Published : 26 Aug 2019 06:53 am

Updated : 26 Aug 2019 09:34 am

 

Published : 26 Aug 2019 06:53 AM
Last Updated : 26 Aug 2019 09:34 AM

அருண் ஜேட்லி: மோடி பயணத்தின் டெல்லி வியூகதாரி!

arun-jaitley-delhi-strategist-on-modi-s-journey

ஜூரி

மக்களிடையே அதிக செல்வாக்கு இல்லாமல், மக்களால் நேரடியாக ஒருமுறைகூடத் தேர்ந்தெடுக்கப்படாமல் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் அருண் ஜேட்லி. பாஜகவின் உள்அரசியலில் மிகவும் ஈடுபட்ட இவர், மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிக்காட்டிவிடும் சுபாவம் உள்ளவர். கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட நிருபர்களைச் சந்திக்கும் ஜேட்லி, அவையெல்லாம் முடிந்த பிறகு, அதிகாரபூர்வமற்ற வகையில் சூடாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்காதவர். இதனாலேயே கட்சிக்குள் பலரின் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தது. சமகால அரசியல்வாதிகளைப் போல குரலை மாற்றிப் பேசி நடித்துக் காட்டும் முகமும் அவருக்கு உண்டு.

மாற்றுக்கட்சியில் இருப்பவராயினும் நீதிமன்ற வழக்குகளில் அவர்களுக்காக வாதாடி வெற்றி பெற்றுத்தந்திருக்கிறார். வி.பி.சிங், சந்திரசேகர், சரத் யாதவ், ப.சிதம்பரம் என்று இவருடைய நெருங்கிய நட்பு வட்டார அரசியல் தலைவர்களைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். பாஜக தலைவர்களைப் பற்றிய கிசுகிசுக்களின் ஆதாரமே இவர்தான் என்பதாகக் கட்சியின் உயர் தலைவர்கள் வருத்தப்படுவதும் உண்டு. அருண் ஜேட்லியை அறிவதென்பது பாஜகவின் வளர்ச்சியை அறிவதும்கூடத்தான்.
உதயமான தருணம்

தேசப் பிரிவினைக்கு முன்னால் பாகிஸ்தானில் வசித்த ஜேட்லியின் குடும்பம் பிறகு டெல்லிக்குக் குடிபெயர்ந்தது. அவரது தந்தை மகராஜ் கிஷன் ஜேட்லியைப் போலவே அருண் ஜேட்லியும் வழக்கறிஞர். பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே ஜேட்லிக்கு விவாதங்களின் மீது தீராக் காதல் இருந்தது. அதுவே அவரைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் தலைவராக்கியது. 1970-களில் நிலவிய இந்திரா எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு மனோநிலை ஆகியவை ஜேட்லியையும் பற்றிக்கொள்ள அவர் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவில் சேர்ந்தார். அது அவரைக் கல்லூரித் தேர்தலில் வெற்றிபெற வைத்தது. ஆனால், அதற்குப் பிறகு அவர் பொதுத் தேர்தலில் வெற்றி பெறாமல் மாநிலங்களவை உறுப்பினராகவே நீடித்து மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தார். நீரிழிவு நோயாலும் வேறு அவதிகளாலும் 2019 மக்களவை பொதுத் தேர்தலிலிருந்து விலகியிருந்த ஜேட்லி, பிறகு அமைச்சரவையிலும் சேர மறுத்துவிட்டார்.

