Published : 29 Aug 2019 08:22 am

Updated : 29 Aug 2019 08:22 am

 

Published : 29 Aug 2019 08:22 AM
Last Updated : 29 Aug 2019 08:22 AM

சங்கர் குஹா நியோகி: நினைவில் நிற்கும் மார்க்சியர், அம்பேத்கரியர், காந்தியர்

shankar-guha-niyogi

ராமசந்திர குஹா

சமீபத்தில் மறைந்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் இந்திய அரசியலின் முக்கியமான ஒரு கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். தன்பாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை சுயேச்சையாகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர். எந்தக் கட்சியின் அங்கீகாரமும் இல்லாமல், சுரங்கத் தொழிலாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் தந்த சிறு சிறு நன்கொடைகளைக் கொண்டும் வாக்குகளைக் கொண்டும் வென்றவர். ராய் திருமணம் செய்துகொள்ளவில்லை. தன்பாதில் சக ஏழை மக்களைப் போலவே மின்னிணைப்புகூட இல்லாத குடிசையில் வாழ்ந்தார். சலுகைசார் முதலாளித்துவத்தின் (க்ரோனி கேப்பிட்டலிஸம்) பிரதிநிதிகளாய் இன்று கார், பங்களா வசதிகளோடு வாழும் இந்நாளையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அனுபவிக்கும் வாழ்க்கை முறைக்கும் பண்பு நலன்களுக்கும் முற்றிலும் மாறானவர் ஏ.கே. ராய்.

ராயின் மரணச் செய்தியைப் படித்தவுடன் ஒருமுறை அவரை நேரில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. கட்டுப்படுத்தப்படாத கனிம அகழ்வால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த மாநாடு 1981-ல் நடந்தது. மாணவனாக இருந்த நான் தன்னார்வலராக அங்கு சேவை செய்தேன். ஏ.கே.ராயை மாநாட்டுக்கு அழைக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. டெல்லியில் வித்தல்பாய் படேல் இல்லத்திலிருந்த அவருடைய அடுக்ககத்துக்கு சென்றேன். அவருடைய இல்லக் கதவைத் தட்டினேன். உள்ளேயிருந்து அரவம் ஏதும் கேட்காததால் மீண்டும் பலமாகவும் பலமுறையும் தட்டினேன். பைஜாமா-குர்தா அணிந்த உயரமான ஒருவர் கண்களைக் கசக்கிக்கொண்டே வந்து கதவைத் திறந்தார். அவர் ராய் அல்ல, அவருடைய உதவியாளர் சங்கர் குஹா நியோகி. சத்தீஸ்கர் பகுதியில் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்ட தொழிற்சங்கத் தலைவர். ‘‘ராய் இல்லை, வந்தவுடன் நீங்கள் விடுத்த அழைப்பு குறித்துத் தெரிவிக்கிறேன்’’ என்று சிறிதும் கோபப்படாமல் மிகவும் பணிவுடன் கூறினார். அவருடைய பணிவும் பெருந்தன்மையும் என்னைப் பலமடங்கு வெட்கப்பட வைத்தது. தொழிலாளர்களுக்காக இரவும் பகலும் பாடுபடும் தீவிரத் தொண்டரான அவருக்கு அந்தப் பகல் நேர சிறு தூக்கம் மிகவும் அவசியமானது. அதை நான் கெடுத்துவிட்டேன் என்று உறைத்தது. இப்போது நினைத்தாலும் என்னுடைய குற்றம் என்னை உறுத்துகிறது.

