கதம்பம்: விவாகரத்து எங்கே கிடைக்கும்?

கதம்பம்: விவாகரத்து எங்கே கிடைக்கும்?
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது ஆம்பூர் பவித்ரா விவகாரம். சென்னை உயர் நீதிமன்றத்தில் பவித்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் விவாகரத்து கோரினார் பவித்ரா. அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், “விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா?” என்று கேட்டதாகவும், “உன்னால்தான் கலவரம்” என்ற தொனியில், “நீ”, “உன்” என்று பவித்ராவை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது பெரும் விவாதங்களைக் கிளப்பின.

ஒரு சாமானியப் பெண் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விசாரிக்கும் நீதிபதிகளிடம், “எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று கோருவது எப்படித் தவறாகும்? சாமானியர்கள் என்றால், எப்படியும் அழைக்கலாமா? ஜனநாயக நாட்டில் இன்னும் பிரபுத்துவ மனநிலையிலேயே நீதிபதிகள் இருக்கிறார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாகப் பெண்ணியவாதிகள், பெண் எழுத்தாளர்கள், பெண் வழக்கறிஞர்கள் என்ன நினைக்கிறார்கள்?

அஜிதா, வழக்கறிஞர்:

பவித்ராவை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வி நமக்கு உணர்த்துவது என்ன? இன்னமும் ஆண் சார்புத்தன்மை கொண்ட சமூகம்தான் இது என்பதைத்தான் உணர்த்துகிறது. அதன் ஒப்புதல் வாக்குமூலம்போலத்தான் இருக்கிறது நீதிபதிகளின் வார்த்தைகள். நம் சமூகத்தில் நீதிமன்றங்கள்கூடச் சமத்துவமில்லாமல் இருக்கின்றன என்பது பேரவலம்.

சல்மா, எழுத்தாளர்:

இடத்தில்தானே விவாகரத்து கேட்க முடியும்? கடையில் கிடைக்காது என நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் பவித்ரா. அவருக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. நிச்சயம் விவாகரத்து கோரும் ஒரு ஆணிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்காது.

சுகிர்தராணி, கவிஞர்:

பாலியல் பாகுபாடு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நீதி வழங்கும் நீதிபதிகளிடமும் ஆண்களே வெளிப்படுகிறார்கள். ஒரு பெண்ணாக பவித்ராவை நான் ஆதரிக்கும்போதுகூட, ‘ஓ! உனக்கும் இப்படிப்பட்ட காதல் உண்டோ?’ என்பதுபோலப் பார்க்கும் கண்கள் இங்கே அதிகம் என்பது தெரியாததா என்ன?

ஓவியா, சமூக ஆர்வலர்:

பவித்ரா ஒன்றும் கடையில் கேட்கவில்லையே விவாகரத்து? எங்கே கேட்க வேண்டுமோ அங்குதான் கேட்டிருக்கிறார். காயப்பட்டவர் மருத்துவமனையில் சேர்ந்ததும், சரியான இடத்துக்கு வந்துவிட்டோம். இனி எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் எனும் ஆசுவாசம் வருகிறது. அதேபோல நீதி வேண்டி நீதிமன்றத்துக்குள் நுழையும் ஒரு பெண்ணுக்கு அவமானம்தான் மிஞ்சுகிறது. எனக்கு நீதி வேண்டும் எனும்போது எங்கே கேட்பது?

ரஜினி, வழக்கறிஞர்.

நீதிமன்றத்துக்குள் நீதிபதியை யாரேனும் அவமரியாதையாகப் பேசினால், உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும். ஆனால், நீதிபதிகள் சாமானியர்களை ‘நீ’, ‘உன்’ என மரியாதை குறைவாகப் பேசினால் அதற்குப் பெயர் அக்கறையா? முதலில் பவித்ரா 23 வயது நிரம்பிய மேஜர். ஆட்கொணர்வு மனுவில் விசாரிக்கப்படும் அவரிடம் ‘நீ அங்கே போ, இங்கே போ’ எனச் சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. இது பவித்ராவின் அடிப்படை மனித உரிமையை மறுக்கும் செயல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in