Published : 13 Sep 2019 07:06 am

Updated : 13 Sep 2019 07:06 am

 

Published : 13 Sep 2019 07:06 AM
Last Updated : 13 Sep 2019 07:06 AM

உள்ளாட்சித் தேர்தல் எப்போதுதான் நடக்கும்?

local-body-election-in-tn

செ.இளவேனில்

தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஏறக்குறைய மூன்றாண்டு காலமாக தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பு இல்லாமலேயே அரசு அலுவலர்களைக் கொண்டு உள்ளாட்சி நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு ‘243ஈ’-ன்படி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட அடுத்த ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தது. தமிழ்நாடு தேர்தல் ஆணையமோ மாநில அரசின் விருப்பத்தின்படி உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாகத் தள்ளிப்போடுகிறது என்ற விமர்சனத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதே சூட்டில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடித்துவிட முயன்றது அதிமுக. ஆனால், தேர்தல் அறிவிப்பில் பழங்குடியினருக்கும் பட்டியலினத்தவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது விவாதமானது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் திமுக தொடர்ந்த வழக்கின்பேரில் அப்போதைய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது. எளிதில் சீரமைத்திடக்கூடிய பிரச்சினை. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, அடுத்து அவருடைய மறைவு, ஆட்சிக் குழப்பங்கள், கட்சிப் பிளவுகள் என்று அடுத்தடுத்து சங்கடங்களைச் சந்தித்த அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசின் மனவோட்டத்துக்கு ஏற்ப அடுத்தடுத்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலுமாக மேல்முறையீடுகளைச் செய்து தேர்தல் ஆணையம் தேதியைத் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறது. மழைக்காலம், கோடைகாலம், வார்டுகளைத் திருத்தியமைக்கும் பணி, மக்களவைத் தேர்தல் பணிகள் என்று நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி காலத்தை நீட்டித்துக்கொண்டே இருக்கிறது.

தேர்தல் யுத்தம்

கடைசியாக, அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் ‘கௌரவ’ தோல்வியைச் சந்தித்திருக்கும் அதிமுகவும் புதிய உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருப்பதாய் அறிவித்திருக்கிறது. இந்த முறையாவது நீதிமன்றத்தில் அளித்த உறுதியைத் தேர்தல் ஆணையமும் மக்களுக்கு அளித்த உறுதிமொழியை அதிமுகவும் காப்பாற்றுமா?

அதிமுக தலைமையிலான அரசோ உள்ளாட்சித் தேர்தலை வெறும் கட்சி அரசியலாகவே பார்க்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மேலும் ஒரு தேர்தல் யுத்தமாக இருக்கலாம். ஆனால், இந்திய அரசமைப்பின் சரித்திரப் பெருமிதங்களில் அதுவும் ஒன்று. சுதந்திர இந்தியாவில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது அதன் தோல்விக்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததுதான் காரணம் என்று கண்டறிந்தது பல்வந்த்ராய் மேத்தா தலைமையிலான குழு. மாவட்டம் முழுமையும் மூன்றடுக்கு முறையில் அதிகாரங்களைப் பரவலாக்குவது அவசியம் என்று பரிந்துரைத்தது அசோக் மேத்தா தலைமையிலான குழு. இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரும் பொருளாதார மந்தத்தை நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு களுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலை என்று அழைக்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை முன்பைக் காட்டிலும் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பே இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

தமிழகத்தின் அலட்சியம்

மத்தியில் நாடாளுமன்றமும் மாநிலத்துக்கு சட்டமன்றமும் இருந்தாலும் அவையெல்லாம் நாடு அல்லது மாநிலம் முழுவதற்கும் தேவையான சட்ட திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகள். கிராமமோ நகரமோ ஒவ்வொரு ஊரும் தனது அடிப்படைத் தேவைகளைத் தானே நிறைவுசெய்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதே உள்ளாட்சி அமைப்புகள். உள்ளாட்சி அமைப்பு களுக்கான நடைமுறைகளையும் அதிகாரங்களையும் அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

அரசமைப்பின் இந்த மதிப்புக்குரிய கூறுகளை தமிழகம் தொடர்ந்து அலட்சியம் செய்துகொண்டே இருக்கிறது. மேற்கண்ட திருத்தங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியினருக்கும் பட்டியலினத்தவருக்கும் அவர்களது எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களிலும் தலைவர்களிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம்பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டது.

பெருமை பேசும் தகுதி இருக்கிறதா?

இதுவரையிலும் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களின் வாயிலாகப் பட்டியலினத்தவரும் பெண்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிர்வாகத்திலும் அரசியலிலும் நேரடியாகப் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களவையில் இன்னும் 33% பங்கேற்பைப் பெற முடியாத பெண்கள் உள்ளாட்சி நிர்வாகத்தில் அந்த வாய்ப்பைப் பெற்றதோடு சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். உள்ளாட்சியில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு கிராமப்புறங்களில் ஏற்படுத்தியிருக்கும் சமூக மாற்றங்கள் இதுவரையிலான சீர்திருத்த இயக்கங்கள் செய்ய முடியாததையும் சாத்தியமாக்கியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் என்பவை சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலித்து தெருவிளக்கு, குடிநீர் வசதிகளைச் செய்துதருகிற அமைப்புகள் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மாண்புகளைச் சமூகத்தின் வேர் வரைக்கும் கொண்டுசெலுத்தும் மதிப்புக்குரிய நிறுவனங்கள். எனவே, தள்ளிப்போடப்படுவது உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல; அரசுத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றுசேரும் வாய்ப்பு, தேர்தல் அரசியலில் பெண்களின் பங்கேற்பு, சமூகரீதியிலான அடித்தட்டு மக்கள் அரசியல் பங்கேற்பு என அனைத்துமே மறுக்கப்படுகிறது.

தமிழகத்தின் பழங்காலத்திய உள்ளாட்சி அமைப்புகளை ஆய்வுசெய்த தரம்பால் அதை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக வலியுறுத்திய காலமும் ஒன்றிருந்தது. சோழர் காலத்து உள்ளாட்சி அமைப்புகளைக் கண்டு உலகமே வியக்கிறது என்று இன்னமும் நாம் பழம்பெருமை பேசத் தவறுவதில்லை. இனிமேலும் குடவோலை முறை, உத்திரமேரூர் கல்வெட்டு என்றெல்லாம் பெருமை பேசும் தகுதி நமக்கு இருக்கிறதா என்ன?

உள்ளாட்சித் தேர்தல்உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம்2016 சட்டமன்றத் தேர்தல்தேர்தல் யுத்தம்

You May Like

More From This Category

More From this Author