் ஃபட்நவீஸுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், ‘இந்தியாவுக்கு நாக்பூர் அளித்த பரிசு, தேவேந்திர ஃபட்நவீஸ்’ என்று மோடி புகழாரம் சூட்டியதே ஃபட்நவீஸ் முதல்வராக ஆக்கப்படுவதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது. அதே போல், 122 இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் நிலையில் பாஜக இருந்தபோது, பாஜகவின் சட்டமன்றத் தலைவராக ஃபட்நவீஸ் ஆக்கப்பட்டார். இது கட்சியிலுள்ள ஏக்நாத் கட்சே, கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, வினோத் தவ்டே ஆகியோருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வராக ஃபட்நவீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் இளைஞராக இருப்பதும் சரியான தருணத்தில், சரியான இடத்தில் தன்னை வைத்துக்கொண்டதும் பல நேரங்களில் அமைதியாக இருப்பதும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆயினும் ஃபட்நவீஸைக் கொண்டுவந்ததன் பின்னணியில் வேறு ஒரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. அது மகாராஷ்டிர அரசியலில் நிதின் கட்கரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் நிதின் கட்கரியின் சீடராக இருந்தாலும், பிற்பாடு அவரிடமிருந்து விலக ஆரம்பித்திருக்கிறார் ஃபட்நவீஸ். மகாராஷ்டிரத்தின் மாநில பாஜக தலைவராகத் தனக்கு வேண்டப்பட்ட மற்றொருவரான சுதிர் முன்கண்டிவாருக்கு இரண்டாம் முறையாக வாய்ப்பு தர வேண்டும் என்று நிதின் கட்கரி விரும்பியபோது, அவரது விருப்பத்துக்கு மாறாக ஃபட்நவீஸுக்கு அந்தப் பதவி தரப்பட்டது. அதேபோல்தான் அவரை முதல்வராக ஆக்கியதும் நிதின் கட்கரிக்கு எதிரான நகர்வாகவே பார்க்கப்பட்டது.
ஃபட்நவீஸ் முன்னுள்ள சவால்கள்
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஃபட்நவீஸ், முதல்வராக ஆன பின்பு, மாநிலத்தில் கட்சியில் தன் பிடியை இறுக்குவதற்கான நிறைய காரியங்களைச் செய்தார். முக்கியமாக, பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சே ஆகியோரை ஓரங்கட்டினார். ஏக்நாத் கட்சே மீது ஊழல் வழக்கு ஒன்று போடப்பட்டது. அது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவரது அரசியல் வாழ்க்கையை அந்த வழக்கு கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுவிட்டது. தற்போது அவருக்குத் தொகுதி வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அவரது மகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வினோத் தவ்டேவுக்கும் தொகுதி வழங்கப்படவில்லை. ராஜ் புரோஹித், பிரகாஷ் மேத்தா என்று முக்கிய தலைகளுக்குத் தற்போது தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தன்னுடைய காய் நகர்த்தல்களில் மோடியையும் அமித் ஷாவையும் ஃபட்நவீஸ் பிரதிபலிப்பதை நம்மால் அடையாளம் காண முடியும். வருங்காலப் பிரதமராகவும் ஃபட்நவீஸ் அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறார்.
ஃபட்நவீஸ் ஆட்சிக்கு வந்தபோது மகாராஷ்டிரமே தண்ணீர்ப் பஞ்சத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது. முக்கியமாக விதர்பா பகுதியில். அங்கேதான் விவசாயிகளின் தற்கொலை நாட்டிலேயே அதிகம். இந்தச் சூழ்நிலையில் ஆட்சியில் அமர்ந்த ஃபட்நவீஸ் 2019-ல் தண்ணீர்ப் பஞ்சமில்லாத மகாராஷ்டிரத்தை உருவாக்குவேன் என்று உறுதி கூறினார். இன்றுவரை அந்த இடத்தை நோக்கி இம்மியளவுகூட நகர்ந்தபாடில்லை. இன்னமும் தண்ணீர்ப் பஞ்சம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 2018-ல் விவசாயிகளின் பெரும் அணிவகுப்பு ஒன்று மும்பையை நோக்கி வந்தது. இதையடுத்து, அரசு சில வாக்குறுதிகள் தந்தன. ஆனால், அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படாததையடுத்து 2019 பிப்ரவரியில் இன்னொரு அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு கூப்பிட்டுப் பேசிய பிறகு, அது கைவிடப்பட்டது. ஃபட்நவீஸ் ஆட்சிக்கு வந்தபோது அவர் எதிர்கொண்ட பெரும் சவால்களுள் ஒன்றாக மராத்தா இடஒதுக்கீடு இருந்தது. மராத்தாக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, அரசு 2018-ன் இறுதியில் மகாராஷ்டிர அரசு மராத்தாக்களுக்கு 16% இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், அது செல்லுமா செல்லாதா என்பது உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஃபட்நவீஸ் அரசு, பல்வேறு தருணங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. முக்கியமாக பீமா கோரேகான் சம்பவத்தைக் கையாண்ட விதமும் இடதுசாரி, தலித்தியச் செயல்பாட்டாளர்களைக் கைதுசெய்ததும் ஃபட்நவீஸ் அரசின் மீது தலித் மக்களைக் கோபம்கொள்ள வைத்திருக்கிறது.
ஃபட்நவீஸின் எதிர்காலம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அநேகமாக யாருக்குமே தெரியாத ஒருவராக இருந்த ஃபட்நவீஸ், இன்று இந்தியா முழுமையும் தன்னை உற்றுப்பார்க்கும் வகையில் வலிமையான ஒருவராகத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ளார். கட்சியில் அவரது பலம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு டெல்லியில் உள்ள தலைமையின் ஆசிர்வாதமும் இருக்கிறது. இந்தத் தருணத்தில் ஃபட்நவீஸின் ஒவ்வொரு நகர்வும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. தண்ணீர்ப் பஞ்சம், விவசாயிகளின் கோபம் இவற்றையெல்லாம் மீறியும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி மகாராஷ்டிரத்தில் 48-க்கு 41 இடங்களை வென்றிருக்கிறது. ஆளும் கட்சி மீதான அதிருப்தியை ஒன்றுதிரட்ட முடியாமல் எதிர்க்கட்சிகள் அடைந்த தோல்வியாகவும் இது பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு அளித்த வெற்றியை மறுபடியும் ஃபட்நவீஸ் சட்டமன்றத் தேர்தலில் பெற்றுத்தருவாரா அல்லது ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையில் அடித்துச் செல்லப்படுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள தேர்தல் முடிவு வரை காத்திருப்போம்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in