Published : 14 Oct 2019 09:03 AM
Last Updated : 14 Oct 2019 09:03 AM

வணக்கம் மகாராஷ்டிரம்!

ஆசை

அடுத்த முதல்வர் யார்? மகாராஷ்டிரம் இந்த மாதத்தில் முடிவெடுக்கவிருக்கிறது. இந்தியாவின் ஏனைய 27 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைப் போல மகாராஷ்டிரத் தேர்தலை நாம் அணுகிவிட முடியாது. ஏன்? ஏனென்றால், இந்தியாவில் பிரதமர் பதவிக்கு அடுத்து, மத்திய அமைச்சர்களுக்கு அப்பாற்பட்டு, செல்வாக்கு வாய்ந்த பதவி என்றால் அது மகாராஷ்டிர முதல்வர் பதவிதான். இந்தியாவின் ஏனைய முதல்வர்களும் மகாராஷ்டிர முதல்வரும் ஒன்றல்ல. பல லட்சம் கோடிகள் புரளும் நாட்டின் பொருளாதாரத் தலைமையகமான மும்பை அவருக்குக் கீழே வருவதாலேயே நாட்டின் பெரும்பான்மை வணிக நிறுவனங்களுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார்; மகாராஷ்டிர அரசியலில் கோலோச்சுவதன் வழியாகவே தேசிய அரசியலில் தமக்கென்று ஓரிடத்தைப் பிடித்துவிடுகின்றனர் மகாராஷ்டிர அரசியல்வாதிகள். இந்திய அரசியலில் முக்கியமானதாகக் கருதப்படும் மகாராஷ்டிரத் தேர்தல் சமயத்தில், அங்கு நிலவும் அரசியல் சூழலை ஒரு வேக நோட்டம் இடுவதே இந்த ஒரு வாரக் குறுந்தொடரின் நோக்கம்.

மகாராஷ்டிர வரலாறு

இந்தியாவின் மேற்கு எல்லையோர மாநிலமான மகாராஷ்டிரத்தின் தலைநகர் மும்பை என்பது எல்லோருக்கும் தெரியும். மகாராஷ்டிரத்துக்கு வெளியே பலருக்குத் தெரியாதது, அதற்குக் குளிர் காலத் தலைநகரம் ஒன்றுண்டு: நாக்பூர்.மெளரியப் பேரரசர்கள் தொடங்கி முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் வரை நீளக்கூடிய மகாராஷ்டிரத்தின் ஆட்சியாளர்களில் சமகால அரசியலோடு பொருத்திப் பார்க்க வேண்டிய மராத்தாக்கள்; மகாராஷ்டிரத்தின் செல்வாக்கான பெரும்பான்மைச் சமூகம். அவர்களோடு கூடவே வரலாறு தொடங்கி இன்று வரை கவனிக்க வேண்டிய இன்னொரு சமூகம் சித்பவன் பிராமணர்கள். மகாராஷ்டிரத்துக்கு வெளியிலும் கலாச்சாரத் தளத்தில் செல்வாக்கு செலுத்தும் சமூகம் இது.

மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, ‘பம்பாய் மாநிலம்’ உருவாக்கப்பட்டபோது, ஏனைய பல மொழிவாரி மாநிலங்களைப் போல அது மகாராஷ்டிரத்துக்குத் தீர்வாக அமையவில்லை. பிரச்சினைகளை அதிகப்படுத்தியது. ஏனென்றால், அன்றைய ‘பம்பாய் மாநிலம்’ மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ‘சம்யுக்த மகாராஷ்டிர சமிதி’ என்று தனி மகாராஷ்டிரத்துக்கும், ‘மகா குஜராத்’ என்று குஜராத்துக்கும் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள், போராட்டங்களின் விளைவாக மராத்தி, கொங்கணி பேசும் மக்கள் அடங்கிய பிராந்தியங்கள் ‘மகாராஷ்டிரம்’ எனும் பெயரிலும், குஜராத்தி, கட்சி மொழி பேசும் பிராந்தியங்கள் ‘குஜராத்’ எனும் பெயரிலும் 1960-ல் தனித் தனி மாநிலங்களாக அமைந்தது, இன்றைய அரசியல் சூழலுக்கு எழுதப்பட்ட முன்னுரை என்றே சொல்லலாம். ஆம், இந்த இரு மாநிலங்களிலுமே ‘மராத்தி’, ‘குஜராத்தி’ அடையாள அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துவதாகும். ஆனால், இந்த இன அடையாள அரசியலையும் மத அடையாள அரசியல் உள்வாங்கியிருக்கிறது.

