காந்தி பேசுகிறார்: அழகும் பயனும் 

காந்தி பேசுகிறார்: அழகும் பயனும் 
Updated on
1 min read

உண்மையான ஒழுக்கம் என்பது பழைய பாதையிலேயே போய்க்கொண்டிருப்பது என்பதில் இல்லை. ஆனால், நமக்கு வேண்டிய உண்மையான வழியைக் கண்டுகொண்டு, அஞ்சாமல் அதைப் பின்பற்றுவதில்தான் உண்மையான ஒழுக்கம் இருக்கிறது.
...
மனமாரச் செய்வதாக இல்லாத எச்செயலும் ஒழுக்க மானது என்று சொல்வதற்கில்லை. நாம் இயந்திரம் போல் நடந்துகொண்டிருக்கும் வரையில், ஒழுக்கம் என்பதற்கே இடமில்லை. ஒரு செயல் ஒழுக்கமானது என்று சொல்ல நாம் விரும்பினால், அது மனதாரச் செய்வதாக இருப்பதோடு கடமையாகக் கொண்டு செய்ததாகவும் இருக்க வேண்டும். பயந்துகொண்டோ, எந்த வகையான நிர்ப்பந்தத்தினாலோ செய்யப்படுவது ஒழுக்கமற்றதாகிவிடுகிறது.
...
தன்னுடைய உரிமையை எந்த வகையில் உபயோகிப்பது என்பதில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அந்த முறையில், மனிதன் தன்னுடைய விதியைத் தானே உண்டாக்கிக்கொள்ளுகிறான். ஆனால், அவற்றின் பலன்களைக் கட்டுப்படுத்திவிடக் கூடியவன் அவனல்ல.
...
நல்லவனாக இருப்பது என்பதுடன் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும். நல்லவனாக இருப்பது என்பதனால் மாத்திரம் அவ்வளவு பயனில்லை. ஆன்மிகத் தீரத்துடனும் ஒழுக்கத்தோடும் கூடிய, நன்மை - தீமைகளைப் பகுத்தறியும் சிறந்த தன்மை ஒருவரிடம் இருக்க வேண்டும். முக்கிய சந்தர்ப்பங்களில் எப்போது பேசுவது, எப்போது மௌனமாக இருந்துவிடுவது, எப்போது ஒரு காரியத்தைச் செய்வது, எப்போது சும்மா இருந்துவிடுவது என்பதை ஒருவர் அறிய வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றைச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் முரண்பட்டவைகளாக இருப்பதற்குப் பதிலாக ஒரே மாதிரியானதாகின்றன.
...
அழகாக இருப்பது பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பயனுள்ளதாக இருப்பது அழகாகவும் இருக்க முடியாது என்று நம்பும்படி நாம் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். பயனுள்ளதாக இருப்பது அழகானதாகவும் இருக்க முடியும் என்பதைக் காட்ட நான் விரும்புகிறேன்.
...
என் நண்பர்கள் எனக்கு அளிக்கக்கூடிய உயர்ந்த கெளரவம் ஒன்று இருக்கிறது; நான் எந்த வேலைத் திட்டத்தை வற்புறுத்துகிறேனோ அதை அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அமலாக்க வேண்டும். அவ்வேலைத் திட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்கள் முழு சக்தியுடனும் என்னை எதிர்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in