

பவித்ரா பாலகணேஷ்
சில ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம்செய்த 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரிக்கால நண்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து இயந்திரங்கள் மூலம் மனிதக்கழிவுகளை அகற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 2015-ல் அவர்கள் தொடங்கிய ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனம், கேரளாவின் அரசு அலுவலர்களைச் சந்தித்து பல்வேறு விதமான தூய்மைப்பணிகளில் உள்ள பிரச்சனைகளையும் தீர்வுகளுக்கான சாத்தியங்களையும் விவாதித்தனர். கேரள நகரங்களின் சாக்கடை நுழைவுகள், வடிகால்கள், அதன் பரிமாணங்கள், உட்புறச் சுழல் மற்றும் அதைச் சுத்தம்செய்வதிலுள்ள நடைமுறை அபாயங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அரசிடமிருந்து பெற்று ஆராய்ந்தனர். சாக்கடை அடைப்புகளைச் சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றும் ‘பேண்டிகூட்’ ரோபோவை பிப்ரவரி 2018-ல் வணிகரீதியில் அறிமுகப்படுத்தினர்!
பேண்டிகூட் என்பதற்கு தமிழில் பெருச்சாளி என்று பொருள். எந்த விதமான சந்துபொந்துகளிலும் நுழைந்து வந்துவிடும் பெருச்சாளியைப் போன்ற செயல்பாட்டைக் கொண்டது பேண்டிகூட் ரோபோ. 14 அடி உயரமுள்ள மனிதர்களைப் போன்ற இயக்கத்தை உடையது. தனது இயந்திரக்கால்களை நீட்டி மடக்கக்கூடியது. மனிதர்களைப் போன்றே சாக்கடைக் குழிக்குள் இறங்கி அடைப்புகளைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுமாறு இயக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு இயந்திரக்கை நான்கு இயந்திரக்கால்களுடன் சுத்தம்செய்யும் பணியைக் கையாள்கிறது பேண்டிகூட் ரோபோ. இதன் செயல்பாடுகள் சிறிய கணினித்திரையில் கண்காணிக்கப்படுகிறது. இந்த ரோபோவில் உள்ள கேமரா சாக்கடைத் தண்ணீருக்குள்ளும் ஊடுருவிப் படம்பிடிக்கும் தன்மையுடையது. அடைப்புகளை அகற்றுவதற்காகக் கடப்பாரை போன்ற கருவியும் ஜெட் வேகத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாட்டர் ஜெட் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. இயக்குபவருக்கு வசதியாக இருக்கும்பொருட்டு இந்த ரோபோ லேசான கார்பன் இழைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கடினமாக இருந்த அதன் கட்டமைப்பு தற்போது பல கட்ட ஆய்வுக்குப் பின் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த இயந்திர வேலைப்பாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ரோபோ முழுவதும் தானியங்கும் வகையிலும் இயக்கும் வகையிலும் இரு முறைகளில் செயல்படுகிறது. சிக்கலான இடங்களில் மட்டுமே இதை இயக்குவதற்குத் தொழிலாளர்கள் தேவை. கேரளாவிலும் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திலும் பேண்டிகூட் ரோபோ சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றும் பணிக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகப்படியான மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் உள்ள துறை ரயில்வே. தண்டவாளங்களில் கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றும் நிலை இன்றும் தொடர்கிறது. நவீனத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி பேண்டிகூட் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் நிச்சயம் இந்நிலையைத் தவிர்க்கலாம்.
தொடர்புக்கு: balaganeshphysics@gmail.com