பொருளாதாரச் செல்வாக்கு

வணிகத்துக்குப் பேர்போன மகாராஷ்டிரம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் பங்களிக்கும் மாநிலமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரத்தின் பங்கு மட்டும் 15%-க்கும் அதிகம். நாட்டின் தொழில் துறையில் 13% இம்மாநிலத்தின் பங்களிப்பு என்று கூறப்படுகிறது. வளர்ச்சி விகிதம் 9.4%. தலைநகர் மும்பை, இந்தியாவின் நிதித் துறை மற்றும் வர்த்தகத் துறையின் தலைநகராகக் கருதப்படுகிறது. மருந்துப் பொருட்கள் - மருத்துவச் சாதனங்கள் தயாரிப்பு, மென்பொருள் தயாரிப்பு, மின்னணுப் பொருட்கள், பொறியியல் துறை, எண்ணெய், எரிவாயு, உணவுப் பொருட்கள், வங்கித் துறை, நிதித் துறை, காப்பீட்டுத் துறை, ஜவுளித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் இது. என்றாலும், பெரும்பான்மை மக்களுக்கு விவசாயம்தான் ஆதாரம்.

கோதாவரி, கிருஷ்ணா, தபதி ஆகியவை மகாராஷ்டிரத்தின் பிரதான ஆறுகள். இம்மாநிலத்தின் நாசிக் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் கோதாவரி ஆற்றின் சமவெளி மேட்டுப் பகுதி முழுவதும், இம்மாநிலத்துக்குள்ளேயே அமைந்திருக்கிறது. கோதாவரியின் வடிநிலம் மகாராஷ்டிரத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி அளவு (1,52,199 சதுர கிமீ). மற்றொரு முக்கிய நதியான கிருஷ்ணா உற்பத்தியாவதும் இம்மாநிலத்தில்தான். நர்மதை, தபதி ஆகிய நதிகள் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுக்கு அருகே பாய்கின்றன.

பிமா போன்ற நதிகளும், கோதாவரி ஆற்றின் பர்வாரா, மாஞ்சரா, வைநங்கங்கா போன்ற கிளை நதிகளும், தபதி ஆற்றின் பூர்ணா போன்ற கிளை நதிகளும் மாநிலத்துக்கு வளம் சேர்க்கின்றன. ஆனாலும், இந்தியாவிலேயே தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் எதிர்கொள்ளும் மாநிலங்களில் ஒன்று இது. அரசியலில் பெரும் செல்வாக்கை உண்டாக்கும் பிரச்சினையும் இது. முறையாகத் திட்டமிடப்படாத தொழில்மயமாக்கலுக்கும் நகரமயமாக்கலுக்கும் மாநிலம் கொடுக்கும் விலை இது.

மாநிலப் பரப்பளவில் 17% ஆக வனப் பகுதிகள் குறைந்திருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளிலும் காடுகள் அதிகம். மக்கள்தொகை அதிகரிப்பு, வேகமான வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக வனப் பகுதிகள் வேகமாகக் குறைந்துவருகின்றன. கோளாறான நகர்மயமாக்கல் மாநிலமும் இது. கூடவே, பிராந்தியப் பாகுபாடுகளும் நிறைய உண்டு.

தவிக்கும் விதர்பா

மகாராஷ்டிரத்தின் கிழக்கே உள்ள விதர்பா பகுதி நாட்டின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பகுதியாகும். கடந்த பத்தாண்டுகளில் மகாராஷ்டிரத்தில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களில் 70% விதர்பாவைச் சேர்ந்தவர்கள். 2018-ல் நாசிக்கிலிருந்து மும்பை வரை விவசாயிகள் நடத்திய பிரம்மாண்டப் பேரணி நாட்டையே உலுக்கியதை இங்கே நினைவுகூரலாம். கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் இந்தப் பகுதி, பொருளாதாரரீதியில் புறக்கணிக்கப்படுவதாக இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். அதனால், தனி விதர்பா மாநிலத்துக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக இங்கு எழுந்துவருகின்றன. எனினும், தனிமாநிலப் பிரிவினைக்கு சிவசேனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. வளர்ச்சித் திட்டங்கள், புதிய தொழில்கள் எதுவும் இந்தப் பிராந்தியத்தை எட்டாததால் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.