அரசியலுக்கு வந்த தொடக்க காலத்தில் அருண் ஜேட்லி தன்னை நவீனக் கண்ணோட்டம் உள்ளவராகவும் மிதவாதியாகவும் சுதந்திரச் சிந்தனைகளை ஆதரிப்பவராகவும் நிலைநாட்ட முயன்றார். இது டெல்லியில் தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகளுக்குப் பிடித்திருந்தது. ஆனால், இதுவே ஆர்எஸ்எஸ் பிரிவினருக்கு அவர் மீது சந்தேகத்தை உண்டாக்குவதாக அமைந்தது. “அவ்வப்போது இந்துத்துவா பற்றிப் பேசுவோமே தவிர, அதில் தீவிர ஈடுபாடு இல்லை” என்று ஜேட்லி சொன்னதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பானது. “வாஜ்பாய் எங்களுடைய நோக்கங்களுக்கு ஒரு முகமூடிதான், எங்களுடைய உண்மையான முகம் வேறு” என்று கோவிந்தாசாரி ஒருகாலத்தில் அளித்த பேட்டி ஏற்படுத்திய பரபரப்பை ஜேட்லியின் இக்கருத்தும் ஏற்படுத்தியது. “அப்படி நான் பேசவே இல்லை” என்று ஜேட்லி மறுக்க நேர்ந்தது. அதேவேளையில், ஜேட்லியின் படிப்பும் பின்னணியும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடையே கட்சிக்கு ஆதரவை வளர்த்தது. எனவே, கட்சி அவரைத் தக்கவைத்துக்கொண்டது.

சிறைவாசத் தலைவர்கள்

கல்லூரியில் படித்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால், பாட்னாவுக்கும் அகமதாபாதுக்கும் அடிக்கடி சென்றார். அப்போது இடதுசாரி, சோஷலிஸ்ட்டுகள், வலதுசாரி என்று அனைத்துத் தரப்பினரையும் நண்பர்களாகப் பெறும் சூழல் அமைந்தது. 1974 மார்ச் மாதம் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மாநாட்டை இரண்டு நாட்களுக்கு நடத்தியவர், ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசும் பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுசெய்தார். 1975 ஜூன் 26-ல் நெருக்கடிநிலையைப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 1975 ஜூன் 25-ல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜெயபிரகாஷ் நாராயணும், பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் முடிந்து, நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பினார். போலீஸார் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். வழக்கறிஞரான அவருடைய தந்தை போலீஸாருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது, பின்வாசல் வழியாக வெளியேறினார் ஜேட்லி. அடுத்த நாள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சுமார் 200 பேரைத் திரட்டி நெருக்கடிநிலையைக் கண்டிக்கும் கூட்டத்தை நடத்தினார். போலீஸார் அவரைக் கைதுசெய்து முதலில் அம்பாலா சிறையிலும், பிறகு திஹார் சிறையிலும் அடைத்தனர். மொத்தம் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் அதிகம் வதைபடவில்லை என்றும், வேளைக்கு நன்றாகச் சாப்பிட்டுக் குண்டாகிவிட்டதாகவும், அரசியல் சித்தாந்தங்கள் குறித்து நிறைய விவாதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். சிறையில்தான் அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி, கே.ஆர்.மல்கானி, நானாஜி தேஷ்முக் போன்ற உயர் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.

ஜனதா கட்சி தொடங்கப்பட்டவுடன் நானாஜி தேஷ்முக்கின் பரிந்துரையின் பேரில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக அருண் ஜேட்லியைச் சேர்த்தார் தலைவர் சந்திரசேகர். 1977 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஜேட்லி போட்டியிட வேண்டும் என்றார் வாஜ்பாய். போட்டியிடத் தகுதியான வயது இல்லை என்பதால் வாய்ப்பு கிட்டவில்லை. அந்த ஆண்டு படிப்பை முடித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். டெல்லி மாநகராட்சி, டெல்லி வளர்ச்சி ஆணைய வழக்குகளில் தனிப் பயிற்சி பெற்றார். 1979-ல் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் கிரிதாரிலால் டோக்ராவின் மகள் சங்கீதாவை மணந்துகொண்டார். அவருடைய திருமணத்துக்கு வாஜ்பாய், அத்வானி மட்டுமல்ல; இந்திரா காந்தியே நேரில் வந்து வாழ்த்தினார். டெல்லி மாநகராட்சி வழக்குகளில் ஜேட்லி பெற்ற வெற்றி, கட்சியின் கவனத்தை ஈர்த்தது. 1980-ல் பாஜகவில் முறைப்படி சேர்ந்தார். அந்த ஆண்டுதான் வாஜ்பாய் கட்சியின் தேசியத் தலைவரானார்.

