

மத்திய பிரதேசத்தில் நிர்மல் அவஸ்தி, வீரேந்திர பாண்டே என்ற மாநில அரசு ஊழியர்களை மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இணையவழி ஏலத்தில் குஜராத் நிறுவனத்துக்கு ரூ.116 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்க, கமிஷன் வாங்கியது தொடர்பாக இருவரும் கைதாகியுள்ளனர். அடுத்த இலக்கு முன்னாள் அமைச்சரும் இப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி பாஜக உறுப்பினருமான நரோத்தம் மிஸ்ரா என்று தெரிகிறது.
2008-ல் மிஸ்ராவுக்கும் முகேஷ் சர்மா என்ற தொழிலதிபருக்கும் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து வருமானவரித் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அது இப்போது தூசு தட்டி எடுக்கப்படுகிறது. அது மட்டுமல்ல சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருந்தபோது நடந்த 'வியாபம்' ஊழல், இந்தூரில் நடந்த ஓய்வூதிய ஊழல் ஆகியவற்றையும் மாநில அரசு மறு விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களை பாஜக வேட்டையாடும் நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் நடத்தும் பதில் வேட்டை இது!
பிஹாரில் தொடரும் போலி ஆசிரியர்கள் வேட்டை
பிஹாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிலிருந்து 22 பேரை அம்மாநிலக் கல்வித் துறை நீக்கியுள்ளது. போலி கல்விச் சான்றிதழ்கள் தந்து ஆசிரியரானார்கள் என்பதே காரணம். பிஹாரில் தேர்வு எழுதுவதில் தொடங்கி பட்டச் சான்றிதழ்கள் பெறுவது வரை கல்வித் துறையில் தில்லுமுல்லுகளும் ஊழல்களும் காலங்காலமாக அதிகம். பணியில் ஒருவர் சேர்க்கப்படும்போதே ‘சான்றிதழ் சரிபார்ப்பு’ முக்கியமான ஒரு நடைமுறை ஆயிற்றே; எப்படி அதைக் கவனிக்காமல் விட்டார்கள்; அங்கேயும் ஊழல் நடந்ததா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
அரசு வேலை என்பதற்காக டிராக்மேன் ஆன எம்.டெக். பட்டதாரி!
மும்பை ஐஐடியில் பி.டெக்., எம்.டெக். இரு பட்டங்களையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த சிரவண்குமார், ரயில்வேயில் டிராக்மேனாக – ‘டி’ பிரிவு தொழிலாளியாக வேலைபார்க்கும் செய்தி கல்வித் துறை வட்டாரங்களில் விவாதம் ஆகிவருகிறது. “அவருடைய முழு கல்வித் தகுதிக்கு இந்தப் பணியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை” என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். சிரவண்குமாருடன் படித்தவர்கள் பன்னாட்டுப் பெருநிறுவனங்களில், பெரும் சம்பளத்தில் பணியாற்றுகையில் இப்பணியை அவர் தேர்ந்தெடுத்த ஒரே காரணம், அரசு வேலைவாய்ப்பு என்பது மட்டும்தான் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், ‘படிப்பு என்பது ஏதோ ஒரு பிழைப்புக்காக’ என்பதாக மட்டும்தானே நம்முடைய கல்விமுறையானது வேர் முதல் நுனி வரை கற்பிக்கிறது. இந்தக் களையை எப்படிக் களைவது என்று விவாதங்கள் தொடர்கின்றன.