Published : 11 Oct 2019 09:18 AM
Last Updated : 11 Oct 2019 09:18 AM

சீன அதிபரின் வருகையைத் தமிழ்நாடு ஏன் பயன்படுத்தவில்லை?

ஆழி செந்தில்நாதன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அரசுத் தலைவர் ஜி ஜின்பிங்குக்கும் இடையிலான ‘முறைசாரா சந்திப்பு’க்காக மாமல்லபுரம் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. இவ்விரு தலைவர்களுக்கும் இடையில், 2018-ல் சீனாவிலுள்ள ஊஹான் நகரத்தில் நடைபெற்ற ‘முறைசாரா சந்திப்பு’க்குப் பிறகு இது இரண்டாவது சந்திப்பு. எல்லைப் பதற்றம், காஷ்மீர், ஹாங்காங், அமெரிக்க - சீன வர்த்தகப் போட்டி, சீனாவுக்குப் போட்டியாக ஆசியாவில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் உருவாக்கிவரும் நாற்தரப்புப் பாதுகாப்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களின் பின்னணியிலும் ‘நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கை’ என்றே இந்தச் சந்திப்பை ராஜதந்திர வட்டாரம் நோக்குகிறது. ஆனாலும், இந்திய - சீன உறவுகளில் எந்த மிகப் பெரிய அதிரடி மாற்றத்தையும் இந்தச் சந்திப்பு உருவாக்கிவிடப்போவதில்லை என்று இரு தரப்பினருமே ஜாக்கிரதையாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள். ராஜதந்திரம் சார்ந்த உயர்நிலைத் தொடர்புகளை அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்வதே இந்தச் சந்திப்புகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச உறவுகள் ஒருபக்கமிருக்க, இத்தகைய சந்திப்புகளின் ஊடாக வேறு சில பலன்களையும் சம்பந்தப்பட்ட நாடுகள் அடைய முடியும். ஏனென்றால், ராஜதந்திர உறவுகள் இப்போதெல்லாம் பல்தடச் செயல்பாடுகளாகவே (multi-track) இருக்கின்றன. அரசு, ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்த தொடர்புகள் பிரதானமாக இருந்தாலும், மக்களுக்கிடையிலான தொடர்புகள், சமூகங்களுக்கு இடையிலான உறவு, கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் போன்றவையும் ராஜதந்திரரீதியில் முக்கியமானவை என இப்போது கருதப்படுகிறது. அந்த நோக்கத்திலிருந்து பார்த்தால், மல்லையில் ஒரு புதிய தொடக்கத்தை நாம் செய்ய முடியும். அது தமிழ்நாட்டுக்கு அவசியமானது. இந்த முக்கிய நிகழ்வை புது டெல்லியின் பார்வையிலும் பெய்ஜிங்கின் பார்வையிலும் பார்ப்பதைப் போலவே சென்னையின் பார்வையிலும் பார்க்க முடியும்!

தமிழக – சீன உறவு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் என்பவை இருவிதம். முதலாவது, இமயமலையைக் கடந்து உருவான உறவு. இதுதான் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட, ஆனால் பதற்றம் நிறைந்த உறவு. புத்தமும் யுத்தமும் கலந்த உறவு, அடிக்கடி பனிபோல உறைந்துபோகும் உறவு. மற்றொரு உறவு சோழ மண்டலக் கரையினூடாக ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத்துக்கு முன்பு தொடங்கிய தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான கடல் வழிப் பட்டுப்பாதை உறவு. அன்று அலைபோல் ஓயாதிருந்த, இப்போது ஓய்ந்திருக்கிற உறவு.

இமயமலை அடிவாரச் சமூகங்களுக்கு அப்பால், இந்தத் துணைக்கண்டத்தில் சீனாவோடு வரலாற்றுரீதியில் பெருந்தொடர்புகளை வைத்திருந்தது தமிழ்நாடுதான். ஆனால், இந்தியத் துணைக்கண்டத்துக்கும் சீனப் பெருநிலத்துக்கும் இடையிலான உறவில் தமிழ் - சீன உறவு அதிகம் பேசப்பட்டதில்லை. மல்லை நிகழ்வுக்குப் பிறகு, அந்த உண்மை இனி வெளிச்சத்துக்கு வரக்கூடும். எடுத்துக்காட்டாக, மாமல்லபுரம் இருதரப்பினருக்குமே இருவேறு குறியீடுகளாக இப்போது தோன்றுகிறது!