மக்கள்தொகை, நிலப்பரப்பு செல்வாக்கு

செல்வத்தில் மட்டும் அல்ல; நிலப்பரப்பு, மக்கள்தொகை அளவிலும் பெரிதானது மகாராஷ்டிரம். 3.07 லட்சம் சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட மகாராஷ்டிரம் (தமிழ்நாட்டின் பரப்பு 1.3 லட்சம் ச.கி.மீ), பரப்பளவில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தை வகிப்பது; நாட்டின் மொத்தப் பரப்பளவில் இது 9.3%. ஒரு சதுர கிமீ பரப்பில் 365 பேர் வாழும் மக்கள் அடர்த்தியைக் கொண்டது இம்மாநிலம்
(தமிழ்நாட்டில் 555 பேர்).

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தின் மக்கள்தொகை 11,23,74,333. இது நாட்டின் மக்கள்தொகையில் 9.28%. மக்கள்தொகையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கும் மாநிலம். 79.8% பேர் இந்துக்கள். மகாராஷ்டிரத்தின் மக்கள்தொகையில் 30-32% வரை இருக்கும் மராத்தாக்கள்தான் இங்கு பெரும்பான்மையினர். அடுத்த நிலையில் பட்டியலின சமூகத்தினர் 11.8%, பழங்குடியினர் 8.9% இருக்கிறார்கள். பிராமணர்கள் 9%. முஸ்லிம்கள் 11.5%, சீக்கியர்கள் 0.2%, கிறிஸ்தவர்கள் 1.0%, சமணர்கள், 1.2%, பெளத்தர்கள் 5.8%. இந்தியாவில் வசிக்கும் பெளத்தர்களில் 77.36% பேர் வசிப்பது இம்மாநிலத்தில்தான். மக்களவையில் 48 தொகுதிகள் (8.83% பிரதிநிதித்துவம்), மாநிலங்களவையில் 19 இடங்களும் (7.6% பிரதிநிதித்துவம்) பெற்றிருக்கிற மகாராஷ்டிரத்தின் சட்டமன்றத்தில் 288 தொகுதிகள் இருக்கின்றன.

யார் கை ஓங்குகிறது?

ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டைகளில் ஒன்று மகாராஷ்டிரம். பாபர் மசூதி இடிப்புக்குப் பின் சூழல் மாறிப்போனது. நாட்டிலேயே அப்போது அதிகம் கலவரங்கள் நடந்த இடங்களில் ஒன்று மும்பை. விளைவாக 1995-ல் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சியமைத்தது. காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் சேர்ந்த சரத் பவார், 1999-ல் மீண்டும் விலகி, தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸும் இணைந்து இடையில் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் பாஜக – சிவசேனை கூட்டணிக்கு முட்டுக்கட்டையைப் போட்டன என்றாலும், மோசமான ஆட்சியாகப் பெயர் எடுத்த அந்த ஆட்சிகள் மீண்டும் பாஜக – சிவசேனை கூட்டணி அரியணை ஏற வழிவகுத்ததுடன் மக்கள் மத்தியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இரண்டையும் செல்வாக்கு இழக்கவும் வைத்தது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் மாநிலத்தின் 48 இடங்களில் பாஜக கூட்டணி இரண்டு முறையும் 41 இடங்களை வென்றது இன்றுள்ள சூழலைச் சொல்லிவிடக்கூடியதாகும். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை, அனைத்திந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன், இந்திய விவசாயிகள் – உழைப்பாளர்கள் கட்சி போன்ற கட்சிகளெல்லாம் இருந்தாலும், பாஜகவும் சிவசேனையுமே தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தத் தேர்தலில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், வலுவான நிலையிலுள்ள பாஜக – சிவசேனை கூட்டணி ஒரு பக்கம் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸோடு யுத்தம் நடத்துகிறது; இன்னொருபுறம், தங்களுக்குள்ளேயே யுத்தம் நடத்திக்கொள்கிறது. ஆம், தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஆட்சியதிகாரத்தை நோக்கி நகரும் ஆதித்ய தாக்கரே முதல்வர் கனவில் மிதக்கிறார். ஆக, ஒரு கூட்டணிக்குள் இரு முதல்வர் வேட்பாளர்கள். முதல்வர் தேவேந்திர ஃபட்நவீஸின் ஆட்சி அவ்வளவு கோளாறுகளைத் தந்திருக்கும்போதும் பாஜக கூட்டணிக்குள் நிலவும் நிழல் யுத்தத்தைத் தாண்டி எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. காரணம், அவை அவ்வளவு சிதிலமடைந்திருக்கின்றன. தனித்தனியே ஒவ்வொரு கட்சியையும் மகாராஷ்டிர சமூகச் சூழலுடன் இணைத்துப் பார்க்கும்போதுதான் இன்றைய மகாராஷ்டிர அரசியல் சூழலை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். மறுவகையில் இந்தியாவைப் புரிந்துகொள்ளவும் அது உதவும்.

(பார்ப்போம்...)

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x