காந்தி பேசுகிறார்: பெரிய லட்சியம்

காந்தி பேசுகிறார்: பெரிய லட்சியம்
Updated on
1 min read

நான் அடிக்கடி கைவிடப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. பலர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்; அநேகரிடம் குறைபாடுகள் இருந்ததையும் கண்டிருக்கிறேன். ஆனால், அவர்களுடன் பழகியதற்காக நான் வருத்தப்படவில்லை; ஏனெனில், எப்படி ஒத்துழைப்பது என்பது எனக்குத் தெரிவதைப் போன்றே எப்படி ஒத்துழையாமை செய்வது என்பதும் எனக்குத் தெரியும். ஒருவர் சொல்வதை நம்பாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் நம்மிடம் இருந்தாலன்றி, அவர் சொல்லுவதை நம்புவதுதான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு மிகவும் அனுபவ சாத்தியமான, கண்ணியமான வழியாகும்.

பெரிய லட்சியத்தைப் பொறுத்த விஷயங்களில் அதற்காகப் போராடுகிறவர்களின் எண்ணிக்கை முக்கியமன்று. ஆனால், அவர்கள் எத்தகைய தன்மை வாய்ந்தவர்கள் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமானதாகிறது. உலகத்தின் மிகப் பெரியவர்களெல்லாம் எப்போதும் தன்னந்தனியாகவே நின்றிருக்கின்றனர். பெரும் மகான்களாகிய ஜோராஷ்டிரர், புத்தர், ஏசுநாதர், முகம்மது ஆகியோரைப் பாருங்கள். நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னும் அநேகரைப் போன்று இவர்களும் தன்னந்தனியாகவே நின்று போராடியிருக்கிறார்கள். ஆனால், தங்களிடத்திலும் தங்கள் கடவுள்களிடமும் அவர்களுக்கு ஜீவநம்பிக்கை இருந்தது. கடவுள் தம் பக்கத்தில் இருக்கிறார் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆகையால், அவர்கள் என்றும் துணையின்றி நின்று போராடவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியிருக்கும் காரியம் எவ்வளவுதான் சாதாரணமான சின்னதாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்த வரையில் அதை நன்றாகச் செய்யுங்கள். முக்கியமானது என்று நீங்கள் கருதும் ஒரு காரியத்தில் எவ்வளவு அதிக கவனம் செலுத்துவீர்களோ அவ்வளவு கவனத்தையும் அதில் செலுத்துங்கள். ஏனெனில், அப்படிப்பட்ட சிறு காரியங்களைக் கொண்டுதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

பழமையானது எல்லாம் நல்லதுதான் என்ற மூட நம்பிக்கையை நான் ஒப்புக்கொள்ள வில்லை. இந்தியாவினுடையது என்பதனால் எதுவும் நல்லதுதான் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in