Published : 30 Sep 2019 08:32 am

Updated : 30 Sep 2019 08:32 am

 

Published : 30 Sep 2019 08:32 AM
Last Updated : 30 Sep 2019 08:32 AM

உணவு வீணாவதைத் தடுக்க ‘ஹேப்பி ஹவர்’ எப்படி உதவுகிறது? 

happy-hours

டேவிட் செகல்

மதுப் பிரியர்களுக்கு இந்த வார்த்தையின் வசீகரம் புரியும்: ‘ஹேப்பி ஹவர்’. இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான்; ஆனால், மது சமாச்சாரம் அல்ல. பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரிலுள்ள ‘எஸ் மார்க்கெட்’டிலிருந்து தொடங்கும் கதை இது. தினமும் இரவு 9 மணிக்கு ‘ஹேப்பி ஹவர்’ தொடங்குகிறது. மறுநாள் கெட்டுவிடும் வாய்ப்புள்ள – அதேசமயம் அதுவரை நல்ல நிலையிலுள்ள காய், கனிகள் தொடங்கி இறைச்சி, மீன்கள் வரை சகலத்தையும் 30% தள்ளுபடி விலையில் விற்கிறார்கள். அவை ஏற்கெனவே 30% விலைக்குறைப்பு செய்யப்பட்டவை என்பதுதான் இங்கே கூடுதல் விசேஷ செய்தி. பின்லாந்து நாட்டின் 900 சூப்பர் மார்க்கெட்டுகளில் இரவு 9 மணிக்கு மேல் அமலுக்கு வரும் இந்த ‘ஹேப்பி ஹவர்’ முறையால், ஏழைகளும் குறைந்த வருவாய்ப் பிரிவினரும் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட முடிகிறது. ஏராளமான உணவுகள் கெட்டழிவதும் தடுக்கப்படுகிறது.

காய்கறி, கனிகள், இறைச்சி என்று அனைத்துமே மூன்றில் ஒரு பகுதி வீணாகிறது அல்லது வீணடிக்கப்படுகிறது. அறுவடையின்போது, சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது, சமைத்த பிறகு என்று வீணடிப்பு தொடர்கிறது. இப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.48,28,000 கோடி. அதேசமயம், உலகின் 10% மக்கள் (சுமார் 130 கோடிப் பேர்) நல்ல உணவின்றி ஊட்டச்சத்துக் குறைவால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயில் வாடுகின்றனர். இவ்விரு நிலையையும் ஒரே சமயத்தில் சமாளிக்க இந்த ‘ஹேப்பி ஹவர்’ உதவுகிறது என்றால் அது முக்கியமான விஷயம்தானே!

ஆபத்தை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்?

உணவு வகைகளை வீணடித்துக் கொட்டாதீர்கள், ஏழைகளுக்குச் சாப்பிடக்கொடுங்கள் என்ற இரண்டு ஆண்டு காலப் பிரச்சாரத்துக்குக் கிடைத்த பலன் இது. பின்லாந்து நாட்டவர் சுகவாசிகள். குடிப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவர்களுக்கு எளிதில் புரியவும் பிடிக்கவும் இந்த நேரத்துக்கு ‘ஹேப்பி ஹவர்’ என்று பெயரிட்டுள்ளனர். உணவு வீணாவது மட்டுமல்ல; அது சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. சமைத்த உணவு, சமைக்காமலேயே அழுகிப்போன காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றைத் தரிசு நிலப் பள்ளங்களில் போட்டு மூடினாலும் அவற்றிலிருந்து மீத்தேன் வெளியாகிறது. இது கரியமில வாயுவைவிட 25 மடங்கு தீங்கு விளைவிப்பது. பசுமைக்குடில் வாயுக்களில் 8% முதல் 10% வரையில் வீணான உணவுப் பண்டங்களிலிருந்துதான் வெளியாகிறது.

கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி இப்படியொரு ஆபத்தை ஏன் நாம் விலைக்கு வாங்க வேண்டும்? ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி, இறைச்சி, மீன் போன்றவற்றை வீணாக்காமல் பயன்படுத்தினாலே உலகின் சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறையும். தேவைக்கும் அதிகமாக வாங்குவது, சேமித்து வைப்பது, பயன்படுத்தாமல் தூர எறிவது தீங்கான செயல்களாகும்.

அமெரிக்காவில் பத்தில் ஒன்பது பேரங்காடிகள் உணவுப் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ‘வால்மார்ட்’ மட்டுமே விதிவிலக்கு. தாங்கள் விற்கும் உணவுப் பொருள் எந்த நாளிலிருந்து கெட ஆரம்பிக்கும் என்பதை மிகக் கவனமாக லேபிளில் எழுதிவைப்பார்கள். எனவே, தங்களுடைய ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களால் எளிதில் புரிதலை ஏற்படுத்த முடிந்தது. அதேசமயம், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இதுகுறித்து சிந்திப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கோடிக்கணக்கானவர்களை இணைக்கும் செயலிஉணவுப் பொருட்களை விற்பவர்களும் வாங்க நினைப்பவர்களும் தொடர்புகொள்ள இப்போது சில செல்போன் செயலிகளும் வந்துவிட்டன. உணவுப் பொருள் வீணாவதை அவை தடுக்க உதவுகின்றன. ‘டூ குட் டு கோ’ என்ற செயலி இதில் சிறந்தது. கோபன்ஹேகனைத் தளமாகக் கொண்ட இந்தச் செயலி, 11 நாடுகளில் வசிக்கும் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகள், 25,000 சிற்றுண்டி விடுதிகள் - பேக்கரிகளை இணைக்கிறது.

