Published : 16 Sep 2019 09:54 am

Updated : 16 Sep 2019 09:54 am

 

Published : 16 Sep 2019 09:54 AM
Last Updated : 16 Sep 2019 09:54 AM

360: குடியேறிகளின் எதிர்காலம் என்னவாகும்?

mumbai-bumumbai-busesses

குடியேறிகளின் எதிர்காலம் என்னவாகும்?

தேர்தலுக்குப் பிறகு அமித் ஷா முன்னெடுத்த பிரச்சாரங்களுள் ஒன்று, சட்டவிரோதக் குடியேற்றங்களைக் களையெடுப்போம் என்பது. முக்கியமாக வங்கதேச அகதிகள். எனினும், அரசு முன்வைக்கும் வங்கதேச அகதிகளின் எண்ணிக்கைக்கும், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முன்வைக்கும் எண்ணிக்கைக்கும் இடையே பெருத்த வேறுபாடு காணப்படுகிறது.

இதற்கிடையே தேசிய குடிமக்கள் பதிவேட்டை வடகிழக்கில் ஆரம்பித்து, இந்தியா முழுமைக்கும் விரிவாக்கப்படும் என்று அமித் ஷா எச்சரித்திருக்கிறார். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் 0.5%-க்கும் குறைவாகவே குடியேறிகள் காணப்படுகின்றனர் என்கிறது மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலிருந்து திரும்பியவர்களே. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 53 லட்சம் பேர் இந்தியாவுக்கு வெளியில் பிறந்தவர்கள் என்கிறது. 2001-ம் ஆண்டிலோ இந்த எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது. ஆக, குடியேற்றம் 0.6%-லிருந்து 0.4%-க்கு இறங்கிவிட்டது. மேலும், வங்கதேசத்தில் பிறந்து அசாமில் வசிப்போரின் எண்ணிக்கை 2011 கணக்கெடுப்பின்படி 64,117. தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விரிக்கப்படுமானால் எத்தனை பேர் உள்நாட்டிலேயே அகதிகளாவார்களோ!

துரோணாச்சாரியர் பாவா!

பாவா என்று ஹாக்கி வீரர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் மெர்ஸ்பான் படேல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியர் விருதை இந்த ஆண்டு பெற்றுள்ளார். 69 வயதாகும் பாவாவின் சிறப்பியல்பே திறமை எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து மெருகேற்றுவதுதான். பாம்பே ரிபப்ளிகன்ஸ் என்ற ஹாக்கி குழுவில் பாவா பயிற்சியாளராக இருந்து தேசிய அணிக்கு 30-க்கும் மேற்பட்ட வீரர்களை உருவாக்கித் தந்திருக்கிறார். தன்னிடம் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள், சிறுவர்களிடம் ஒரே நேரத்தில் கடுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார் பாவா என்று அந்த வீரர்கள் நினைவுகூர்கிறார்கள். வெறும் வயிற்றோடு வீட்டுக்குப் போகக் கூடாது என்பதற்காக அவர்களைச் சாப்பிட வைத்து அனுப்புவாராம் பாவா! ஹாக்கியைப் பெரும்பாலும் ஏழைச் சிறுவர்களும் இளைஞர்களும்தான் விளையாடுகிறார்கள் என்பதால் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு உள்ள கட்டமைப்பு ஹாக்கிக்கு இல்லை என்பது பாவாவின் மனக்குறை.

காங்கிரஸுக்கு ஹூடா தரும் நெருக்கடி


காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்றிருக்கும் சோனியா காந்திக்கு மிக அருகிலேயே ஒரு தலைவலி பெரிதாகிக்கொண்டிருக்கிறது. ஹரியாணா மாநில முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் வரவிருக்கும் வேளையில், தன்னைத்தான் கட்சியின் மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மாநிலத் தலைவராக இருந்தால்தான் ஒருவேளை ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை வலு கிட்டிவிட்டால் மீண்டும் முதலமைச்சராகிவிட முடியும். மாநிலத் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட அசோக் தன்வாரை வெளியேற்றினால்,

கட்சிக்கு இள ரத்தத்தைப் பாய்ச்ச நினைக்கும் ராகுல் காந்தியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும். தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக ஹூடா எச்சரித்திருக்கிறார். அப்படிச் செய்தால், காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை மேலும் குறைப்பார் என்பதால் ஹூடாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறது காங்கிரஸ்.

நடத்துநர் இல்லா மும்பைப் பேருந்துகள்

மும்பை மாநகர ‘பெஸ்ட்’ போக்குவரத்துக் கழகம் 75 தடங்களில் நடத்துநர்கள் இல்லாத பேருந்து சேவையை நடத்தத் தீர்மானித்துள்ளது. ஓட்டுநர் மட்டும் இருப்பார். அவருக்கு அருகில் உள்ள வழியாக மட்டுமே பயணிகள் ஏறியிறங்க வேண்டும். இதில் சாதாரணப் பேருந்தில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5, குளிரூட்டப்பட்டதில் ரூ.6. குறைந்த கட்டணத்தில் அதிகப் பயணிகள், ஓரிடத்தில் தேங்காமல் பயணத்தைத் தொடர இந்த சேவை நடத்தப்படுகிறது. பெஸ்ட் நிறுவனத்தின் 3,100 பேருந்துகளை அன்றாடம் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். புதிய பேருந்து சேவைகளால் ஷேர் டாக்சிகளுக்கும் ஆட்டோக்களுக்கும் வசூல் குறையும் என்கின்றனர். ஆனால், மும்பை மாநகரப் பயணிகள் நெரிசலைக் குறைக்க இதைப் போன்ற புதிய உத்திகள் அவசியம் என்ற ஆதரவுக் குரல்கள் அங்கு எழாமல் இல்லை.

மும்பைப் பேருந்துகள்குடியேறிகள்ரத்தம்

You May Like

More From This Category

More From this Author