Published : 18 Sep 2019 07:47 am

Updated : 18 Sep 2019 07:47 am

 

Published : 18 Sep 2019 07:47 AM
Last Updated : 18 Sep 2019 07:47 AM

லண்டன், பாரிஸில் ஒலிப்பது மதுரை, கோவையில் ஒலிக்காதா? நாங்கள் கேட்பது சலுகை அல்ல.. உரிமை!

thangar-bachan

தங்கர் பச்சான்

தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும், நுழை வாயில் வழியே விமான நிலையத் துக்குள் நுழைந்து விமானத்தில் பயணம் செய்து, விமான நிலையத்தின் வெளி வாயிலைக் கடந்து வெளியேறும்வரை வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பதுபோலவே உணர்கிறேன். 2 நாட் களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பியபோதும் அதே உணர்வும், மன உளைச்சலுமே நிகழ்ந்தது.

தமிழகத்துக்குள் விமானத்தில் பயணிப் பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழ் பேசுபவர்கள், தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆனாலும், விமான நிலையங்களிலும், விமானங்களிலும் எந்த ஒரு அறிவிப் பும் தமிழில் செய்வதில்லை. பெரும் பாலானோருக்கு விளங்காத இந்தி, ஆங்கிலத்திலேயே அறிவிக்கின்றனர். பயணத்திலும் நடு நடுவே பாதுகாப்பு எச்சரிக்கைகளை நமக்குப் புரியாத மொழிகளில் அறிவிக்கின்றனர். என்ன சொல்கிறார்கள் என்பது விளங்காமலே, பயணிகளும் அதை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

பெரும்பாலான பயணிகளின் தாய் மொழியான தமிழிலும் இந்த அறிவிப்பை செய்தால் எந்தமாதிரியான இழப்பு ஏற்படும் என்பதை இந்த நிறுவனங்களும், அரசாங்கமும் நமக்கு விளக்கவேண்டிய கடமை இருக்கிறது.

தமிழில் அறிவிப்பு செய்யாததற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். அப்போதெல்லாம்கூட, உடன் பயணிக் கும் தமிழர்களே எனக்கு ஆதரவாகப் பேச முன்வருவது இல்லை. ‘‘ஏன் தமிழில் அறிவிப்பு செய்வதில்லை?’’ என்று இப் போதும் எதிர்த்துக் கேட்டேன். இத்தனைக் கும் பணிப்பெண்கள் தமிழில் பேசுபவர் கள்தான். ஆனால், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு செய்யுமாறு தங் களுக்கு ஆணை பிறப்பித்திருப்பதாக சொன்னார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டியதுடன், விமானங்களில் இனி தமிழிலும் அறிவிப்பு செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித் தார். அதை எண்ணி மகிழ்ந்தோம். ஆனால், இன்றுவரை அது நிறைவேறவில்லை.

லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திலும், பாரிஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யும்போது, கோயம்புத் தூர், மதுரை, திருச்சி, சேலம் செல்லும் விமானங்களில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு செய்வதும், தமிழ் மக்களாகிய நாமெல்லாம் அதை கண்டும் காணாமல் காதை மூடிக்கொண்டு பயணிப்பதும் தொடர வேண்டுமா?

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தாய்மொழிப் பற்றோடு, தமிழில் பேசி பதவி ஏற்றுக்கொண்டதை ஊடகங்களில் கண்டும், படித்தும் புளகாங்கிதம் அடைந்தோம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதி கள், தலைவர்களும் இந்தி திணிப்பு செய்தால் உயிரை விடத் தயார் என கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் மொழியைக் காக்கவேண்டி முறையிடுகிறார்கள். இவர்கள்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் விமானங்களில் நாள்தோறும் பயணிக் கிறார்கள். ஆனால், விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படாததை இவர்கள் கண்டித்ததே இல்லை. தமிழில் அறிவிப்புகள் செய்யாத விமானங்களில் பயணம் செய்ய மாட்டோம் என இவர்கள் அறிவிக்க வேண்டும்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பல மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து இந்திய ஒன்றியமாக இருந்து செயல் படுகிற மத்திய அரசுக்கு அந்தந்த மாநிலங் களுக்கான மொழியையும், அதைச் சார்ந்த மக்களையும் மதித்து ஆட்சி செய்யவேண்டிய கடமையும், அறமும் இருக்கிறது. அதன் அடிப்படையில் இனி யாவது தமிழகத்துக்குள் பயணிக்கிற மற்றும் தமிழகத்துக்கு வந்து செல்லும் எந்த விமானமாக இருந்தாலும் தமிழிலும் அறிவிப்பு செய்வதை கட்டாயமாக்கும் ஆணையை அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்.

நாம் தமிழில் அறிவிப்பு செய்யச் சொல்லி மத்திய அரசிடம் கேட்பது சலுகை அல்ல.. உரிமை!. இதை இனியாவது உணருவோம்!

- கட்டுரையாளர்
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்

லண்டன்பாரிஸ்மதுரைகோவைசலுகைஉரிமைதமிழ் பேசுபவர்கள்தாய் மொழிதங்கர் பச்சான்தமிழ் மொழிநாடாளுமன்றம்சட்டமன்றம்மத்திய அரசு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author