

‘எப்படியும் முறை, முறையேதான்’ என்கிறார்கள். ‘எல்லாம் அனுசரிக்கும் முறையைப் பொறுத்தே இருக்கிறது’ என்றே நான் கூறுவேன். முறை எப்படியோ அப்படியேதான் முடிவும். முறைக்கும் முடிவுக்கும் நடுவே பிரிக்கும் சுவர் எதுவும் இல்லை. உண்மையில் படைத்த ஆண்டவன், முறை விஷயத்தில் கட்டுப்படுத்தும் சக்தியை (அதுவும் மிகக் குறைந்த அளவில்) நமக்கு அளித்திருக்கிறார். ஆனால், முடிவு விஷயத்தில் நமக்கு எந்தச் சக்தியையும் அளிக்கவில்லை. அனுசரிக்கும் முறையின் அளவைப் பொறுத்தே இருக்கிறது லட்சியத்தை அடைவதும். எந்த விதிவிலக்கையும் ஏற்றுக்கொண்டுவிடாததே இந்த அளவு.
...
அகிம்சையும் சத்தியமும் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பவை. அப்பிணைப்பிலிருந்து அவற்றை நீக்குவதோ பிரிப்பதோ காரியத்தில் முடியாததாகும். ஒரு நாணயத்தின் அல்லது முத்திரையிடப்படாத வழுவழுப்பான ஒரு உலோகச் சில்லின் இரு பக்கங்களைப் போன்றே அவை இருக்கின்றன. இதில் இன்னது முன் பக்கம், இன்னது பின் பக்கம் என்று யார் கூறிவிட முடியும்? என்றாலும், அகிம்சையே முறை; சத்தியமே அடையும் முடிவு. முறை, அனுசரிக்கும் முறையாகவே இருக்க வேண்டுமாயின் எப்போதும் அது நமது சக்திக்கு எட்டியதாக இருக்க வேண்டும்; ஆகவே, அகிம்சை நமது தலையாய கடமையாகிறது. முறை விஷயத்தில் மாத்திரம் நாம் கவனமாக இருந்துவிடுவோமாயின், சீக்கிரத்திலோ கொஞ்சம் காலம் கடந்தோ லட்சியத்தை நாம் அடைந்தே தீருவோம்.
...
வெற்றிக்குப் பலாத்காரக் குறுக்குவழிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நோக்கங்கள் சிறந்தவை என்று நான் வியந்தாலும், என்னதான் நான் அனுதாபம் காட்டினாலும், மிகச் சிறந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளக்கூடப் பலாத்கார முறையை அனுசரிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ளாத எதிரி நான். ஆகையால், பலாத்காரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் நானும் ஒத்துப்போவது என்பதற்கு உண்மையில் இடமே இல்லை. ஆனால், அராஜகவாதிகளுடனும், பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எல்லோருடனும் நான் பழகக் கூடாது என்று என் அகிம்சைக் கொள்கை என்னைத் தடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்களுடன் பழகும்படி என்னைக் கட்டாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், அப்படிப் பழக்கம் வைத்துக்கொள்வது எப்போதுமே, அவர்கள் செய்வதில் எது தவறானது என்று எனக்குத் தோன்றுகிறதோ, அதிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான். ஏனெனில் அசத்தியத்தினால், பலாத்காரத்தினால் நிரந்தரமான நன்மை ஏற்பட்டதாக என்றுமே இருக்க முடியாது என்பதை அனுபவம் எனக்கு உணர்த்துகிறது.