Published : 26 Sep 2019 08:28 AM
Last Updated : 26 Sep 2019 08:28 AM

கீழடி: திமிறும் காளை 

சு.வெங்கடேசன்

உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் காலகட்டத்திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்பதையும் இங்கு நாம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மூன்று கட்ட ஆய்வுகள்

நான்காண்டுகளாக கீழடியில் ஆய்வு நடந்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறை முதல் மூன்றாண்டுகள் ஆய்வுகளை நடத்தியது. அதில் முதல் இரண்டு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு 102 குழிகள் அகழ்ந்தது. அவற்றில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், 2017 பிப்ரவரியில் இடைக்கால அறிக்கை கொடுத்தார் அமர்நாத் இராமகிருஷ்ணன். ‘தமிழகத்தில் முதன்முறையாக நகர நாகரிகத்துக்கான விரிவான கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.

விரைவிலேயே அவர் பணியிடம் மாற்றப்பட்டார். மூன்றாவது ஆண்டில் ஆய்வுகளை நடத்திய ஸ்ரீராமன், வெறும் 10 குழிகளை மட்டுமே அகழ்ந்தார். ‘புதிய ஆதாரங்களோ, கட்டுமானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை; புதிய சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை’ என்று ஒரு பக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கீழடி ஆய்வை முடித்துவிட்டு வெளியேறியது மத்திய தொல்லியல் துறை.

இந்தக் கட்டத்திலிருந்துதான் நான்காம் ஆண்டில் சிவானந்தம் தலைமையில், தன்னுடைய அகழாய்வைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 34 குழிகளில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகளை உயரிய ஆய்வு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் அளித்த மதிப்பீட்டின்படியே தன்னுடைய அறிக்கையை அது சமீபத்தில் சமர்ப்பித்தது.
ஒரு ஆண்டில் கிடைத்த சான்றுகளே மறு ஆண்டும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. முதல் ஆண்டில் விரிவான ஆதாரங்கள் கிடைத்து, மறு ஆண்டில் எதுவும் கிடைக்காமலும் போகலாம். ஆய்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், சான்றுகள் என்று எது கருதப்படுகிறதோ அது கிடைத்த இடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு சம முக்கியத்துவம் பெற்றதுதான் கிடைக்காத இடமும். சான்றுகள் கிடைத்த இடத்துக்கும் கிடைக்காத இடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி தொல்லியல் அறிஞர்கள் விவாதிக்கட்டும். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்த அறிக்கைகள் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவுகள் தொடர்பில்தான்.

சர்ச்சைகளும் முடிவுகளும்

ஏற்கெனவே, கீழடி ஆய்வில் தீவிரமான ஆர்வம் காட்டிவந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டது உள்ளூர் மக்களிடம் அதிருப்தியையும் சந்தேகத்தையும் உண்டாக்கிய நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி ஆய்வையே முடிக்கும் அளவுக்குக் கொடுத்த அறிக்கையையேனும் மத்திய அரசு கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். “ஒரு வருஷம் முழுக்கவுமே வெறும் 10 குழிகள் அளவுக்கு மட்டுமே அகழாய்வு நடத்த முடிந்ததா? ஓராண்டில் இந்த ஆய்வுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கூட நீங்கள் ஏன் செலவிடவில்லை? இன்னும் கொஞ்சம் முயன்றுபார்க்கலாமா?” என்றுகூடக் கேட்காமல் ஸ்ரீராமன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அப்படியே கீழடியைக் கைவிட்டது மத்திய அரசு.

இப்போது மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கும் ஆய்வு கீழடியின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணர்த்தியிருக்கும் சூழலிலேனும், கீழடியை இனி கூடுதல் முக்கியத்துவத்துடன் அணுக முற்பட வேண்டும். முழு ஆய்வையும் முடிக்காமல் ஒரு அதிகாரி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வை முடித்துக்கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும்.
கீழடியில் உள்ள தொல்லியல் மேடு என்பது தனித்த ஒன்றல்ல, 110 ஏக்கர் கொண்ட அம்மேட்டுக்குப் பக்கத்தில் 90 ஏக்கரில் இன்னொரு மேடு உள்ளது. கீழடியைச் சுற்றி கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய கிராமங்களும் இதே அளவு தொல்லியல் எச்சங்களோடு உள்ளவை என்று கருதப்படுபவை.

இவை அனைத்தும் ஒரே குவிமைய நிலப்பரப்பு என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியதாகும். ஒரு பெரும் நீர்நிலையைச் சுற்றிய நிலவியல் அமைப்பாக இது இருந்திருக்கலாம். வைகையின் நீரைக் கால்வாய் வழியாக இரண்டு கிமீ தூரம் பிரித்து வந்து, நீர் தேக்கி வேளாண்மையில் ஈடுபட்டவர்களாக அங்கு வாழ்ந்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் தொடர் ஆய்வுகளில் நிறுவப்பட வேண்டியவை.

இரு கோரிக்கைகள்

ஆகவே, கீழடியைச் சுற்றியுள்ள இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் பணி முதன்மையானது. உத்தர பிரதேசத்தில் பாக்பத்தில் உள்ள சனவுலி கிராமத்தில் 28.67 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட நிலமாக சில நாட்களுக்கு முன் மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அங்கு கடந்த ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் பழங்காலச் சவப்பெட்டிகளும் கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தைக் கணிக்கக் காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்விடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது மத்திய தொல்லியல் துறை.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும் கட்டுமானச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகளை அனுப்பி, கால நிர்ணயம் செய்யப்பட்ட கீழடியின் ஆய்வுக்குரிய நிலம் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்து, கீழடியில் சர்வதேசத் தரத்தில் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும். கீழடியில் ஆய்வு தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில், அகழாய்வு தொடங்கப்பட்டதும் பிரதமர் மோடியின் சொந்த நகரமான குஜராத்தின் வட் நகரில் இதுவரை கிடைத்த பொருட்களைக் கொண்டு, சர்வதேசத் தரத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை மத்திய தொல்லியல் துறை கோரியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம். மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவது மாநில அரசின் கடமையும்கூட.

கீழடியில் கிடைத்த எலும்பை டெக்கான் கல்லூரிக்குப் பகுப்பாய்வுக்கு அனுப்பியதில், அது திமிலுடைய காளையின் எலும்பு என ஆய்வு முடிவுகள் கூறுவதாகச் சொல்கிறது தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை. வைகை நதியிலிருந்து கீழடியின் வழியே மேலேறும் திமிலுடைய காளை தமிழின் குறியீடு!

- சு.வெங்கடேசன்,

சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ நாவலின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x