

இணைய உரிமைக்காகப் போராடும் மஹூவா
நாடாளுமன்றத்தில் தன்னுடைய கன்னிப் பேச்சு உரையால் நாட்டின் கவனம் ஈர்த்த திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா, இப்போது இணையப் பயனாளிகளின் தனிநபர் உரிமைக்காகக் கைகொடுத்திருக்கிறார். இதற்காக ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக, ஆதார் போன்ற அரசு அடையாள அட்டையை சமூக ஊடகக் கணக்குடன் சேர்க்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிராகத்தான் மஹூவா தனது மனுவைத் தாக்கல்செய்திருக்கிறார். ஏற்கெனவே இணைய நிறுவனங்கள் நம் அந்தரங்கத் தகவல்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது ஆதாரை சமூக ஊடகங்களுடன் இணைப்பது விபரீதமாகிவிடும் என்பது மஹூவாவின் வாதம். ‘என் இணைய அந்தரங்கங்கள்... என் உரிமை!’ என்று வலுவாகக் குரல்கொடுக்கிறார் மஹூவா.
சென்னையைக் கலக்கும் தென்னிந்திய மக்கள் நாடக விழா
அக்டோபர் 2 அன்று தொடங்கி சென்னையில் நடைபெற்றுவரும் தென்னிந்திய மக்கள் நாடகத் திருவிழா நாடகக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என்று எல்லாத் தரப்பிலிருந்தும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அக்டோபர் 6 வரை தொடரும் இந்த விழாவில் 5 மொழிகளைச் சேர்ந்த 32 நாடகங்கள் நிகழ்த்தப்படவிருக்கின்றன. ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் பங்குகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்பட்ட நாடகங்களைப் பற்றி மறுநாள் காலையில் சூடுபறக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் புத்தகக்காட்சி, சர்வதேசத் திரைப்பட விழாபோல நாடக விழாவிலும் பெருந்திரளாகப் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் தொடர வேண்டும். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள கேரள சமாஜத்தில் காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நாடக விழா நடக்கிறது. அனுமதி இலவசம்.
கைவிடப்பட்ட நிலையில் ஹரிஜன சேவா பள்ளிக்கூடங்கள்
ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கிய காந்தி அந்த இயக்கத்துக்கு நிதி சேகரிப்பதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். 1933-34 ம் ஆண்டுகளில் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணங்களை மேற்கொண்டார். ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் தற்போது தமிழகத்தில் திருக்கோயிலூரிலும் மதுரையிலும் இரண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் திருக்கோயிலூர் நடுநிலைப் பள்ளியில் 180 ஆதி திராவிட வகுப்பு மாணவர்களும், 109 பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் படித்துவருகின்றனர். ஆனால், அப்பள்ளிக்கான மத்திய அரசின் நிதி கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரவில்லை. அதுபோலவே, மதுரையில் உள்ள பள்ளிக்கும் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக நிதி வரவில்லை. சமீபத்தில், திருக்கோயிலூர் ஹரிஜன சேவா பள்ளி விழாவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இத்தகவலை அறிந்து மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட்டுக்குக் கடிதம் எழுதி நிதியுதவியைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். தேசம் தழுவிய அளவில் காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிவருகிறோம். ஆனால், அவரால் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடங்களைக் கைவிட்டுவிட்டோம்.