டென்மார்க் நாட்டுக்கு தனது 13-வது வயதில் ரஷ்யாவிலிருந்து வந்த செலினா ஜுல், உணவுப் பொருட்கள் வீணாகாமல் காப்பதைப் புதிய கலாச்சாரமாகவே வளர்த்துவிட்டார். நன்கு படித்த இவர் அதற்கான காரணத்தையும் கூறுகிறார். “அடுத்த வேளை சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்பதே நிச்சயமற்ற நாட்டிலிருந்து இங்கு வந்தேன். இங்கே சாப்பாடு மிதமிஞ்சி இருப்பதைப் பார்த்து வியந்தேன். அதில் பெரும் பகுதியை இவர்கள் வீணாக்குவது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

2008-ல் எனது 28-வது வயதில், ‘உணவை வீணாக்குவதை நிறுத்துங்கள்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தேன். சில வாரங்களுக்கெல்லாம் ஒரு வானொலியில் என்னிடம் பேட்டி எடுத்தனர். அதற்குப் பிறகு டென்மார்க் நாட்டிலேயே மிகப் பெரிய சங்கிலித்தொடர் சூப்பர் சந்தையான ‘ரெமா 1000’ இயக்குநர் ஆண்டர்ஸ் ஜென்சன் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரைச் சந்தித்தேன்" என்று இந்த இயக்கம் எப்படி வலுப்பட்ட விதம் குறித்து விவரிக்கிறார்.

ஜென்சன் என்ன சொல்கிறார்? “வியாபார விஷயமாக ஸ்காட்லாந்து சென்றபோது செலினா ஜுல் பற்றி பத்திரிகைகளில் படித்தேன். டென்மார்க்கில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 63 கிலோ உணவை வீணாக்குகிறார், அதன் மதிப்பு சுமார் 139 பவுண்டுகள் என்று படித்தவுடன் செலினா சொல்வது சரி என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜென்சன்.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்

இருவரும் கோபன்ஹேகன் நகரில் ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். இதற்குப் பிறகு தனது சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருளுக்கு அபரிமிதமாகத் தள்ளுபடி செய்வதைக் குறைத்தார் ஜென்சன். ஒரு சில்லறை வியாபாரியும், “செலினா சொல்வது சரிதான், விலையைக் குறைக்காமல் வாங்கும் அளவைக் குறைப்போம், வீணாவதாவது குறையும்” என்றார். அது செய்தி ஊடகங்களில் தீயாகப் பரவியது. பிறகு, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபலங்களையும் துணைக்கு அழைத்து மக்களிடையே பிரச்சாரம் செய்ய செலினா முடிவெடுத்தார். டென்மார்க் அரச குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட இளவரசி மேரி இதற்கு ஆதரவு தந்தார். செலினாவுடன் சேர்ந்து ஒரு புத்தகத்தை எழுத முன்வந்துள்ளார் அவர்.

இவர்களின் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தால் வினோத விளைவு ஏற்பட்டது. லூப் என்ற சிற்றுண்டியகம் புது மாதிரியான உணவுத் தயாரிப்பில் இறங்கியது. மளிகைக் கடைகளும் பேக்கரிகளும் தங்களால் விற்க முடியாமல் எஞ்சிய – அதேசமயம் கெட்டுப்போகாத உணவு வகைகளை லூப் சிற்றுண்டியகத்துக்கு வழங்கத் தொடங்கின. அந்தச் சிற்றுண்டியகத்தின் தலைமைச் சமையல்காரருக்கு அன்றைக்கு என்ன சமைக்கப்போகிறோம் என்று தெரியாது. மளிகைக் கடைகளும் பேக்கரிகளும் எதையெல்லாம் அனுப்புகின்றனவோ அவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் அன்றைய மெனுவைத் தயாரிக்கிறார். உணவுப் பண்டம் தயாரானவுடன் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதை செல்போனில் படம் பிடித்து தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள் வீணாகப்போகவிருந்ததை நாங்கள் நல்ல பண்டமாகச் சமைத்துச் சாப்பிட்டோம் என்று! பெருமைக்குரிய விஷயம்தான்!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’,

தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஹேப்பி ஹவர்வீணாகும் உணவுஎஸ் மார்க்கெட்காய்கறிகனிகள்இறைச்சிநோய் எதிர்ப்பு சக்திவால்மார்ட்விழிப்புணர்வுப் பிரச்சாரம்Happy hours

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author