பல்லவப் பேரரசு நிலவிய காலத்தில், திபெத்தின் செல்வாக்கை முறியடிப்பதற்காக சீனப் பேரரசானது பல்லவர்களின் உதவியை நாடிய வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார், இந்திய ராஜதந்திரியும், முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன். சீன அரசாங்கத்தின் எண்ண ஓட்டங்களை வெளியிடும் இதழான ‘குளோபல் டைம்ஸ்’ சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரை வேறொரு குறியீடாக நமக்குத் தோன்றுகிறது. ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் தாங் வம்ச காலத்தைச் சேர்ந்த அறிஞர் யுவான் சுவாங் காஞ்சிபுரத்துக்கு வந்து, தன் ஆய்வை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி அதில் எழுதியிருந்தார், ஷாங்காயிலுள்ள சீன - தெற்காசிய ஒத்துழைப்பு மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுச்செயலாளர் லியூ ஜோங்யி. நாராயணனுக்கும் லியூவுக்குமான நுண்ணிய பார்வை வித்தியாசம்தான் ராஜதந்திரம்.

தமிழ்நாட்டின் குரல் எங்கே?

சென்னையின் தரப்பிலிருந்து ஒரு பார்வை – தமிழக அரசின் சார்பில் – வெளிப்பட்டிருக்கலாம். பிற்காலச் சோழர்கள் தென்கடலில் தங்கள் இறையாண்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சோங் வம்ச கால சீனர்களோடு நேரடியாகத் தொடர்புகொண்டதையும், கடல்வழி பட்டுப்பாதையில் காணப்பட்ட அதிசயிக்கத்தக்க தமிழ் - சீன உறவுகளையும் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கலாம்.
சமீபத்தில், சீனாவின் புகழ்பெற்ற ஷாவ்லின் கோயிலுக்குச் சென்றிருந்தேன். போதி தருமர் என்கிற பல்லவ ஐதீகம் இன்னமும் சீனர்களை ஈர்க்கிறது என்பதையும், சீனாவின் மூன்று மெல்லதிகாரச் சக்திகளான குங் ஃபூ, தேநீர், ஜென் (சான்) பெளத்தம் ஆகியவை எவ்வாறு தொன்மமாகவேனும் காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இன்றுகூட அங்கே பார்க்க முடிகிறது. கடவுளர்களையே ராஜதந்திர விளையாட்டில் பயன்படுத்தும் இந்த உலகில், நாம் இதுபோன்ற ஐதீகங்களை நிச்சயமாகப் பயன்படுத்த முடியும். அதற்கு நமக்குப் புத்தி வேலை செய்ய வேண்டும்.

வரலாறு நெடுக சீன - தமிழ் உறவுகளின் தடங்கள் தெரிகின்றன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் மூன்று வர்த்தகக் குழுக்கள் சீனாவுக்குச் சென்றன. இந்தியத் துணைக்கண்டத்துப் பொருட்களையும் அரபு, யவனப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக சீனர்களுக்காகக் கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்யும் பணியில் தமிழ் வணிகர்கள் ஈடுபட்டபோது. சோழ மன்னர்கள் (சூலியன் என சீனாவில் இவர்களை அழைப்பார்கள்) தென்கிழக்காசியாவின் சாவக இடைத்தரகர்களைக் கடந்து நேரடியாக சீனப் பேரரசிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முயன்றார்கள். அதற்குப் பின், உலகின் மாபெரும் பேரரசாகக் கருதப்பட்ட குப்ளாய் கானின் யுவான் வம்சப் பேரரசின்போது இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது. தென்சீனாவின் சுவன்ஜோ நகரத்தில் தமிழ் வணிகர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலின் சிதிலம் இன்னமும் அதற்குச் சான்றாகவே இருக்கிறது. கிபி 1281-ல் பதிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, சீன - தமிழ் இருமொழிக் கல்வெட்டு அந்தக் கதையைச் சொல்கிறது.

தொடரும் சமூக உறவு

செக்சேய் கான் என்றழைக்கப்பட்ட குப்ளாய்கானின் உதவியோடு அந்தக் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு. அந்தக் கோயிலுக்கு திருக்கானீச்சுவரம் என்றும் ஒரு பெயர் உண்டெனக் கூறுகிறார்கள். அதே குப்ளாய்கானின் ஆட்சிக்காலத்தில்தான் மார்க்கோபோலோ தமிழகத்தின் குணகடல், குடகடல் கப்பல்கள் ஹாங்ஜோவுக்குப் பெருமளவில் வந்ததைக் கண்ணுற்றிருக்க முடியும். அதனால்தான், அவர் பாண்டிய நாட்டுக்கும் வந்தார்.