1980-ல் மீண்டும் பிரதமரான இந்திரா காந்தி, நெருக்கடிநிலை அறிவிப்புக்காகத் தனக்கு எதிராகக் கடுமையாக எழுதிய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குப் பாடம் புகட்ட, அதற்கு அளித்திருந்த கட்டுமான அனுமதியை டெல்லி வளர்ச்சி ஆணையம் மூலம் ரத்துசெய்தார். பத்திரிகை அதிபர் ராம்நாத் கோயங்கா, பத்திரிகை ஆசிரியர் அருண் சௌரி இருவரும் பிரபல வழக்கறிஞர் கராஞ்சாவாலாவை அணுகினர். அவர் அருண் ஜேட்லியை அமர்த்திக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். அரசின் முடிவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. இதையடுத்து கோயங்கா, அருண் சௌரி இருவருடனும் ஜேட்லி நண்பரானார்.

1989-ல் காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தலில் வென்று பிரதமரானார் வி.பி.சிங். ஜனதா தளம் ஆளுங்கட்சியானது. அந்தத் தேசிய முன்னணி அரசை பாஜக வெளியிலிருந்து ஆதரித்தது. 1989 தேர்தலில் பாஜக 86 தொகுதிகளில் வென்றது. கட்சிக்கான தேர்தல் நிதியைத் திரட்டிக்கொடுத்தும் பிரச்சாரத்துக்கு உத்தி வகுத்தும் சிறப்பாகச் செயல்பட்டதாக அருண் ஜேட்லி பாராட்டப்பட்டார். அப்போது 37 வயதே நிரம்பிய ஜேட்லி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக வி.பி.சிங்கால் நியமிக்கப்பட்டார்.
அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற விசுவ ஹிந்து பரிஷத்தின் ராம ஜன்மபூமி இயக்கத்தை ஆதரிப்பது என்று பலன்பூரில் நடந்த பாஜக தேசிய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அருண் ஜேட்லி இந்த முடிவை ஆதரிக்காமல் நடுநிலைவகித்தார். ஆனால், ராமரத யாத்திரையை அத்வானி 1990-ல் தொடங்கியபோது அன்றாடம் அவர் பத்திரிகைகளிடம் பேச வேண்டியதைத் தயாரித்ததே அருண் ஜேட்லிதான். பிறகு, வகுப்புக் கலவரங்கள் மூண்டபோது, விஎச்பியின் கோரிக்கையை ஏற்குமாறு வி.பி.சிங்கை வற்புறுத்தினார் ஜேட்லி. அக்டோபர் மாதம் பிஹாரின் சமஷ்டிபூரை அத்வானியின் ரத யாத்திரை அடைந்தபோது, முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியைக் கைதுசெய்து யாத்திரையைத் தடுத்தார். தேசிய முன்னணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது.

வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையிலான சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரித்தது. அப்போதும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் நீடித்தார் ஜேட்லி. சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராகப் பதவியேற்றதும் கூடுதல் சொலிசிட்டர் பதவியிலிருந்து விலகினார் ஜேட்லி. இப்படி நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் பலவற்றிலும் ஜேட்லி நேரடியாகவே பங்காற்றியிருக்கிறார்.

ஆளுமையை இனங்காணும் வல்லவர்

1991-ல் ராஷ்ட்ரீய ஏக்தா யாத்ரா என்ற சுற்றுப்பயண நிகழ்ச்சியை முரளி மனோகர் ஜோஷி நடத்தினார். நரேந்திர மோடி அதை ஒருங்கிணைத்தார். அப்போதுதான் மோடியைச் சந்தித்தார் ஜேட்லி. கட்சிக்காரர்களாக இருந்தாலும் மாற்றுக்கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களுடைய அறிவு, திறமை, ஆளுமை ஆகியவற்றை எளிதில் எடைபோடுவதில் வல்லவர் ஜேட்லி. குஜராத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மோடி இருந்தபோதே அவர் எதிர்காலத்தில் சிறந்த இடத்துக்கு வருவார் என்று கணித்தார் ஜேட்லி. இருவருக்கும் இடையிலான நட்பு பரஸ்பரம் நன்மைகளைத் தந்தது என்றாலும், கட்சியும் அதனால் பலன்பெற்றது. மோடி மக்களிடையே புகழ்பெற்றவர், ஜேட்லி மேல்தட்டு வர்க்கத்திடம் பிரபலமானவர். ஒருவருக்கு டெல்லி புதிது. இன்னொருவருக்கோ டெல்லி அத்துப்படி.

