Published : 11 Oct 2019 09:23 am

Updated : 11 Oct 2019 09:23 am

 

Published : 11 Oct 2019 09:23 AM
Last Updated : 11 Oct 2019 09:23 AM

இந்திய - சீன உறவில் மாமல்லபுர மாநாடு புத்துயிர்ப்பூட்டுமா?

indo-china-relationship

ஜூரி

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மிகவும் பின்தங்கியிருந்த இந்தியாவும் சீனாவும் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ச்சியடைந்துள்ளன. உலகின் மொத்த மக்கள்தொகையான 770 கோடியில் இவ்விரு நாடுகளும் 37% மக்களைக் கொண்டிருக்கின்றன. 140 கோடி மக்கள்தொகையுடன் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் சீனாவும், 130 கோடியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் எடுக்கும் எந்த முடிவும் உலக நாடுகளால் அண்ணாந்து பார்க்கப்படுகின்றன. பொருளாதாரச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் இரு நாடுகளும், இப்போதைக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையாலும், அமெரிக்க அரசு எடுத்துள்ள பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் வெவ்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தப்பிக்கப் பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்தை இரண்டு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன. அதிலும் முக்கியமாக, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்றுமாசு அதிகரிப்பால் இந்தியாவும், கான்டன் உள்ளிட்ட நகரங்களின் மாசுக்களால் சீனாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டிய தேவை இரண்டு நாடுகளுக்கும் இருக்கிறது. இப்படிப் பொதுவான பல அம்சங்கள் இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவும் சமாதானமும் நிலவுவது அவசியம். அடுத்த கட்டமாக தொழில், சேவைத் துறைகளில் உடன்பாடுகளைச் செய்துகொண்டால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உற்பத்தியையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

பதற்றம் தணியும்

இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான பிரச்சினைகள் இல்லாவிட்டாலும், வடகிழக்கு எல்லைப் பகுதியில் அருணாசல பிரதேசம் உட்பட பல இடங்களைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. கடந்த ஆண்டு டோக்லாம் என்ற இடத்தில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட காட்சி உலக அளவில் விவாதமானது. 73 நாட்களுக்குப் பிறகுதான் அந்தப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காணப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த தேடப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சய்யீது, காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து ஆகியவை தொடர்பாக சீனா எதிர்க் கருத்துகளை வெளியிட்டிருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அது பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை.

‘என்எஸ்ஜி’ என்றழைக்கப்படும் அணுசக்தி தயாரிப்புக்கான சாதனங்களையும் இடுபொருட் களையும் பரிமாறிக்கொள்ளும் குழுவில் இந்தியா இடம்பெறுவதையும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினர் குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதையும் சீனா கடுமையாக எதிர்த்துவருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது பட்டுப்பாதை பொருளாதாரப் பிராந்தியத் திட்டத்தைத் தொடங்கிய சீனா, இந்தியா அதில் சேராதது குறித்து இன்னமும் அதிருப்தியுடனேயே இருக்கிறது. இப்படி இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் குறையாமலும் மாறாமலும் தொடர்கின்றன.
அதேவேளையில், ஒற்றுமைக்கான துறைகளை ஆராய்வதிலும் இரு நாடுகளும் அக்கறை செலுத்துகின்றன. சீனாவின் உய்குர் மாகாணத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவது, திபெத்தில் அதிருப்தியாளர்கள் அடக்கப்படுவது, ஹாங்காங்கில் தங்களுடைய உரிமைகளுக்காக மக்கள் போராடுவது குறித்து இந்தியா வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்காமல், அவையெல்லாம் சீனாவின் ‘உள்விவகாரம்’ என்று அமைதி காக்கிறது.

மாறிவரும் அணுகுமுறை

கடந்த அக்டோபர் 1-ல் ‘சீன தேசிய தினம்’ கொண்டாடப்பட்டது. அப்போது பூம்லா என்ற இந்திய எல்லைக்கு அருகில் இருந்த சீன ராணுவத் தளபதியும் வீரர்களும் முழுச் சீருடையில் இந்தியத் தளபதி பிரிகேடியர் ஜுபின் பட்நாகரையும் வீரர்களையும் கட்டியணைத்து வரவேற்றதுடன் இனிப்புகளையும் சிறப்புப் பலகாரங்களையும் அளித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சீன ராணுவத்தினர் விரும்பி அருந்தும் ‘மவுதாயி’, விருந்தில் முக்கிய இடம்பிடித்தது. ஆண்டுதோறும் நான்கு முறை இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் சந்தித்து இதுபோல வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். சீனத் தரப்பில் அக்டோபர் 1 மற்றும் மே 1 (தொழிலாளர் தினம்) இப்படி வாழ்த்தும் வரவேற்பும் நடைபெறுகிறது. இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய இரு நாட்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். 1990-க்குப் பிறகு, இரு நாடுகளின் ராணுவங்களும் இப்படி 84 முறை சந்தித்துள்ளன என்பதிலிருந்தே சுமுக நிலையைத்தான் இரு தரப்பும் விரும்புகின்றன என்பது புரியும்.

ராணுவ - பொருளாதார வல்லரசாக சீனா இருந்த காலத்தில் இந்தியாவை அச்சுறுத்திய மாதிரி இனியும் அச்சுறுத்த முடியாது என்ற உண்மையை இப்போது புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலையில்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான உச்சி மாநாடு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தைத் தணித்து நட்புறவுக்கு வலுசேர்க்கக்கூடும். சர்வதேச அரங்கில் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சமூக, பொருளாதார, ராணுவ நிலை மாற்றங்கள் இந்தியா, சீனா இரண்டுக்குமே நேரடியாகத் தொடர்பில்லாதவை என்றாலும் கவனிக்கப்பட வேண்டியவை.

வலுப்படும் உறவு

இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளுக்கு சீனா கடன் கொடுத்து, அங்கே ராணுவத் தளங்களை அமைத்தாலும் இந்தியா அஞ்சவில்லை. அதேசமயம், சீனாவுக்கு எதிரான நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி பதில் நடவடிக்கையை எடுத்துவருகிறது. 2018 ஏப்ரல் 18-ல் ஊஹான் என்ற சீன நகரில்
ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று உச்சி மாநாடு நடத்தினார். ஊஹான் என்பது சீனாவின் புதிய தொழில் நகரம். அதன் செழிப்பைக் காட்டுவதன் மூலம், தங்களுடைய பொருளாதார வலிமையைக் காட்டினார் ஜி ஜின்பிங். நரேந்திர மோடியோ சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பண்டைக் காலத்திலிருந்தே வாணிப, கலாச்சார, கல்வித் தொடர்புகள் இருந்ததை உணர்த்தும் விதத்தில் மகாபலிபுரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இந்த மாநாட்டுக்கு விவாதப் பட்டியல் ஏதும் வகுக்கப்படவில்லை. இரு தலைவர்களும் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் ஆலோசனைகளை நடத்துவார்கள். காஷ்மீரின் அந்தஸ்தைக் குறைத்தது சரியல்ல என்று சீன அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், இந்த உச்சி மாநாட்டில் அதைப் பற்றி இருவரும் பேச மாட்டார்கள் என்று தெரிகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்திய - சீன இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த என்னென்ன செய்யலாம் என்று இருவரும் செயல்திட்டம் வகுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Indo china relationshipமாமல்லபுர மாநாடுதொழில் வளர்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author