Published : 26 Sep 2019 08:25 am

Updated : 26 Sep 2019 08:25 am

 

Published : 26 Sep 2019 08:25 AM
Last Updated : 26 Sep 2019 08:25 AM

தாசனூரு நாராயணன்: நினைவில் நிறுத்த வேண்டிய பெயர்!

dhasanuru-narayanayanan

கா.சு.வேலாயுதன்

இருளர் பழங்குடியினத்தில் பிறந்த தாசனூரு நாராயணன் தான் கற்ற கல்விக்குப் பெற்றது கூட்டுறவுத் துறையில் ஊழியர் பணி. ஆனால், அவரது தேடலின் எல்லையோ மிகப் பெரியது. பழங்குடி மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொழில், பொருளாதார மீட்டெடுப்பு என்று தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாகப் பயணித்துக்கொண்டிருந்தவர். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் பழங்குடிப் பிள்ளைகளை ‘கானகம்’ எனும் தன் மூங்கில் குடில் பள்ளிக்கு அழைத்துவந்து பகலில் கல்வியையும், மாலையில் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டுவதையும், இரவில் நடனத்தையும் தன் சொந்தச் செலவிலும் நண்பர்களின் ஒத்துழைப்பிலும் சொல்லிக்கொடுத்துவந்தவர். இத்தகைய சூழல் 5 ஆண்டுகளில் 124 மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பாக அமைந்து பட்டதாரிகளையும் முனைவர்களையும் உருவாக்கியது.

நாராயணனின் மகத்தான பணிகளில் ஒன்று: மிகச் சொற்பமானவர்களே புழங்கும் தன் இருளர் இனக் குடிகளின் பேச்சு பாஷைக்கு ‘லிபி’யை உருவாக்கியது. அதற்கு ‘ஆதின்’ என்று பெயரிட்டு அங்கீகாரம் வேண்டி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுமிருந்தார். எக்கச்சக்கப் பதில் கடிதங்கள், பாராட்டுகள், பரிந்துரைகள்; ஆனால், அங்கீகாரம் மட்டும் வரவில்லை. அதனால் ஒன்றும் அவர் சோர்ந்துவிடவில்லை. ‘ஆதின்’ லிபியிலேயே ‘அரிச்சந்திரா’, இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவல் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். தம் மக்களிடையே அவற்றை அரங்கேற்றினார்.

நாராயணனின் ஓட்டம் தன் இன மக்களோடு நின்றுவிடவில்லை. கேரளத்தில் அட்டப்பாடி ஆதிவாசிகள் சொசைட்டியின் வளர்ச்சியிலும், அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கான பங்களிப்பிலும் நாராயணனின் பங்கு இருக்கிறது. அட்டப்பாடி முக்காலி அணை, சித்தூர் அணை, பவானி-சிறுவாணிகளில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான போராட்டங்களிலும் இவரது குரல் முக்கியமானது. ‘எய்ம் ஃபார் சேவா’ என்ற திட்டம் அட்டப்பாடி பழங்குடி கிராமங்களுக்கெல்லாம் சென்றுசேர்ந்ததில் நாராயணனுக்கு நிறையவே பங்கு உண்டு. இந்தப் பணிக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட கேரள மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் இவரை அணுகியது. பழங்குடி பால்வாடி குழந்தைகளுக்காக மாதிரிப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருந்த அவர்கள், அந்த நூலை ஆதிவாசிக் குழந்தைகளுக்குப் புரியும்படி அவர்கள் மொழியிலே மாற்றித் தரும்படி நாராயணனைக் கேட்டுக்கொண்டது. ‘கொகாலு’ (பழங்குடி இசைக் கருவியின் பெயர்) என்ற தலைப்பில் உருவாக்கித்தந்தார். அதற்காக நினைவு விருதை நாராயணனுக்கு கேரள கவர்னர் சதாசிவம் கடந்த 2015-ல் தந்தது தனிச்சிறப்பு.

பணி ஓய்வுபெற்ற பின்பு முழு வீச்சில் ஆதிவாசி மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் நாராயணனின் ஆசை. அண்மையில் பணி ஓய்வு பெற்றபோது, “மூடப்பட்ட‘கானகத்தை’ நிரந்தரமாக ஆரம்பிக்கப்போகிறேன். அதில் எங்க மொழி, இசை, கலாச்சாரம், பண்பாடு, மருத்துவ முறைகளை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்போகிறேன்” என்று சூளுரைத்தார். ஆனால், அவர் அடுத்தடுத்து எதிர்கொண்ட மோசமான குடும்பச்சூழல்கள் அவரை நிலைகுலையச் செய்தது. சில மாதங்கள் முன்பு லேசான மாரடைப்பு. “அதிகம் பேசக் கூடாது, உணர்ச்சிவசப்படக் கூடாது” என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்த நிலையிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதிவாசி மக்களுக்கான ஹெச்ஆர்டிசியின் ‘கர்ஸகா’ விவசாயிகள் திட்டத்தில் கலந்துகொண்டார். தம் ஆதிப் பழங்குடிகளின் அருமை மேன்மைகளை அவர்களின் வாரிசுகளுக்கு வந்தேறிகள் தரும் கொடுமைகளை உணர்ச்சி பொங்கப் பேசினார். பேசி முடித்தவர் மயங்கி விழுந்தார். மீண்டும் மாரடைப்பு. தொடர்ந்து வீட்டிலும் படுக்கையில் வீழ்ந்து நேற்று (25.09.2019) காலை மரணமடைந்தார்.

அதிகாலையில் படரும் பனித்துளிகள்கூட புற்களை, இளந்தளிர்களை, அதைக் கடைவிரித்திருக்கும் மண்ணின் ஈரம் குறையாதிருக்க ஏதேனும் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டே செல்கிறது. அச்செயலை மனிதராகப் பிறந்த எல்லோருமா செய்கிறோம்? சுயநலம் சூழ்ந்திருக்கும் நம் சூழலில் மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தாசனூரு நாராயணனை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in


தாசனூரு நாராயணன்இருளர் பழங்குடிகூட்டுறவுத் துறைபொருளாதார மீட்டெடுப்புகானகம்ஆதின்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author