Published : 01 Oct 2019 07:09 am

Updated : 01 Oct 2019 07:10 am

 

Published : 01 Oct 2019 07:09 AM
Last Updated : 01 Oct 2019 07:10 AM

அமமுகவின் எதிர்காலம்தான் என்ன? 

future-of-ammk

காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது. “ஓ.பி.எஸ்., ஜெயக்குமாரைத் தவிர யார் வேண்டுமானாலும் அமமுகவுக்கு வரலாம்” என்று டி.டி.வி.தினகரன் சொன்னது போய், “டி.டி.வி.யைத் தவிர, யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம்” என்று ஜெயக்குமார் சொல்கிற நிலை வந்துவிட்டது. இடைத்தேர்தல் நாடகத்தில் அமமுகவுக்குப் பாத்திரமே இல்லாமல்போனது இன்னும் மோசம்.

“தனிக் கட்சியாகப் பதிவுசெய்யச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கொடுத்த மனு இன்னமும் பரிசீலனையில் இருக்கிறது. பதிவுசெய்யப்படாத கட்சி என்றால், சுயேச்சையோடு சுயேச்சையாக இரண்டாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ ஒரு மூலையில் எங்கள் வேட்பாளர் பெயர் வரும். ஏற்கெனவே நாங்கள் போட்டியிட்ட குக்கர், பரிசுப்பெட்டி போன்ற சுயேச்சை சின்னங்களில் வேறு யாராவது போட்டியிட்டு, நாங்கள் வாங்குகிற சொற்ப வாக்குகளையும் பதம்பார்ப்பார்கள். எனவேதான், பொதுச்செயலாளர் அப்படியொரு முடிவெடுத்தார்” என்று காரணம் சொல்கிறார்கள் அமமுகவினர். ஒருகாலத்தில், உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்று கேள்வி கேட்ட அமமுக, இப்போது தேர்தல் வந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவே தோன்றுகிறது.


என்னவாயிற்று அமமுகவுக்கு?

மூன்று பின்னடைவுகளைச் சந்தித்தார் தினகரன். ஒன்று, உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபிக்க முயன்றார். அதில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வழக்கு மேல்முறையீட்டில் இருக்கிறது. அடுத்ததாக, 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வரும், “கட்சியை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? இந்த ஆட்சியைக் கவிழ்க்கட்டுமா?” என்று மிரட்டலாம் என நினைத்தார். தீர்ப்பு எதிராக அமைந்ததுடன், 11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு கிடப்பில்போனது. நீதிமன்றங்கள் கைவிட்டாலும், மக்கள் மன்றம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை தினகரனுக்கு இருந்தது. அதிலும் மிகப் பெரிய தோல்வி. மக்களவைத் தேர்தலில் வெறுமனே 5.5%, சட்டமன்ற இடைத் தேர்தலில் 7% வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், அதன் வாயிலாக நாம் மீண்டும் எழுச்சி பெறலாம் என்ற கணக்கும் பொய்த்துவிட்டது. மத்தியில் அசுர பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர, தமிழகத்தில் எடப்பாடியும் தன் கால்களை இன்னும் வலுவாக ஊன்றிக்கொண்டார். மோடியை ஆதரிப்போர், எதிர்ப்போர் என்று இரண்டாகப் பிரிந்து நிற்கிற அரசியல் கட்சிகளில் தினகரனுக்கு எந்தப் பக்கமும் இடம் இல்லாமல்போய்விட்டது.

யார் காரணம்?

தேர்தல் ஆணையம், மத்திய அரசு, வழக்குகள் எதுவுமே தினகரனுக்குச் சாதகமாக இல்லாதது மட்டும்தான் அமமுகவின் சரிவுக்குக் காரணமா? தினகரனின் போக்குதான் காரணம் என்கிறார்கள் முன்னாள் அமமுகவினர். “பாஜக அரசு, திராவிட இயக்கங்களில் ஒன்றான அதிமுகவைக் கைப்பற்றப் பார்க்கிறது, அதை எதிர்கொள்ளத் திராணியுள்ள, ஜனரஞ்சகமான ஒரே தலைவர் டி.டி.வி.தான் என்று நாங்கள் எண்ணினோம். திஹார் சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் நடத்திய பொதுக்கூட்டங்களில் கூடிய கூட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆனால், நிர்வாகிகளை அடிமைபோல் நடத்திய விதமே அவருக்குச் சரிவாக அமைந்துவிட்டது. காவிரி நீர் என்று நினைத்த அமமுக கானல்நீரானதற்குக் காரணம் தினகரன்தான்” என்கிறார் அவரிடமிருந்து முதலில் விலகிய நாஞ்சில் சம்பத்.

“கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினரிடமே தினகரன் மேலாதிக்கம் செய்ததுதான் திவாகரனின் கோபத்துக்குக் காரணம்” என்கிறார்கள் தஞ்சை வட்டாரத்தில். கட்சியிலிருந்து தினகரனை ஓரங்கட்டுவதற்கான ஏற்பாடுகளை தங்கமணி, வேலுமணி வாயிலாகத் தொடங்கிவைத்த திவாகரன், அமமுகவுக்கு அனுதினமும் குடைச்சல் கொடுப்பதற்காகவே ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியை நடத்திவருகிறார்.

