Published : 19 Sep 2019 08:35 AM
Last Updated : 19 Sep 2019 08:35 AM
வேலைவாய்ப்புச் செயலிக்கு ஏகோபித்த வரவேற்பு
வேலைவாய்ப்புக்கென பிரத்யேகமான ஒரு செயலியை (DEET) வடிவமைத்து, இந்தியாவுக்கே முன்னுதாரண மாநிலமாகியிருக்கிறது தெலங்கானா. 40 ஆயிரம் அரசு சாரா வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டிருந்த அந்த செயலி வெளியான அடுத்த நாளே முடங்கிப்போகும் அளவுக்கு மக்கள் அலைமோதியிருக்கிறார்கள். செயலியை வெளியிட்ட ஐந்து நிமிடங்களில் 10,000 பேர் உபயோகிக்க முயன்றிருக்கின்றனர்; 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்! வேலைவாய்ப்புக்குத் திண்டாடிக்கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது என்றாலும், இனி சுமையைக் குறைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றனர் வேலையில்லாப் பட்டதாரிகள்.
அதல பாதாளத்தில் காஷ்மீர் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரைக் கற்பனைசெய்துபாருங்கள். 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலால் ஆண்டு வருமானமாக ரூ.8,000 கோடி கிடைத்துவந்தது. இந்த முறை விளைச்சல் அங்கே அதிக அளவில் இருந்தும், போக்குவரத்து இடர்பாடுகளால் எல்லாமே முடங்கிக்கிடக்கின்றன. சுற்றுலாத் துறையிலும் கடும் சுணக்கம். இணைய சேவையைத் துண்டித்ததால் நிறைய ஐடி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து, மீள முடியா சரிவை எதிர்கொண்டிருக்கின்றன. தலைநகர் ஸ்ரீநகரில் சகஜநிலை திரும்பாததால், வணிக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு இதற்கும் சேர்த்து கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.
ஓட்டுநர்களைக் காக்கும் கலிபோர்னியா: இந்தியாவும் பின்பற்ற வேண்டும்!
ஊபர், லிஃப்ட் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் தங்களிடம் பதிவுசெய்துகொண்டுள்ள ஒப்பந்த ஓட்டுநர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என்ற மசோதா கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. 2020 ஜனவரி முதல் தேதியிலிருந்து இச்சட்டம் அமலுக்கு வரும். குறைந்தபட்ச ஊதியம், மருத்துவப் பயன்கள், ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு ஆகியவையும், நிர்வாகத்துடன் பேசி தங்களது ஊதியம், பணி நிலைமை ஆகியவற்றை மேம்படுத்தவும் ஓட்டுநர்களுக்கு இச்சட்டம் உதவியாக இருக்கும்.
இதற்கு அந்த நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல, இந்தச் சட்டத்துக்கு எதிராக மக்களிடம் கருத்தெடுப்பு நடத்த இவ்விரு நிறுவனங்களும் 6 கோடி டாலர்களைச் செலவழித்துள்ளன. இச்சட்டம் அமலாவதைத் தடுக்க வேண்டும் என்று நிறுவனங்கள் முயல்வது தெரிகிறது. அதைத் தாண்டியும் மக்கள் பிரதிநிதிகள் உறுதியாக நிற்கிறார்கள். இங்கேயும் அப்படி நடக்குமா?
வங்கம் சென்ற மோடியின் மனைவியை ஆரத்தழுவி வரவேற்ற மம்தா
வங்க மாநிலம் அசன்சாலில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலுக்கு வழிபடச் சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென். தரிசனம் முடித்துவிட்டு குஜராத் திரும்ப விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். டெல்லியில் மோடியைச் சந்திப்பதற்காகக் கிளம்பிய வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விமான நிலையத்தில் யசோதாபென் இருப்பது தெரிவிக்கப்பட்டது. உடனே, யசோதாபென்னிடம் விரைந்த மம்தா, அவரை ஆரத்தழுவி குசலம் விசாரித்தார்.
புடவையும் உறவினர்களுக்கு இனிப்புகளும் பரிசளித்தார். யசோதாபென் வங்கம் வந்த காரணம் சொன்னதும், “கொல்கத்தா நகரிலேயே உள்ள காளிகட்டம், தட்சிணேஸ்வர் கோயில்களுக்குச் சென்றிருக்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார் மம்தா. “இல்லை” என்றதும், “இனி, வங்கத்துக்கு வருவதாக இருந்தால் முன்கூட்டியே என்னிடம் தகவல் தெரிவியுங்கள்” என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருக்கிறார் மம்தா.