செய்திப்பிரிவு

Published : 26 Aug 2019 07:43 am

Updated : : 26 Aug 2019 09:46 am

 

பால் விலை உயர்வின் அவசியம் என்ன?

need-of-milk-price-hike

அ.நாராயணமூர்த்தி

தமிழக அரசு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.4 முதல் ரூ.6 வரையிலும், விற்பனை விலையை ரூ.6 வரை உயா்த்தி ஆகஸ்ட் 19 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஆணை, தற்போது பலராலும் விவாதிக்கப்பட்டுவருகிறது. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதாலும், பால் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டும், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. மொத்த பால் விற்பனையில் அங்கம் வகிக்கும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியபோதெல்லாம் அதைப் பற்றிப் பேசாமல் கடந்துபோனவா்கள், இப்போது மட்டும் குரல்கொடுப்பது விசித்திரமாக உள்ளது. தமிழக ஏழை விவசாயிகளுக்கு வருமான உயர்வு ஏற்படுவதை இவர்கள் விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

முதலில், பால் விலை உயர்வை எதிர்ப்பவர்கள், இந்த விலை உயர்வு இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நமது நாட்டின் மிகப் பெரிய பால் கூட்டுறவு சங்கங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி போன்றவை, பால் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, இந்த 2019 ஆண்டு மே மாதம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியதன் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை 2019-ல் உயர்த்தியுள்ளன. அப்போது ஏன் யாரும் எதிர்க்கவில்லை? மொத்தமாக நாள் ஒன்றுக்கு, ஏறக்குறைய 150 லட்சம் லிட்டா் பால் விற்பனையாகும் தமிழகத்தில், ஆவின் மூலமாக 25 லட்சம் லிட்டா் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 84% பால் தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாக அவ்வப்போது உயா்த்தப்படும் பால் விலையைவிட, ஆவின் மூலமாக உயா்த்தப்படும் பாலின் விலை எப்படி ஏழைகளைப் பாதிக்க முடியும்?

விலை உயர்வு ஏன்?

பால் அனைவருக்கும் அத்தியாவசியமான பொருள் என்றபோதிலும், இதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானம், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். ஆவின் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக ஏறக்குறைய 23 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர். பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் நிலமற்ற ஏழைகள், சிறு மற்றும் குறு விவசாயிகள். இவர்கள் வறுமைக்கோட்டின் விளிம்பிலேயே பல காலமாக வாழ்ந்துவருகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏறக்குறைய ஏழு கோடி விவசாயக் குடும்பங்கள் பால் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் 75% நிலமற்ற சிறு விவசாயிகள். இந்த ஏழைக் குடும்பங்களால் உற்பத்திசெய்யப்படும் பாலுக்குத் தகுதியான விலை கொடுப்பது அவசியமல்லவா?

கறவை மாடுகள் வளர்ப்பவர்கள் தற்போது பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேய்ச்சல் தரைகள் குறைந்துவருகின்றன. குளம், ஏரிகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதால், கறவை மாடுகளுக்குத் தேவையான பசும்புல்லும் தண்ணீரும் எளிதில் கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களால் கறவை மாடுகளின் விலையில் கடும் ஏற்றம் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், பால் உற்பத்திக்குத் தேவைப்படும், பசும்புல், புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் மற்றும் இதர செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘விவசாயப் பொருட்களின் விலை ஆணையம்’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, உலர் தீவனத்தின் விலை 2012 முதல் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய 50% உயா்ந்துள்ளதாகக் கூறுகிறது. இதைக் காரணம் காட்டி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் விலையை உயர்த்தித் தருமாறு பல்வேறு கட்டங்களில் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம வறுமை ஒழிப்பு

நீர்ப்பாசன வசதி இல்லாத, வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலான இந்திய கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கறவை மாடுகள்தான். விவசாயத்தில் ஏற்படும் இக்கட்டான சூழல்களில் பெரும்பாலான குறு மற்றும் சிறு விவசாயிகளைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து காப்பாற்றி, அவர்களை வாழவைப்பது கறவை மாடுகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் என்று உலக வங்கியால் 1999-ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி அறிக்கை கூறியுள்ளது. பால் பொருட்களைப் பல ஆண்டுகளாக இறக்குமதி செய்துகொண்டிருந்த நாம், தற்போது உலகின் அதிகமான பால் உற்பத்திசெய்யும் நாடாக மாற்றியமைத்தது இந்த ஏழை விவசாயிகள்தான். இன்று உலகின் தரம்வாய்ந்த பால் பொருட்களை உற்பத்திசெய்யும் குஜராத் மாநிலத்திலுள்ள அமுல்-ஆனந்த் கூட்டுறவு சங்கங்களை வளரச் செய்து, வெண்மைப் புரட்சி நம் நாட்டில் ஏற்படுத்துவதற்கு உதவியது இந்த ஏழை விவசாயிகள்தான். அமுல் நிறுவனம் பாலுக்குக் கட்டுப்படியான விலை கொடுத்து, வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாகச் சிக்கித் தவித்துவந்த ஏராளமான விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விவசாயத்தில் வருமானம் வேகமாகக் குறைந்துவரும் இக்காலகட்டத்தில், உரிய அளவுக்குப் பால் விலையை உயா்த்தாவிட்டால், கறவை மாடுகளை நம்பி வாழும் குடும்பங்கள் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பால் விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்கும் என்று இன்று கோஷமிடுபவர்கள், பெரும்பாலான பால் உற்பத்தியாளர்களும் ஏழைகள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பிணைக் கைதிகள்போல் உழைக்கிறார்கள், இவர்களால் ஒருநாள் பொழுதைக்கூட வேறு இடத்தில் செலவிட முடியாது. இது மட்டுமல்லாமல், பால் உற்பத்திச் செலவும் பல காரணங்களால் சமீப காலங்களில் பன்மடங்கு உயா்ந்துள்ளது. பால் உற்பத்திக்கு முறையான விலை கொடுக்காவிட்டால், நாட்டில் வறுமை பெருகிவிடும். அரசு நிறுவனங்களால் உற்பத்திசெய்யப்படும் பால் அளவு குறைந்தால், தனியார் நிறுவனங்கள் பால் விலையை மேலும் உயர்த்திவிடுவார்கள். எனவே, ‘ஏழைகளைக் காப்போம்’ என்று சொல்லி, பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழைகளைக் கொன்றுவிடாதீர்கள்.

- அ.நாராயணமூர்த்தி,

பொருளியல் பேராசிரியர்,

தொடர்புக்கு: narayana64@gmail.com

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

பால் விலை உயர்வுதமிழக அரசுஆவின் பால் கொள்முதல்பால் கொள்முதல் விலைவிற்பனை விலைபால் உற்பத்தியாளர்கள்தனியார் நிறுவனங்கள்கறவை மாடுகள்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author