‘போன மாட்டைத் தேடுவதில்லை, வந்த மாட்டையும் கட்டுவதில்லை’ என்று ஒரு சொலவடை சொல்வார்களே, அப்படி விட்டேத்தியான போக்கு தினகரனிடம் இருந்தது. கட்சியின் அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த அவர் பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. வந்தவர்களையும் கௌரவமாக நடத்தவில்லை.

இதெல்லாம் தாண்டி ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜெயலலிதா அதிமுகவினரை நடத்தாத விதமா? இரண்டு விஷயங்கள். எம்ஜிஆருக்கோ ஜெயலலிதாவுக்கோ கட்சிக்காரர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள் என்றால், அவர்கள் மக்கள் மத்தியில் சக்தி மிக்கவர்களாக இருந்தார்கள். அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அப்படி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்ற சில விஷயங்களில் சித்தாந்த உறுதி அவர்களிடம் இருந்தது. உதாரணமாக, மாநில உரிமை விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய உறுதியைச் சொல்லலாம். மேலும், திராவிட அரசியல் அடையாளத்தையோ, பெரியார் - அண்ணா அடையாளங்களையோ அவர்கள் ஒருபோதும் கைவிட்டவர்கள் இல்லை.

பழனிசாமி - பன்னீர்செல்வம் நடத்தும் கட்சியிலிருந்து, ‘அதிகாரம்கூட வேண்டாம்’ என்று சொல்லிப் பலர் வெளியே வரக் காரணம், அவர்கள் தமிழ்நாட்டு நலனைப் பறிகொடுக்கிறார்கள்; சித்தாந்த அடையாளத்தைப் பறிகொடுக்கிறார்கள் என்பதுதான். தினகரனும் இந்த விஷயத்தில் மேம்பட்டவராக இல்லை. ‘அண்ணா’, ‘திராவிடம்’ இரண்டு சொற்களும் இல்லாத ஒரு கட்சிப் பெயரை அவர் தேர்ந்தெடுத்ததை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாம்புக்குத் தலை மீனுக்கு வால்’ காட்டும் அவரது அரசியலைப் பலரும் விரும்பவில்லை என்ற பேச்சு கவனிக்க வைக்கிறது. ஆனாலும், ஆரூடங்கள் அடிப்படையில் கட்சி நகர்கிறது.

எதிர்காலம் இருக்கிறதா?

“இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் ஆட்சி. அது கவிழ்ந்ததும் கட்சி தானே எங்கள் பக்கம் வந்துவிடும். காரணம், எடப்பாடியால் அத்தனை அமைச்சர்களையும் சந்தோஷப்படுத்த முடியவில்லை. மதுரையிலேயே உதயகுமாருடன் அவர் காட்டுகிற நெருக்கம், செல்லூர் ராஜுவுக்குக் கடுப்பைத் தருகிறது. இப்படி அமைச்சரவையிலும் எம்எல்ஏக்களிலும் நிறைய அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் இருப்பதால் எடப்பாடியை எதிர்த்துப்பேச அவர்கள் தயங்குகிறார்கள். ஆட்சி போன மறுநொடியே அவர்கள் எடப்பாடியை உண்டு இல்லை என்று பண்ணப் புறப்பட்டுவிடுவார்கள். 2021-ல் அதிமுக ஆட்சியை இழக்கும்பட்சத்தில் 2026-ல் தினகரன் தலைமையிலான அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்” என்ற பேச்சுகளைப் பலரிடமும் கேட்க முடிகிறது.

ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு நடக்கும்? தினகரன் ஒருபோதும் ஜெயலலிதாவாகவோ கருணாநிதியாகவோ மாற முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் அவர் வாங்கிய 5.5% என்பது அவர் மீது மிகுந்த பற்றுதல் கொண்ட புதிய இளைஞர்களின் வாக்குகள். அதிமுகவின் வாக்குகள் மட்டும் அல்ல அவை. எனவே, தமிழகத்தில் பாமக, மதிமுக, தேமுதிக போன்ற இரண்டாம் கட்ட அமைப்புகளில் ஒன்றாக அது தொடரலாம். தன்னுடைய தலைமையின் கீழ் நாளைக்கே தமிழகம் வந்துவிடும் என்ற மனப்பிரமையை விட்டுவிட்டு, யதார்த்த நிலையில் செயல்பட்டால், அவருக்கு நிச்சயம் எதிர்காலம் உண்டு. தினகரனுக்கும் ஒரு இடம் உண்டு. அதை அவர் உணராத சூழலில், கட்சி மேற்கு நோக்கிப் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in


அமமுகவின் எதிர்காலம்டிடிவி தினகரன்சசிகலாஅதிமுகஎடப்பாடி பழனிசாமிபன்னீர்செல்வம்ஜெயக்குமார்நாஞ்சில் சம்பத்

You May Like

More From This Category

somu

சோமு நீ சமானம் எவரு! 

கருத்துப் பேழை

More From this Author