1995-ல் குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது டெல்லியில் தங்கிப் பணிபுரியுமாறு அனுப்பப்பட்டார் மோடி. அப்போது ஜேட்லி அவருக்கு நண்பரானார். 1992 முதல் 1997 வரையில் துஷ்யந்த் தவே என்ற வழக்கறிஞர் ஜேட்லியுடன் ஒரே வீட்டில் தங்கிப் பணியாற்றினார். மோடி அடிக்கடி அங்கு வந்ததை அவர் நினைவுகூர்கிறார்.

1999-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மோடி, ஜேட்லி இருவருமே மற்றவர்களின் திறமைகளையும் பண்புகளையும் பாராட்டிப் பேசியுள்ளனர். அப்போது மோடி குஜராத்தில் முதல்வராகவில்லை. ஜேட்லி, மோடி இருவருமே என்னுடைய கண்டுபிடிப்புகள் என்று தனது சுயசரிதையில் குறிப்பிடும் அத்வானி, அவ்விருவரையும்விட பிரமோத் மகாஜனைத்தான் அதிகம் புகழ்ந்திருக்கிறார். மகாஜன் இவ்விருவரும் மேலே வந்துவிடாதபடிக்குத் தடுத்துக்கொண்டிருந்தார் என்கின்றன கட்சி வட்டாரங்கள். ஒருகட்டத்தில், மகாஜனுக்கு எதிராக ஜேட்லி, மோடி, வெங்கைய நாயுடு அணிசேர்ந்தார்கள்.

மோடியுடன் நட்பு

1999-ல் பாஜகவின் பத்திரிகைத் தொடர்பாளர் ஆனார் ஜேட்லி. செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சரான ஜேட்லி, குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ல் குஜராத் முதல்வரானார் மோடி. 2002-ல் சட்டமன்றத்தை அதன் பதவிக்காலம் முடிவதற்கு 8 மாதங்கள் இருக்கும்போது கலைத்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தார் மோடி. அப்போது கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் ஜேட்லி. குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு முன்பாகத் தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேஎம் லிங்டோ அனுமதி தர மறுத்தார். லிங்டோவின் மதப் பெயரைச் சொல்லி அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் மோடி. மோடியின் அந்தப் பேச்சைக் கடுமையாகக் கண்டித்தார் வாஜ்பாய். அப்போது மோடிக்கு ஆதரவாகப் பேசினார்கள் அத்வானியும் ஜேட்லியும். இதனால், பாஜகவுக்குள் தலைவர்களுக்கிடையில் இருந்த பிளவு வெளிப்பட்டது. லிங்டோவின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக சார்பில் ஜேட்லி ஆஜரானார். இதில் அதிருப்தியுற்ற வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்தும் விலகிவிட நினைத்தார். முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் என்று இதற்கிடையில் அறிவித்தார் மோடி. ஜேட்லி சொல்லித்தராமல் மோடி இப்படியொரு முடிவுக்கு வந்திருக்க மாட்டார் என்று சக தலைவர்களிடம் வருத்தப்பட்டார் வாஜ்பாய். ஆனால், தேர்தலை உடனே நடத்தக் கூடாது என்று லிங்டோ எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபரில் தீர்ப்பளித்தது. சட்டத்தைச் சரியாகப் படிக்காமல் ஜேட்லி வாதிட்டார் என்றார் வழக்கறிஞர் ராஜீவ் தவான். ஆனால், இதற்குப் பிறகு மோடி - ஜேட்லி நெருக்கம் அதிகமானது.