ராயின் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் மட்டுமல்ல, மனோரஞ்சன் வியாபாரி என்ற வங்க எழுத்தாளர் நியோகி குறித்து எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கடந்த வாரம் படித்தபோதும் அவருடைய நினைவு வந்தது. ‘சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா’ (சிஎம்எம்) என்ற பழங்குடி மக்களின் அமைப்பு நடத்திய கூட்டத்தின்போது நியோகியை முதல் முறையாகச் சந்தித்தார் மனோரஞ்சன். சிவந்த நிறம், உயரமான வடிவம், பளிச்சென்ற பெரிய கண்கள், கதர் பைஜாமா-குர்த்தா அணிந்து மற்றவர்களுடன் புல்தரையில் அமர்ந்திருந்தார் நியோகி. அவருடைய உருவம் அவரது தனித்தன்மையை எடுத்துக் காட்டியது. தெளிவான முகத்தில் அரும்பிய புன்னகை காந்தம்போல கவர்ந்தது. அவருடைய தோளும் தலையும் மற்றவர்களைவிட உயரமாகத் தெரிந்தது. பணத்தால் வளைய வைக்க முடியாத தலை, அநீதிகளுக்கு வணங்காத தலை அவருடையது. மனோரஞ்சன் பிறகு நியோகியின் வீட்டுக்கும் சென்றார். ஒரே அறை, இரண்டு பக்கமும் தாழ்வாரம், மேலே சுட்ட களிமண்ணால் வேயப்பட்ட ஓடு இதுதான் அவருடைய வீடு. ஆலைகளில் வேலை செய்யும் பிற தொழிலாளர்களின் வீடுகளைவிட நியோகியின் வீட்டில் எந்தக் கூடுதல் வசதியும் இல்லை. அவருடைய மனைவி ஆஷாவும் அப்பகுதி கிராமத்தில் பிறந்தவர்தான். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என்ற எளிய குடும்பம். மாதம் 750 ரூபாய் சம்பளம்.

காந்தியரான மார்க்சியர்

சங்கர் குஹா நியோகி தொடக்கத்தில் மார்க்சியராக இருந்தவர். பிறகு காந்தியின் சிந்தனைகளுக்கு நெருக்கமானார். “ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆக்கபூர்வமான ‘முழுப் புரட்சி’ இயக்கத்தைக் கொண்டுவந்தார், மக்களுடைய ஆதரவு இல்லாமல் அது தோல்வியுற்றது; நக்ஸல்பாரிகள் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டுவது என்ற அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்தனர், அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. எனவே, இவ்விரு கொள்கைகளையும் மாற்றி புதிய கொள்கையை உருவாக்கத் தீர்மானித்தேன். ‘அழிப்பதற்காக ஆக்கு - ஆக்குவதற்காக அழி’ என்பதுதான் அந்தக் கொள்கை. இந்த நோக்கத்தில்தான் எங்களுடைய தொழிற்சங்க இயக்கத்தின் மூலம் ஏழைக் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள், ஏழைகள் இலவச சிகிச்சை பெற மருத்துவமனைகள், தொழில்பயிற்சி பெற பணிமனைகள், பொருட்களை வாங்க கூட்டுறவு சங்கங்கள், மனமகிழ்ச்சிக்கு கலாச்சார சங்கங்கள் ஆகியவற்றைத் தொடங்கியிருக்கிறோம்’’ என்று மனோரஞ்சன் வியாபாரியிடம் கூறியிருக்கிறார் சங்கர் குஹா நியோகி.

எல்லா தத்துவங்களிலும்...

தாங்கள் உருவாக்கவிருக்கும் புதிய சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நியோகியும் ராயும் மக்களுக்கு இவற்றின் மூலம் அடையாளம் காட்டினார்கள். ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்புகளான பொதுக்கூட்டங்கள், கோரிக்கை முழக்கக் கூட்டங்கள், அரசின் முடிவுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், அரசுக்கு மனுக்கள், அரசுப் பிரதிநிதிகளைச் சந்திக்க தூதுக் குழுக்கள் என்று எல்லாவற்றையும் முழுக்கப் பயன்படுத்துவதுதான் எங்களுடைய வழிமுறை என்றும் விவரித்திருக்கிறார் நியோகி.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டின் தொழிற்சங்கங்களும் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் மட்டும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அணுகுகின்றன; ஆலைச் சுவர்களுக்கு அப்பாலும் தொடரும் தொழிலாளியின் வாழ்க்கை குறித்து ஆக்கபூர்வமான சிந்தனை அந்த அமைப்புகளிடம் இல்லை. அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். தொழிலாளர்களாக இருக்கும் ஆண்களும் பெண்களும் நல்ல சுகாதாரமான சூழலில் வளர வேண்டும், அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை முற்போக்கானதாக மலர வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை அழகானதாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தவே எங்களுடைய தொழிற்சங்கப் பணிகளில் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் தருகிறோம்’’ என்று மனோரஞ்சனிடம் விவரித்திருக்கிறார் நியோகி.

“தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்டோம், அதில் வெற்றி பெற்றோம். ஆனால், அப்படிக் கிடைத்த ஊதியத்தைத் தொழிலாளர்கள் சாராயக் கடையில் செலவு செய்தபோது மதுவுக்கு எதிரான இயக்கத்தையும் பிரச்சாரத்தையும் தொழிலாளர்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது எங்கள் கடமையானது. இதெல்லாம் தொழிற்சங்கத்தின் கடமை என்று யாரும் நினைக்கவுமில்லை, நாங்கள் செய்வோம் என்று எதிர்பார்க்கவுமில்லை. எனவே, எங்கள் நோக்கத்தில் ஊக்கம் பெற காந்தியத்தை வாசித்தோம். ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிகள், கிராமவாசிகள், ஏழைகள். எனவே, அவர்களுடைய நல்வாழ்வுக்காக எல்லா அறிஞர்களின் கொள்கைகளிலிருந்தும் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்தோம். மார்க்சியம், காந்தியம், லோகியாயிசம், அம்பேத்கரியம் என்று எல்லாவற்றையும் படித்தோம். எங்களுடைய தேவைகளுக்கேற்ப அவற்றை ஆராய்ந்தோம், அவற்றிலிருந்து சில சிந்தனைகளைக் கடன் வாங்கினோம், எங்களுடைய வசதிக்கேற்ப சிலவற்றை மாற்றிக்கொண்டோம்’’ என்று மனோரஞ்சனுக்கு விளக்கியிருக்கிறார் நியோகி.

நியோகியின் சிறைவாசம்

சங்கர் குஹா நியோகிக்கு உரிய நினைவாஞ்சலிக் கட்டுரையை எழுத்தாளர் ரஜனி பக்ஷி சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறார். அவருக்கு எதிராக அரசுகள் நிகழ்த்திய அடக்குமுறையை அதில் விவரித்திருக்கிறார். நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது ஓராண்டு காலம் விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து பல பொய் வழக்குகளை அவர் மீது போட்டபடியே இருந்தன. இந்த இடைவிடாத சித்ரவதைகளின் உச்சத்தில் 1991 செப்டம்பர் 28-ல் தொழிலதிபர்களால் ஏவப்பட்ட குண்டர்கள் அவரைப் படுகொலை செய்தனர். காவல் துறையும் அரசியல் தலைவர்களும் தங்களுடைய முகங்களை வேறுபக்கம் திருப்பிக்கொண்டனர். கொல்லப்பட்டபோது அவருடைய வயது வெறும் 48.

காந்தியைப் போலவே நியோகியும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தக் கூடாது என்பதில் அக்கறை மிக்கவர் என்கிறார் ரஜனி பக்ஷி. கனிமச் சுரங்கங்களிலிருந்தும் நிலக்கரி, இரும்பு ஆலைகளிலிருந்தும் ஆறுகளைப் போல கழிவுநீர் வெளியேறியது கண்டு நியோகி மனம் கொதித்தார். இயற்கையைப் பாழாக்கும் இது சாதாரண விஷயமல்ல, பெரிய பிரச்சினை என்று அவர் இனம் கண்டுகொண்டார். சுற்றுச்சூழல் மாசுபடாமல் தொடர் வளர்ச்சி காண்பது அவசியம் என்று இந்தி மொழியில் அவர் கட்டுரை எழுதினார். அதில், வன நிர்வாகத்தில் ஜனநாயகம் அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார். ஆறுகளையும் சுற்றுப்புறங்களையும் அசுத்தப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தார். சுற்றுச்சூழல் ஏன் கெடுகிறது என்று அரசுகளால் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்றார். தொழிற்சாலை உற்பத்திக்குத் தரும் அதே முக்கியத்துவத்தைச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் தந்து கவனிக்க வேண்டும் என்று அப்போதே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

அதுவன்றி சில பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை எப்படித் தீர்ப்பது என்ற வழிகளையும் கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார். “காடுகள் நம்முடையவை, நமக்கானவை என்று மக்கள் என்றைக்கு உணர முடிகிறதோ அன்றிலிருந்தே சின்னக் குழந்தைகள் கூட வன வளங்களை அக்கறையுடன் கண்காணிக்கத் தொடங்கிவிடும்’’ என்று வனங்கள் குறித்து எழுதியிருக்கிறார். காடு நம்முடையது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டால் வனத் திருடர்களால் வனவளங்களைக் கொள்ளையடிக்க முடியாது, பொறுப்பற்ற அதிகாரிகளால் பதவியில் நீடிக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

