

பிரதமர் நரேந்திர மோடி, “வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நில உரிமைகளை அனைத்து மாநில அரசுகளும் பழங்குடிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று மத்திய பழங்குடிகள் விவகாரத் துறைக்கு ஜூன் 23 அன்று உத்தரவிட்டார். மோடியின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.
ஆனால், வியப்பை அளிக்கிறது. காரணம், நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் முக்கியப் பிரிவான ‘நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னால், சமூகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்’ என்ற நிபந்தனையை நீக்கியதே மோடி அரசுதான்.
வனங்களிலும் வனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 25 கோடிப் பேர் வசிக்கின்றனர். அவர்களில் ஆதிவாசிகள் அல்லது பழங்குடிகள் எண்ணிக்கை சுமார் 10 கோடி. இவர்கள் மட்டுமே ஒரு நாட்டில் தனியாக வாழ்ந்தால் உலக அளவில் அது 13-வது பெரிய நாடாக இருக்கும். ஆனால், அவர்கள் ஒரே மொழி, கலாச்சாரம், இனம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுடைய வாழ்வுரிமையை அங்கீகரித்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளை அவர்களுக்கு உரிமையுடையதாக்கும் அரசின் இந்த முடிவைவிட, அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது ஏதுமில்லை. வரலாற்றுரீதியாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்கவல்லது இந்த முயற்சி.
ஆனால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ற உத்தரவுதான் இதன் பின்னணியை அரசு இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது. இது தொடர்பான நடைமுறைகளாலும் இதைப் பற்றிய உண்மைகளாலும்தான் 2006-லேயே வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரை அமல்படுத்த முடியாமல் இருக்கிறது.
முதலாவதாக, வன உரிமைச் சட்டப்படி (எஃப்.ஆர்.ஏ.) சமூகத்தின் நில உடைமைக் கோரிக்கைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இது தீவிரமான உழைப்பு தேவைப்படும் நடவடிக்கை. சமூகங்கள் வாழுமிடத்தின் வரைபடமும் தனி நபர்களின் கோரிக்கைகளும் உரிய வகையில் கிராம சபைகளால் தயாரிக்கப்பட வேண்டும்.
உரிய அதிகாரிகளிடம் அளிக்கப்படுவதற்கு முன்னால், இதைச் சரிபார்க்க வேண்டும். இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை கிராம சபைதான் ஆதார அமைப்பாகக் கருதப்படுகிறது. கிராமசபையின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரிப்பதாக இருந்தால், ஏன் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு விரிவான விளக்கம் தந்தே ஆக வேண்டும். எனவேதான் இரண்டு மாதங்களுக்குள் இதை முடிக்க வேண்டும் என்ற உத்தரவு வியப்பைத் தருகிறது.
இரண்டாவதாக, வன உரிமைச் சட்டத்தை முழுமை யாக நிறைவேற்றுவதற்குத் தடையாக இருப்பது, வனங்களின் மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வன அதிகாரவர்க்கம் தயங்குவதுதான். வன உரிமைச் சட்டம் என்பது, வனங்களில் குடியிருப்பவர்களின் குடியுரிமையை நிரந்தரப்படுத்துவதற்காகத்தான் என்று வனத்துறை அதிகாரிகள் தவறாக விளக்கம் அளித்துவருகின்றனர்.
தனி நபர்கள் நில உரிமை கோரும் மனுக்களை ஏற்று, சமுதாயமாக அளிக்கும் கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம் வனத்துறை தன் எண்ணத்தை வெளிப்படுத்திவருகிறது. பழங்குடி மக்கள் தங்களுடைய ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக விண்ணப்பித்துக் கோருவது ‘சமூக வன ஆதார உரிமை’ (சி.எஃப்.ஆர்.) என்று அழைக்கப்படுகிறது.
வன உரிமைச் சட்டப்படி இதுநாள் வரையில் அங்கீகரிக்கப் பட்டுள்ள உரிமைக்குரிய நிலங்களின் அளவு 31.3 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே. இவற்றில் பெரும்பாலானவை தனிநபர் விண்ணப்பங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை.
