360: பட்டுக்கோட்டைகள் - கறுப்பு-சிவப்பு நட்பு!

360: பட்டுக்கோட்டைகள் - கறுப்பு-சிவப்பு நட்பு!
Updated on
2 min read

பட்டுக்கோட்டைகள்: கறுப்பு-சிவப்பு நட்பு!

பட்டுக்கோட்டை என்றதும் உடனே தமிழகத்தின் புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான அழகிரியும் பாடலாசிரியர் கல்யாணசுந்தரமும் நினைவுக்குவருவார்கள். அழகிரி திராவிட இயக்கத்தவர், கல்யாணசுந்தரமோ பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர். சக்தி நாடக சபாவின் நடிகராக புதுச்சேரியில் அடியெடுத்துவைத்த கல்யாணசுந்தரம், பாரதிதாசனின் மாணவர்களில் ஒருவராக அவருடனேயே தங்கிவிட்டார்.

பாரதிதாசன் எழுதுகிற கவிதைகளைப் படியெடுப்பதோடு அவர் நடத்திவந்த ‘குயில்’ ஏட்டையும் கல்யாணசுந்தரம் பார்த்துக்கொண்டார். புதுச்சேரிக்குச் செல்வதற்கு முன்பே பாரதிதாசனைச் சந்திப்பதற்காக இரண்டு பேரிடம் அறிமுகக் கடிதங்களை வாங்கி வைத்திருந்தார் கல்யாணசுந்தரம். கடிதம் கொடுத்த ஒருவர் அணைக்காடு டேவிஸ். மற்றொருவர் அழகிரி. கல்யாணசுந்தரத்துக்கும் அழகிரிக்கும் இடையிலான இந்த நட்பு பலர் அறியாதது.

சிவாஜியே வியந்த சிறந்த நடிகர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனே ஒருவரின் நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார். அவர் நடிகர் அல்ல, தமிழறிஞர். ‘‘என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பார்கள். ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன். நாங்கள் எல்லாம் பல பேர் பார்த்திருக்க நடிக்கக் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாருமே இல்லா நிலையில், எதிரில் உள்ளவர்களோடு உரையாடுவதுபோல், கேள்வி கேட்பது போல் மிகச் சரியான பாவனை செய்வதுதான் உயர்வான, கடினமான நடிப்பு.

அதை மிகச் சரியாகச் செய்தவர் நன்னன்’’ என்று வியந்து பாராட்டியிருக்கிறார் சிவாஜி. சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகளும் அதைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ்ப் பண்ணை’, ‘களத்துமேடு’ நிகழ்ச்சிகளிலும் தமிழ் இலக்கண நிகழ்ச்சிகளை நடத்தியவர் நன்னன். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்காக அவர் நடத்திய காணொலி வகுப்புகள் கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆண்மையா? ஆளுமையா?

ஒவ்வொரு துறையிலும் திசைவழிகளைத் தீர்மானிக்கும் மதிப்பிற்குரியவர்களைக் குறிப்பதற்கு ஆளுமை என்ற சொல்லை இன்று சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். முதன்முதலாக இந்த வார்த்தை 1968-ல் வெளிவந்த கலைக்களஞ்சியத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. இப்புதிய சொல்லாக்கத்தை அளித்தவர்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

கலைக்களஞ்சிய உருவாக்கத்தின்போது தமிழ் வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் கலைச்சொல் குழு தினந்தோறும் மாலை 4 மணியளவில் கூடி 7 மணி வரையில் விவாதித்தது. ஒவ்வொரு நாளும் 10 அல்லது 15 சொற்கள் வரையில் முடிவானது. சில நாட்களில் ஒரு கலைச்சொல்லைக்கூடக் கண்டறியவோ புதிதாக உருவாக்கவோ முடியாமலும் போனதுண்டு. ஒருநாள் ‘பெர்சனாலிட்டி’ என்பதற்குப் பொருத்தமான கலைச்சொல்லைக் கண்டறிய முயன்றார்கள். அதற்கு முன் இந்தச் சொல்லுக்கு இணையாக மூர்த்திகரம், தோற்றம், தோற்றப்பொலிவு போன்ற பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. புழக்கத்திலிருந்த இந்த வார்த்தைகள் கலைச்சொற்கள் குழுவுக்கு மனநிறைவை அளிக்கவில்லை.

ஒரு சொல்லைக்கூட இறுதிசெய்த முடியாமல் அன்றைக்குக் கூட்டம் முடிந்தது. கடைசியில், ‘பெர்சனாலிட்டி’க்கு இணையான வார்த்தையைக் கண்டறியும் பொறுப்பு தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரிடம் ஒப்படைக்கப்பட்டது.‘பெர்சன்’ என்ற வார்த்தையிலிருந்துதான் ‘பெர்சனாலிட்டி’ வந்தது. ‘பெர்சன்’ என்றால் ஆள். ஆனால், ஆள் என்ற வார்த்தையோடு தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால் இலக்கணப்படி ‘ஆள்+மை=ஆண்மை’ என்றே வரும். பால்பேதம் நீக்கி ஆளுமை என்ற புதுச்சொல்லை உருவாக்கினார் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

ஆளுமை போன்று 25,000-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் கலைக்களஞ்சியத்துக்காக உருவாக்கப்பட்டன. கலைச்சொற்கள் குழுவிலிருந்த அறிஞர்கள் இந்தப் பணிக்காக எந்தக் கட்டணமும் பெறவில்லை. தினந்தோறும் மாலைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட தேநீரும் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளும் மட்டுமே அவர்களுக்குச் செய்யப்பட்ட செலவு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in