குஜராத் கலவரத்துக்குப் பிறகு முதலமைச்சர் பதவியிலிருந்து மோடியை நீக்க வாஜ்பாய் விரும்பினார். அத்வானி, ஜேட்லி ஆகியோர் அதை ஏற்கவில்லை. அது கட்சிக்குப் பலவீனமாகிவிடும் என்றனர். அந்த நேரத்தில், கட்சியின் தேசிய செயற்குழு கோவாவில் கூடவிருந்தது. அத்வானி கூறியபடி முதல்நாள் ஆமதாபாத் சென்ற ஜேட்லி, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக மோடியை அறிவிக்கச் செய்தார். பிறகு, கோவாவில் கூடிய தேசிய செயற்குழு அதை விவாதித்து, விலகத் தேவையில்லை என்று கூறிவிட்டது. இப்படி மோடிக்காக ஜேட்லி கட்சிக்குள் வாதாடியது பல முறை. அதற்கு நன்றிக்கடனாக 2014 மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜேட்லி தோற்றிருந்த நிலையிலும் அவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் மோடி.

தேர்தல் உடன்பாடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதில் ஜேட்லி சிறப்பாகப் பணியாற்றினார். பிஹாரில் நிதீஷ் குமார், உத்தர பிரதேசத்தில் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல், அவருடைய மகன் சுக்வீந்தர் சிங் பாதல் ஆகியோருடன் பேசி சுமுகத் தீர்வு காண்பதில் ஜேட்லி வெற்றிபெற்றார். மோடியைப் பிடிக்காததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸுடன் மகா கட்பந்தன் அமைத்த நிதீஷ் குமாரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இழுத்து, பிஹாரில் கூட்டணி அரசை மீண்டும் ஏற்படுத்தியவரும் ஜேட்லிதான்.

ஆனால், ஜேட்லிக்குக் கட்சிக்குள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி உள்ளிட்டவர்களுடன் ஏனோ பிணக்கு இருந்துகொண்டே இருந்தது. ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சிங், அருண் சௌரி ஆகியோரும்கூட ஜேட்லியைக் கடுமையாகப் பின்னாளில் விமர்சிக்கத் தொடங்கினார்கள். ஜேட்லியிடம் இருந்த இன்னொரு குறைபாடு, கட்சித் தலைவர்களைப் பற்றி கட்சிக்காரர்களிடமே பகிரங்கமாகப் பேசுவதுதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவருடைய வளர்ப்பு மகள் குடும்பத்தைப் பற்றி ஜேட்லி பேசியது வாஜ்பாயின் காதுகளை எட்டி அவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

தரைகீழ் பாதைகள்

பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, ஜேட்லியின் கல்லூரித் தோழர். ஜேட்லிக்கு எல்லாப் பத்திரிகை நிறுவனங்களின் அதிபர்களையும் ஆசிரியர்களையும் தனிப்பட்ட முறையிலேயே தெரியும். எனவே, ஜேட்லி பற்றிய எதிர்மறையான விஷயங்கள் பத்திரிகைகளில் வராமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர். அதேசமயம், ஜேட்லியிடமிருந்த இன்னொரு நல்ல பழக்கம், அவரைக் கடுமையாக விமர்சித்துப் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள் நேரில் வரும்போது பகைமை பாராட்டாமல் மரியாதையாக நடத்துவார். கூடுதல் தகவல்களைத் தர மாட்டார், அவ்வளவுதான். எதிர்க்கட்சிக்காரராக இருந்தாலும் ப.சிதம்பரத்திடம் மிகுந்த மரியாதையும் நட்பும் கொண்டவர் ஜேட்லி. ஜேட்லி யாருடனெல்லாம் முதலில் நட்பாக இருந்தாரோ அவர்களில் பலர் அவருக்கு எதிராகத் திரும்பி கடுமையாக விமர்சிப்பதும் நடந்திருக்கிறது.

டெல்லி அரசியலுக்கு ஏராளமான தரைகீழ் பாதைகள் உண்டு. இந்தப் பாதைகள் அனைத்தையும் அறிந்தவர் அருண் ஜேட்லி. அது மோடிக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. அரசியலில் பன்முகத்தன்மை கொண்டவர்களைக் காண்பது இன்று அரிதாகிவருகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி தற்போது விடைபெற்றிருக்கிறார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்


அருண் ஜேட்லிஅருண் ஜேட்லி மறைவுமுன்னாள் மத்திய நிதி அமைச்சர்பாஜக மூத்த தலைவர்மோடியின் நண்பர்Arun jaitleyபணமதிப்பு நீக்க நடவடிக்கைஜிஎஸ்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author