Published : 11 Sep 2019 10:12 am

Updated : 11 Sep 2019 10:12 am

 

Published : 11 Sep 2019 10:12 AM
Last Updated : 11 Sep 2019 10:12 AM

360: வீடுதோறும் பாரதி- யாரெல்லாம் காரணம் தெரியுமா?

na-pichamurthy

வீடுதோறும் பாரதி: யாரெல்லாம் காரணம் தெரியுமா?

இன்று தமிழர்களின் வீடுகளிலெல்லாம் ‘பாரதியார் கவிதைகள்’ புத்தகம் இருக்கிறது. பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து வெளிவந்த மலிவுப் பதிப்புகளும் பாரதியை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றன. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தபோதுதான் பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. பாரதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண.துரைக்கண்ணன். ‘அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள்’ என்று அந்தப் பொறுப்பை நாரண.துரைக்கண்ணனிடமே ஒப்படைத்தார் முதல்வர் ராமசாமி.

டி.கே.சண்முகம், திரிலோக சீதாராம், வல்லிக்கண்ணன் ஆகியோரை அழைத்துக்கொண்டு உடனே கடையத்துக்குக் கிளம்பினார் நாரண.துரைக்கண்ணன். கடையத்தில் வசித்துவந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாளைச் சந்தித்தார். எந்த நிபந்தனையும் இல்லாமல் பாரதியின் படைப்புகளை நாட்டு உடைமையாக்க உடனடியாக ஒப்புதல் அளித்தார் செல்லம்மாள்.
நாரண.துரைக்கண்ணன் கடையம் சென்றிருந்தபோது அவருக்குத் தந்தி ஒன்று அனுப்பப்பட்டது. அவரது இளம் வயது மகன் உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கும் தகவலைச் சொன்னது அந்தத் தந்தி. ‘முக்கியமான வேலைக்காக வந்திருக்கிறோம். அதை முடிக்காமல் திரும்பக் கூடாது’ என்ற முடிவெடுத்தார் நாரண.துரைக்கண்ணன். வேலை வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிய நாரண.துரைக்கண்ணனுக்கு அதிர்ச்சி செய்தியொன்று காத்துக்கொண்டிருந்தது. கடையத்திலிருந்து திரும்பிவருவதற்குள் அவரது மகன் இறந்து உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

குருவிக் கரம்பையைச் சந்தித்த ந.பிச்சமூர்த்தி

பாக்யராஜ் - அம்பிகா நடித்த ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தின் ‘கவிதை அரங்கேறும் நேரம்' பாடலை எழுதியவர் குருவிக்கரம்பை சண்முகம். பாரதிதாசனிடம் நான்காண்டு காலம் உடனிருந்து தமிழ் கற்றவர். திரைப்பாடல்கள், கவியரங்கம், வானொலிக் கவிதைகள் என்று எழுபதுகளில் பிரபலமாக இருந்த சகல வடிவங்களிலும் முத்திரை பதித்தவர். அவரது ‘பூத்த வெள்ளி’ கவிதைத் தொகுப்பில் தன்னைக் கவர்ந்த இலக்கிய ஆளுமை ஒருவரைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

எழுபதுகளில் சென்னை அமைந்தகரையில் குடியிருந்த சண்முகம், ஒருநாள் இரவில் கால தாமதமாக வீடு திரும்பியபோது அவரைச் சந்திக்க தாடிக்காரர் ஒருவர் வந்திருந்த தகவலைச் சொன்னார் வீட்டின் உரிமையாளர். புதுக்கவிதையின் பிதாமகன் என்று போற்றப்படும் ந.பிச்சமூர்த்திதான் அந்தத் தாடிக்காரர். அமைந்தகரையில்தான் ந.பிச்சமூர்த்தியும் அப்போது குடியிருந்தார். குருவிக்கரம்பை சண்முகம் தன்னிடம் அளித்த கவிதைத் தொகுப்புகளைப் படித்த ந.பிச்சமூர்த்தி அதைப் பற்றி பேசுவதற்காக அவரைத் தேடிச் சென்றிருந்தார். பிறகு, சண்முகத்தைச் சந்தித்தபோது தான் எழுதிய புத்தகங்களையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். எட்வர்டு கார்பெண்டர், பாஸ்டர்நாக், எஸ்ரா பவுண்ட் ஆகியோரையும் ஜப்பானிய ஹைக்கூகளையும் சண்முகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ந.பிச்சமூர்த்தியுடனான தொடர் உரையாடல்கள் குருவிக்கரம்பை சண்முகத்தை மடைமாற்றிப்போட்டன. நனவோடை பாணியிலும் சர்ரியலிச பாணியிலும்கூட கவிதைகளை எழுதத் தொடங்கினார் சண்முகம். ஒரு மரபுக் கவிஞருக்கும் நவீன கவிஞருக்கும் இடையே இப்படியொரு உரையாடல் இன்றைக்கு சாத்தியமா?

வீடுதோறும் பாரதிபாரதியார் கவிதைகள்ஓமந்தூர் ராமசாமி

You May Like

More From This Category

More From this Author