360: அமெரிக்காவைக் காய்ச்சியெடுக்கும் கிரீன்லாந்து

360: அமெரிக்காவைக் காய்ச்சியெடுக்கும் கிரீன்லாந்து
Updated on
1 min read

ட்ரம்ப் யாரையும் விட்டுவைப்பதில்லை. இந்த முறை அவரிடம் அகப்பட்டுக்கொண்டது டென்மார்க்கும் கிரீன்லாந்தும். டென்மார்க்குக்கு அவர் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவதற்கு ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த விருப்பத்தை கிரீன்லாந்தின் பிரதமர் கிம் கீல்ஸனும் டென்மார்க் பிரதமர் மெட பிரெட்ரிக்ஸனும் நிராகரித்தனர். பிரெட்ரிக்ஸன் ஒருபடி மேலே போய் ட்ரம்ப்பின் விருப்பம் முட்டாள்தனமானது என்று விமர்சிக்க... அதுவே ட்ரம்ப் இந்தப் பயணத்தை ரத்துசெய்யக் காரணமானது. ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அமெரிக்க அதிபரின் வேண்டுகோளை எப்படி முட்டாள்தனமானது என்று சொல்லலாம் என்று கேட்டது ட்ரம்ப் தரப்பு. ட்ரம்பின் பயணம் ரத்தானதில் அதிர்ச்சியடைந்த டென்மார்க் பிரதமர் பிரெட்ரிக்ஸன் அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் தீவிரம் காட்டுகிறார். இந்தப் பயணம் ரத்தானதால் இரு தரப்புக்கும் இடையே வெளியுறவுரீதியிலும் பொருளாதாரரீதியிலும் நிலவும் நட்பு ஒருபோதும் பாதிக்கப்படாது என்றிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும், டென்மார்க் சிறந்த நட்பு நாடாகத் திகழ்ந்துவருவதாகவும் அதன் நட்பை அமெரிக்கா பெரிதாக மதிப்பதாகவும் இந்த மோதல்களுக்குப் பிறகு சமாதானப்படுத்தும் வகையில் தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாரங்களைக் கடந்தும் அமெரிக்காவைக் காய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆந்திர கிராமங்களில் அரசு செயலகங்கள்

தேர்தலின்போது அளித்த 5 வாக்குறுதிகளைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. மாதம் ரூ.5,000 சம்பளத்தில் 2.66 லட்சம் கிராம தன்னார்வத் தொண்டர்களை நியமித்திருப்பது இதில் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தொண்டரும் 50 குடும்பங்களுக்குப் பொறுப்பு. அரசின் நலத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதற்கு இவர்கள் உத்தரவாதமானவர்கள். ஒருவேளை இவர்களே பணியில் சுணங்கினால் என்ன வழி? தொண்டர்கள் மீது புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1902 உருவாக்கப்பட்டுள்ளது. கூடவே, ஒவ்வொரு கிராமத்திலும் அரசுச் செயலகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் முக்கியமானதே. ஒவ்வொரு அரசுச் செயலகத்துக்கும் மாதம் ரூ.15,000 ஊதியத்தில் கிராமச் செயலர் நியமிக்கப்படுவார். அக்டோபர் 2 முதல் செயலகங்கள் செயல்பாட்டுக்கு வரும். இவை 1,41,576 பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும். மக்களுடைய கோரிக்கைகள் 72 மணி நேரத்துக்குள் நிறைவேற்றப்படுவதை இந்தச் செயலகங்கள் உறுதி செய்யும். ஒவ்வொரு செயலகத்துக்கும் 10 ஊழியர்கள் கிராமங்களில் இருந்தே தேர்வுசெய்யப்படுவார்கள். இது கிராம மக்களிடம் நிர்வாகத்தைக் கொண்டுசெல்வதுடன் அதிகாரப் பரவலுக்கும் வழிவகுக்கும். ஆந்திரர்கள் ஜெகனைக் கொண்டாடுகிறார்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in