அப்போது குமரிப் பெருங்கடலில் தீபகர்ப்பத் தெற்காசியப் பரப்பில் தமிழ் கோலோச்சியது. புகழ்பெற்ற சீன கடற்படைத் தளபதி ச்சங் ஹ, 1409-ல் இலங்கைக்கு வந்தபோது சீன, அரபிய, தமிழ் என மும்மொழிகளில் ஓர் இறை வணக்கக் கற்பலகையை நாட்டிவிட்டுச் சென்றது அதைத்தான் குறிக்கிறது. காலனிய ஆட்சியாளர்கள் வரும்வரை இந்த உறவு தொடர்ந்தது. இப்போதும் அந்த சிங்கை, மலேசியாவினூடாக தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் சமூக உறவாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மல்லையில் அந்த உறவு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தச் சந்திப்புக்கான சென்னை பார்வையாக இருக்க முடியும். இந்தச் சந்திப்புக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் தருகிறது என்று எழுதும் லியூ, இதை ஆசியச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான சீன முயற்சியின் ஒரு அம்சமாகப் பார்க்கிறார். ஆனால், அப்படியொரு ஆசியப் பெருஞ்சமூகத்தைக் கட்டமைக்கும்போது, தென்சீனாவுக்கும் தீபகற்ப தெற்காசியாவுக்கும் இடையிலான உறவை அவர்கள் மறந்துவிட முடியுமா? கிழக்கே சீன, சாவக வர்த்தகத்தையும், மேற்கே அரபு, பாரசீக, யவன வர்த்தகத்தையும் இணைத்த மையப்புள்ளியாக இருந்தது மாமல்லபுரம் வீற்றிருக்கும் அந்த சோழ மண்டலக் கடலோரம்தான் என்பதை ‘பெல்ட் அண்டு ரோடு’ முன்முயற்சி எடுக்கும் சீனாவால் மறுத்துவிட முடியுமா? அல்லது, போட்டிகள் இருந்தாலும் போர் ஆரவாரமற்ற இப்பகுதியில்தான் சீனாவோடு நெகிழ்வாக உறவாட முடியும் என்பதை இந்தியாதான் மறந்துவிட முடியுமா?

பறக்கும் ரொட்டி

இந்த நவீன காலத்திலும் தமிழ் வணிகர்கள் பெரும் எண்ணிக்கையில் சீனாவுக்குச் செல்கிறார்கள். தமிழ் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். மதுரைப் பக்கமிருந்து சீனாவுக்குச் சென்று ‘பறக்கும் ரொட்டி’ (வீச்சு பரோட்டா!) செய்து விருந்தளித்துவருகிறார்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மதுரைக்கார இளைஞர்கள். இந்த உறவை தமிழர்கள் தங்கள் சமூகத்துக்கான ராஜதந்திர உத்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். சீன ஏற்றுமதிகளால் பாதிக்கப்படும் நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. ராஜதந்திரம் என்பது ஒருவழிப் பாதையல்ல.

ஜி ஜின்பிங்குக்கு பேனர் வைக்கும் அளவுக்கு மட்டுமே சிந்திக்கும் நிலையில் நமது தமிழ்நாடு இருக்கிறது. இந்நேரம் மிகப் பெரிய அரசியல், சமூக, வர்த்தகக் குழு ஒன்று இந்தச் சந்திப்பைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக்கூடிய வேலையில் இறங்கியிருந்திருக்க வேண்டும். இலங்கைத் தீவில் சீன அரசின் நிலைப்பாடு குறித்தும், பொதுவாக ஆசியாவில் அதன் மேலாதிக்கம் குறித்தும் நாம் கவலைகொள்ள நியாயம் இருக்கிறது. ஆனால், உறவாடும் கலையில் வல்லமை பெறாமல் அந்த நியாயத்துக்கு வலுசேர்க்கவும் முடியாது. தமிழ்நாட்டின் முக்கியத்துவம் பண்டைய சீனர்களுக்குத் தெரிந்ததுபோல இன்றைய சீனர்களுக்கும் தெரியும்படி செய்ய வேண்டும். கடந்த காலத்தை எதிர்காலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ‘பாஸ்ட் ஃபார்வார்ட்’ (past forward) உத்தியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

- ஆழி செந்தில்நாதன்,

தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். சீனாவைப் பற்றி ‘டிராகன்’ என்றொரு நூலை எழுதியிருக்கிறார். தமிழ் - சீன நட்புறவுக் கழகம் என்ற கலாச்சார - வரலாற்று அமைப்பையும் அண்மையில் உருவாக்கியிருக்கிறார்.

தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x