கூட்டு உரிமை
வனங்களை அண்டி வாழ்ந்துவந்த பழங்குடி மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியைச் சரிசெய்யத்தான் வன உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் நோக்கத்தையும் உள்ளுணர்வையும் சிதைக்கும் வகையில் அதை அமல் செய்கின்றனர். வனங்களில் வாழ்ந்த பழங்குடிகள் மீண்டும் வனங்களுக்குத் திரும்ப முடியாமல் இது தடுக்கிறது. பழங்குடிகளும் வனச் சமூகங்களும் மொத்தமாகத் தங்களுடைய ஆளுகையில் வைத்திருந்த நிலம் எவ்வளவு என்ற மதிப்பீட்டில் அரசின் வெவ்வேறு துறைகள் தரும் புள்ளிவிவரங்களிலேயே முரண்பாடு இருக்கிறது.
1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இந்திய ஃபாரஸ்ட் சர்வே என்ற அமைப்பு, ‘வனங்களின் நிலைமை-1999’ என்ற தலைப்பில் அறிக்கை அளித்திருக்கிறது. வருவாய் (துறை) கிராம எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 321.98 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இருப்பதாக அது தெரிவிக்கிறது. வருவாய் கிராம எல்லைக்குள் வன நிலங்களைச் சேர்ப்பது, அந்த நிலங்களைச் சமூகம் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதையும், வன நிலங்கள் மீது கிராமமும் சமூகமும் சார்ந்திருப்பதையும் உணர்த்துகிறது.
வன உரிமைச் சட்டப்படி, வருவாய் கிராம எல்லைக் குட்பட்ட அனைத்து வன நிலங்களும் சமுதாய வன வளங்களாகவே அங்கீகரிக்கப்பட்டு, கிராம நிர்வாக சபையின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஜம்மு-காஷ்மீரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகியவற்றின் வன வளங்களும், வருவாய் கிராமங்களுக்கு வெளியே இருக்கும் வன நிலங்களும் இந்தக் கணக்கெடுப்பில் விடுபட்டுப்போயுள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சமுதாய வன வளங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கான நிலங்கள் அதிகம் என்பது புலனாகிறது. 2015 பிப்ரவரி வரை சமுதாய வன ஆதாரங்களாக வெறும் 73,000 ஹெக்டேர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது மொத்த வன நிலப் பகுதியில் ஐந்நூறில் ஒரு பகுதி மட்டும்தான். அதனால், இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் காண முடியாமல் போகாது.
அரசு முயற்சி எடுக்க வேண்டும்
வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் வனத்துறை அதிகார வர்க்கத்துக்குள்ள தயக்கத்தை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மாநில நிர்வாகங்களுக்கும் வனச் சமுதாயத்தினருக்கும்கூட இந்தச் சட்டத்தின் தன்மைகுறித்தும் பலன்கள்குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. எல்லா மாநிலங்களிலுமே வன உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வனத்துறை தானாகவே எடுத்துக்கொண்டுள்ளது அல்லது அத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை அமல் செய்வதை வனத்துறை அதிகார வர்க்கம் தடுக்கப் பார்க்கிறது அல்லது திசைதிருப்புகிறது.
மத்திய அரசுக்கு உண்மையிலேயே இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இதை அமல்செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை வனத்துறை கைவிட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூற வேண்டும். பழங்குடியினர் துறை, மாவட்ட நிர்வாகம், பழங்குடிகளுக்கான மக்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு காரணமாகத்தான் ஓரளவுக்காவது இந்தச் சட்டம் இப்போது அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
பழங்குடிகள் நலத் துறையை அரசு வலுப்படுத்த வேண்டும். மாநில அரசுகளுக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அரசுடன் சேர்ந்து செயல்பட விரும்பும் மக்கள் நல அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசிடம் உறுதியான தன் முனைப்பு இல்லையென்றால், பழங்குடிகளின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரவே முடியாது. பிரதமர் மோடி இப்போது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். அடுத்த அடிகள் யதார்த்த நிலைமைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
(வன நிலங்கள், வனக் கொள்கைகள் தொடர்பான உலகளாவிய தன்னார்வ அமைப்பின் தலைமை இயக்குநர் அரவிந்த் கரே)
©‘தி இந்து’ (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: சாரி