Published : 09 Oct 2019 08:04 AM
Last Updated : 09 Oct 2019 08:04 AM
பா.திருச்செந்தாழை
நல்ல ஆளுமையான பெண் குரல் பின்னிருக்கையிலிருந்து கேட்டது. காரில்தான் செல்ல வேண்டுமென முரண்டபடி பேருந்துக்கு வெளியே நிற்கும் தோழனை, “ஏண்டா, ஒரு மணி நேரம் லேட்டானா வீட்ல சேத்துக்க மாட்டாங்களா? காலியாத்தான இருக்கு. வந்து உக்காரு” என விரட்டிக்கொண்டே, தனது செல்போனில் கிளம்பிவிட்டதாக வீட்டுக்குத் தகவலும் கூறுகிறாள்.
இதற்கிடையே ஜன்னலுக்கு வெளியே வயதான தம்பதி இலக்கின்றி யாசகம் கேட்கிறார்கள். அந்த முதியவனுக்குப் பார்வையும் இல்லை. இப்போதுதான் யாசகம் பயில்கிறார்கள்போல. ஆட்களற்ற பேருந்தின் வெற்று ஜன்னல்களை நோக்கி, “பசி.. பசி..” என முதியவன் இறைஞ்சுகிறான். ஒரு முட்டாள் குழந்தையை அணைத்துக்கொள்பவள்போல அவனது மனைவி அவனின் கையைத் தாழ்த்திவிடுகிறாள். எரிச்சலும் ஆங்காரமுமாய் அவளின் கன்னத்தில் அறையும் முதியவன், அழுகைக் குரலில் வெட்டவெளி நோக்கிக் கத்துகிறான். “கேசவா, இப்பிடி நிக்க வெச்சுட்டுப் போயிட்டியேடா...”
அந்தப் பழைய பேருந்து அவர்களைச் சலனமின்றிப் பார்க்கிறது. ஒருகணம், செல்போனில் பேசியபடியிருந்த பின்னிருக்கைக் குரல் நிற்கிறது. ‘ஏறுவதா, வேண்டாமா?’ என யோசித்தபடி நிற்கும் தோழனை அழைத்தவள், “ஒரு ஐநூறு குடுறா அவங்களுக்கு” என்கிறாள். லேசான திகைப்புடன் எல்லோரும் திரும்புவதற்குள், அவன் குடுத்துவிட்டுப் பேருந்தில் ஏறினான். “ஐநூறு... ரொம்ப அதிகம்.” சப்தமின்றி முனகுபவனைப் பார்த்து, ஒரு மிட்டாய்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டுப் பக்கத்தில் அமரும்படி சைகை காட்டினாள்.
மிக நீண்ட நேரம் எனது பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியில் விழுந்த அந்த முகத்தைப் பார்த்தபடி வருகிறேன். சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘பிரியாணி’ சிறுகதை நினைவில் எழுந்தது. குறிப்பாக, அந்தக் கடைசிவரி.
பணக்கார வீட்டு விருந்தில் எஞ்சிய பிரியாணியை மண்ணில் குழிதோண்டிப் புதைப்பதற்காக அழைத்துவரப்பட்ட அந்த பிஹார் வேலையாள், வியர்வை கசிகிற கால்கள் முழுக்க நெய்யும் மசாலாக்களும் வழிந்தபடி எஞ்சிய பிரியாணியை மண்ணில் புதைத்துக்கொண்டிருக்கும்போது, அவனது குடும்பம் குறித்து யாரோ விசாரிப்பார்கள். மிகவும் அமைதியான குரலில் வேலை செய்துகொண்டே அவன் கூறுவான், “ஒரே பொண்ணு... பேரு பாசுமதி.”
“என்னா படிக்குது?”
“செத்துப்போச்சு.”
விசாரித்த குரலில் ஒரு சிறு அதிர்ச்சி, “எப்படி?”
அவன் பிரியாணிக் குவியலின் மீது மண்ணை வாரி மூடியவாறே, “பசில” என்பான்.