‘‘நியோகியை ஒரேயொரு இஸத்துக்கு மட்டும் பொருந்துகிறவர் என்று குறுக்கிவிட முடியாது; அப்படி முத்திரை குத்துவது இயலாதது என்பதல்ல – கடினமான முயற்சியாகிவிடும். எல்லா இசங்களுக்கும் அப்பாற்பட்டவர் அவர். மிகப் பெரிய மனிதாபிமானி. அரண்மனையை விட்டு வெளியேறி வந்து சாமானிய மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்ட கவுதம புத்தரைப் போன்றவர்’’ என்று நியோகியைப் புகழ்ந்திருக்கிறார் மனோரஞ்சன் வியாபாரி.

ஏன் கொன்றார்கள்?

நியோகியை ஏன் கொன்றார்கள் என்பதை ரவி டெய்லர் என்ற இளம் ஆதிவாசி மனோரஞ்சனிடம் விளக்கியிருக்கிறார். “அவர் உயிரோடிருந்த வரையில் பழங்குடி மக்களை அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தார். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காகவே அவரை ‘சத்தீஸ்கர் காந்தி’ என்றுகூட அழைத்தனர். இந்த ஒரே காரணத்துக்காகவே அவரைச் சுட்டுக்கொன்றனர். அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை, இருந்தாலும் அவரைக் கொன்றனர். அவரைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதன் பிறகு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் காவல் துறையினரும் தொழிலதிபர்களின் கூலிப்படையினரும் துப்பாக்கிகளால் ஒடுக்கினார்கள். ஏழை மக்களின் கோரிக்கைகள் நிறைவேற யாருடைய ஆதரவாவது தேவை; நியோகியைக் கொன்றதன் மூலம் அவர்களுக்கு உதவிய ஆதரவுக் கரத்தை அழித்துவிட்டனர், இப்போது பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது’’ என்கிறார் ரவி டெய்லர்.

அந்த இடைவெளியை இட்டு நிரப்பத்தான் நக்ஸல்கள் வந்தனர். பிற கருத்துகளை ஏற்காத அவர்களுடைய இறுக்கமான மனங்களாலும் வன்முறைப் பாதையாலும் காவல் துறை, துணைநிலை பாதுகாப்புப் படையினரிடமிருந்து எதிர் அடக்குமுறைகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கர் ஆதிவாசிகள் செய்வதறியாமல் ஒடுங்கிவிட்டனர். ஏ.கே.ராய், சங்கர் குஹா நியோகி இருவருமே நேர்மையிலும் துணிச்சலிலும் ஒரே மாதிரியான தலைவர்கள். சங்கர் குஹா நியோகி அசலான சிந்தனையாளர்.
இனி இன்னொரு ஏ.கே. ராய் நமக்கு வாய்க்க மாட்டார். காரணம், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனைக்கு வந்துவிட்டதால் விவசாயிகள், தொழிலாளர்களின் பிரதிநிதியாக சுயமாகச் செயல்படும், கட்சி சாராத நாடாளுமன்ற உறுப்பினர் இனி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பே இல்லை. அடுத்து சில ஆண்டுகளுக்கு சங்கர் குஹா நியோகியைப் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கூட உருவாகும் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அரசு இப்போது முன்பைவிட அடக்குமுறையைத் தீவிரமாகக் கையாள்வதாகவும் வன்முறையற்ற எதிர்ப்பைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாததாகவும் மாறிவிட்டது. காரிருள் படிந்த இச்சூழலில் ராயையும் நியோகியையும் தெரிந்த இந்தியர்கள் அவர்களுடைய நினைவுகளைப் போற்றி நெஞ்சத்தில் வைப்பது கட்டாயக் கடமையாகிறது.

தமிழில்: சாரி

சங்கர் குஹா நியோகிமார்க்சியர்அம்பேத்கரியர்காந்தியர்Shankar guha niyogiஏ.கே. ராய்க்ரோனி கேப்பிட்டலிஸம்

You May Like

More From This Category

More From this Author