Published : 13 Sep 2019 08:33 am

Updated : 13 Sep 2019 08:33 am

 

Published : 13 Sep 2019 08:33 AM
Last Updated : 13 Sep 2019 08:33 AM

பெண் பார்வை: பசியில் பிறந்த பாடல்!

song-from-hunger

நவீனா

உலக நாடுகளில் பேசப்படும் பெண்ணியக் கருத்துகள் பெரும்பாலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் எடுபடாமல்போவதற்கு முக்கியமான காரணம், அவை பெரும்பாலும் படித்த, அலுவலகப் பணியில் இருக்கக்கூடிய நடுத்தரவர்க்கத்துப் பெண்களைப் பற்றி மட்டும் பேசுவதால்தான். அவர்களின் வாழ்க்கையையும் அன்றாடச் சிக்கல்களையும் சார்ந்தே அவை கட்டமைக்கப்படுகின்றன. இதுபோன்ற பெண்ணியம் உயர் மேல்தட்டுப் பெண்களையும் கீழ்த்தட்டுப் பெண்களையும் பெரிதும் கண்டுகொள்வதில்லை. நம் ஊர்களில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைக் காட்டிலும் கிராமப்புறப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மேடைகளில் பேசப்படும் பெண் சுதந்திரமானது அவர்களிடம் எந்த விதத்திலும் தாக்கம் செலுத்துவதில்லை. உயர் மேல்தட்டு மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்க்கை இன்னும் சமூகவெளியில் அதிகம் பகிரப்படாத வாழ்க்கை முறையாகவேதான் இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், வட்டார வழக்குச் சொற்களை சேகரிக்கும் பொருட்டு நான் அணுகிய பலரில், மிக அழகாகப் பாடக்கூடிய மூதாட்டி ஒருவரும் இருந்தார். கூடை முடைவதைத் தொழிலாகக் கொண்டிருந்த அவரது மண்குடிசையில் சாணமிட்டு மெழுகிய தரை மீது வார்ப்பட்டைகளும், அவற்றுக்கு மத்தியில் புகைந்துகொண்டிருந்த ஒரு அடுப்படியும், அதன் அருகில் சுள்ளிகளும் குலுக்கைகளும் இருந்தன. ஒப்பாரி, தாலாட்டு, கதிரறுக்கும்போது பாடும் பாடல்கள் என்று பலதரப்பட்ட கிராமியப் பாடல்களையும் அழகாகப் பாடிக்காட்டிய அவரது குரலில், வயது முதிர்ச்சியால் ஏற்படும் நடுக்கம் இருந்தது. ஆனால், வார்த்தைகள் அவரது நினைவிலிருந்து தவறவில்லை. “நீங்க எப்ப இருந்து பாட ஆரம்பிச்சீங்க பாட்டி?” என்று கேட்டதற்கு அந்த மூதாட்டி, “பசிதே ஆத்தா, என் மூத்த பிள்ளை வயித்துல இருந்தப்ப, குடிக்கக் கஞ்சிகூட இருக்காது. அரிசிப் பருப்பு வாங்கக் காசு இருக்காது. கடுமையான பசி. அந்தப் பசி பொறுக்காம, என்ன செய்யன்னு தெரியாமத்தேன் பாட ஆரம் பிச்சேன். பாடப் பாட பசியும் மறந்துபோச்சு. வேலைக் களைப்பு தெரியாம இருக்க பாட்டு படிக்கிற மாதிரி, பாட்டி பசி தெரியாம இருக்கத்தே பாட்டுப் படிக்கிறேன்” என்றார்.

நம்மூரில் பெண்ணியத்தின் நிழல்படாத பிராந்தியங்களில் ஒன்று இது. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விடுபட்டுப்போன பல கதைகள் இவர்களிடம் ஒளிந்திருக்கின்றன. இவர்களின் வாழ்க்கை முறைகளையும் கதைகளையும் வெளிக்கொண்டுவருவது பெண்கள் சார்ந்த புரிதலை மேம்படுத்தி, பெண் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும். இதனுடன், ஏனைய தளங்களிலும் உள்ள பெண்களைப் பற்றிய தெரியாத கோணங்களையும் இணைத்துப் பார்ப்பது என்ற எண்ணமே இந்தப் பத்தியின் அடிப்படை. மேலும், 21-ம் நூற்றாண்டானது எல்லாத் தரப்பிலும் உள்ள பெண்களின் வாழ்க்கை மீது எண்ணற்ற நெருக்கடிகளையும் சாத்தியங்களையும் கொட்டியிருக்கிறது. அவற்றை எப்படியெல்லாம் அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் உரையாடலாம்.

(வெள்ளிதோறும் உரையாடுவோம்...)

- நவீனா, ஆங்கிலப் பேராசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

பசியில் பிறந்த பாடல்பாடல்கள்தாலாட்டுநாட்டுப்புறப் பாட்டு

You May Like

More From This Category

More From this Author