Published : 04 Oct 2019 08:39 AM
Last Updated : 04 Oct 2019 08:39 AM

மனதிலிருந்து சுரந்த பால் 

நவீனா

‘எதுவாக உன்னை நீ நினைக்கிறாயோ, அதுவாகவே நீ மாறுவாய்’ என்னும் சித்தாந்தத்தைப் பல்வேறு மதங்களும் தத்துவக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் வலியுறுத்துகின்றன. மேரி கியூரி தனது குடும்பச் சூழல் காரணமாகத் தனது பதின்ம வயதில் ஒரு பணக்கார உறவினர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்கிறார். படிப்பறிவு இல்லாத காரணத்துக்காகத் தனது உறவினர்களால் அவமானப்படுத்தப்படும் மேரி, எப்படியாவது படித்துப் பட்டம் பெற வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு தனது தடைப்பட்ட கல்வியைத் தொடர்கிறார். கியூரியைத் திருமணம் முடித்து அவரோடு இணைந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வேதியியலுக்கும் இயற்பியலுக்கும் என்று இரண்டு துறைகளில் நோபல் விருதுகள் பெற்று உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக ஆனார்.

இந்த சித்தாந்தம் பொதுவில் ஆண் - பெண் இருவருக்குமே பொருந்தும். என்றாலும், பெண்கள் இன்னும் அதிகமான இடர்ப்பாடுகளைத் தாண்டி, தான் ஈடுபட்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதற்கான வல்லமை அவர்களிடம் சிறிது அதிகமாகவே காணப்படுகிறது. எழுபது வயது மூதாட்டி ஒருவர் சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டியதாக எனது பாட்டி கூறியிருக்கிறார். கணவனை இழந்து தனிமையில் சிறு சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் தனது இரவுப் பொழுதுகளைக் கழித்துவந்த அவருக்குப் பகல் முழுவதும் துணையாக இருந்துவந்தது, தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள் அவரிடம் விட்டுச்சென்ற சிறு குழந்தைகள்தான். வேலைக்குச் சென்ற தாய்மார்கள் வீடு திரும்பும் வரை இந்தக் குழந்தைகளை அந்த மூதாட்டிதான் பராமரித்துவந்திருக்கிறார். பசியால் அந்தக் குழந்தைகள் அழும் நேரங்களில் அந்த மூதாட்டியைத் தாயென நினைத்து அந்தக் குழந்தைகள் அவரிடம் பால் குடிக்கத் தொடங்கியிருக்கின்றன. முதலில், அப்படித் தாய்ப்பால் எதுவும் வராமல்போனாலும் நாளடைவில் அந்த மூதாட்டிக்கும் பால் சுரக்க ஆரம்பித்திருக்கிறது. அவரது இறுதிக் காலம் வரை அவர் பல குழந்தைகளுக்குப் பாலூட்டியதாக எனது பாட்டி கூறுவார்.

மேரி கியூரி பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று எண்ணியபோது பணிப்பெண்ணாக இருந்தார், படித்துப் பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தபோது ஆராய்ச்சியாளராக மாறியிருந்தார். முதலில், இந்த மூதாட்டியிடம் விடப்பட்ட குழந்தைகளுக்கு அவர் வெறும் காப்பாளராக இருக்க வேண்டும் என்று இயல்பாக எண்ணியிருப்பார். நாளடைவில், அந்தக் குழந்தைகளின் பசியும் வறுமையும் அந்த மூதாட்டியை அவர்களுக்கு மனதளவில் தாயாக மாற்றிவிட்டது. அவரிடம் விடப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பசியமர்த்த வேண்டும் என்பதே அவருக்குள் எழுந்த எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அவரது எண்ணத்தின் வலிமையே அவருக்குப் பால் சுரக்கக் காரணம். அவர்களுக்கு அவர் தாயாக விரும்பினார், தாயாகியும் விட்டார்.

(தொடர்வோம்)

- நவீனா, ஆங்கில உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x