360: ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலா?

360: ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலா?
Updated on
2 min read

ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலா?

கடந்த செப்டம்பர் 3 அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காஷ்மீரைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களின் குழு ஒன்று சந்தித்திருக்கிறது. அவர்களிடம் கூடிய சீக்கிரமே காஷ்மீரில் பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தவிருப்பதாக அமித் ஷா கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அவர்களில் ஒருவரே முதல்வராகக்கூட ஆகலாம் என்றும் நம்பிக்கையூட்டியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, அங்குள்ள அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றிய பேச்சுகள் எழுந்திருக்கின்றன. கடந்த 2018-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது பிரதானக் கட்சிகளின் புறக்கணிப்பால் மிகக் குறைவான வாக்குகளே பதிவாகின என்றாலும் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு வெளியே இருப்பவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு இது இடம் அளித்தது. இதை மனதில் வைத்துத்தான் உள்ளாட்சி மூலமாக ஜம்மு-காஷ்மீரை முழுக்கத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான கருவியாக உள்ளாட்சித் தேர்தலை இந்திய அரசு தன் கையில் எடுத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இயற்கை அராஜகத்துக்கு ஹர்புர் கிராமம் தந்த பதிலடி

தொடர் வெள்ளத்தாலும் கடுமையான வறட்சியாலும் பந்தாடப்பட்ட பிஹாரிலுள்ள ஹர்புர் போச்ஹா கிராமத்தவர்களால் எப்படி தன் கிராமத்தை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக்க முடிந்தது? இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரான பிரேம் ஷங்கர் சிங். 3,000 ஏக்கர் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி பசுமையாக்கும் கனவோடு கிராமத்தவர்களை ஒன்றுசேர்த்து வறண்டு கிடந்த பிரம்மாண்ட நிலத்தில் மூன்று குளங்களைத் தொடங்கியதுதான் ஆரம்பப் பணி. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 17 ஆயிரம் மரங்களை உருவாக்கியிருக்கின்றனர் ஹர்புர்வாசிகள். இயற்கைக்குப் பங்களித்தால் அது நமக்குத் திருப்பிச்செய்யும்தானே? பழங்கள் தரும் மரங்களாலும், மீன்கள் தரும் குளங்களாலும் ஹர்புர்வாசிகளின் மாதச்சம்பளம் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு நல்ல தலைமையும், அதற்கு ஒத்துழைக்கும் கூட்டமும் வாய்த்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம்!

நெருங்கிவரும் தேர்தல்: நெருக்கம் காட்டும் கூட்டணிகள்

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அக்டோபரில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜகவுடன் தங்களது கூட்டணி தொடரும் என்றும், எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றும் தெளிவாக அறிவித்துவிட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான நெருக்கம் முப்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. என்றாலும், மகாராஷ்டிராவில் கடந்த 2014 சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் தொகுதிப் பங்கீட்டை சிவசேனாவே முடிவெடுத்துவந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பிறகு, சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் சரிபாதியைத் தனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அடம்பிடித்தது. சிவசேனா பிடிகொடுக்கவில்லை.

கடைசியில், கால் நூற்றாண்டு கூட்டணி உடைந்து இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. 122 தொகுதிகளில் வென்றது பாஜக. பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் சிவசேனா கூட்டணி தவிர்க்க முடியாததாக மாறிப்போனது. இன்னொருபக்கம் காங்கிரஸ்-தேசியவாதக் கூட்டணியும் இதே பிரச்சினையைச் சந்தித்தது. சரிபாதி தொகுதிகள், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்று தேசியவாத காங்கிரஸ் கேட்டதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. அந்தப் பாரம்பரியக் கூட்டணியும் உடைந்து, இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவின. மத்தியில் பாஜக ஆட்சி தொடரும் நிலையில், நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது சிவசேனா. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடுகள் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். அந்தக் கூட்டணியும் சுமுகமாகத்தான் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொண்டாக வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in