Published : 22 Aug 2019 08:24 am

Updated : 22 Aug 2019 08:24 am

 

Published : 22 Aug 2019 08:24 AM
Last Updated : 22 Aug 2019 08:24 AM

நேர்கொண்ட பார்வை: பெண்ணின் மௌனம் சம்மதமா? 

no-means-no

ம.சுசித்ரா

மின் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் வேகமாக ரயிலில் ஏறினார். அவரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இளைஞர் ஒருவரும் ரயிலில் ஏறினார். அடுத்த நிறுத்தத்தில் அந்தப் பெண் ரயிலை விட்டு இறங்கும்படி வலியுறுத்திக்கொண்டே அவர் இருந்தார். அந்தப் பெண்ணோ இறுக்கமான முகத்துடன் ஒரு வார்த்தைகூடப் பதில் பேசாமல், கைப் பையிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கும் பாவனை செய்தார். “ஏய்! ரொம்பப் பண்ணாத!” என்று சொன்ன இளைஞர், புத்தகத்தைப் பறித்தார். கடுகடுப்பான முகத்துடன் பையிலிருந்து இயர்ஃபோன்ஸை எடுத்துக் காதில் பொருத்திக்கொண்டார் அந்தப் பெண். “என்ன விளையாடுறியா?” என்று குரலை உயர்த்தி இயர்ஃபோன்ஸையும் பிடுங்கினார். இறுதியாக, அடுத்த நிறுத்தம் வந்ததும் “என்ன நினைச்சிட்டிருக்காள்னே புரியல” என்று முணுமுணுத்தபடி ரயிலை விட்டு இறங்கிவிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்கள் இருக்கும். ஒருவேளை தற்போது வெளியாகியிருக்கும், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தைப் பார்த்திருந்தால் அந்த இளைஞருக்கு அன்று அந்தப் பெண் என்ன நினைத்தார் என்பது புரிந்திருக்கும். தன்னுடைய புத்தகத்தை விரித்துவைத்ததன் மூலம், இயர்ஃபோன்ஸைக் காதில் பொருத்தியதன் மூலம், ‘நோ’ என்பதைத்தான் அந்தப் பெண் அந்த இளைஞரிடம் உணர்த்தினார்.

‘நோ’ என்றால் ‘நோ’தான்

ஆனால், பெண் ‘வேண்டாம்’ என்று தெரிவிப்பதைப் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வுடன் ஆண் வளர்க்கப்படாததால் அவள் பாசாங்கு செய்வதாகவே தவறுதலாகப் புரிந்துகொள்கிறான். அப்படிப் புரிந்துகொள்ளும்படியாகத்தான் வளர்க்கப்படுகிறான். போதாததற்கு, ‘பெண் மனம் ஆழம்’, ’பெண் முரண்களின் மூட்டை’ என்றெல்லாம் காலங்காலமாகப் பெண்ணைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆண் மையச் சமூகமானது, பெண்ணைக் குழப்பவாதியாகச் சித்தரித்துவிட்டது. இதன் நீட்சியாக, ‘பொண்ணுங்க இல்லைனு சொன்னா, ஆமானு அர்த்தம்’, ‘வேணாம்னு சொன்னா, வேணும்னு அர்த்தம்’-இப்படி முட்டாள்தனமான கற்பிதங்களைத் தமிழ் சினிமா பிதற்றிக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கு நடுவே, “ஒரு பொண்ணு ‘நோ’னு சொன்னா, அதற்கு அர்த்தம் ‘நோ’தான்” என்று அஜித் போன்ற வணிகரீதியான பெருவெற்றிகண்ட மாஸ் ஹீரோவிடமிருந்து வசனம் வருவதென்பது தமிழ் சினிமா பாவ விமோசனம் தேடும் அற்புதத் தருணம்.

சொல்லப்போனால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்திய சினிமா அவ்வப்போது குரல் கொடுத்துவந்திருக்கிறது. ஆனால், பாலியல் ஒப்புதல்/மறுப்பு என்ற தளத்தில் இந்திய வெகுஜனத் திரைப்பட உலகிலிருந்து ஒலித்த முதல் குரல், 2016-ல் வெளியான ‘பிங்க்’ இந்தித் திரைப்படம் எனலாம். அதன் தமிழ் மறுஉருவாக்கமாகத் தற்போது வெளிவந்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ மூலக் கதையின் அடர்த்தி குறையாமல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் புதிய திறப்பு. முன்பின் தெரியாத பெண், தோழி, காதலி, பாலியல் தொழிலாளி ஏன் மனைவியே ஆனாலும் ஒரு பெண் ‘நோ’ என்று சொன்னால், அதற்கு அர்த்தம் ‘நோ’தான் என்பது ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்கான பாடம்.

ஒப்புதல் எது?

நவீன பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் சிக்கல்களை இப்படம் வெவ்வேறு கோணங்களில் ஆழமாக அலசியுள்ளது. பெண் வெளிப்படுத்தும் ‘மறுப்பை’ ஆண் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது விஸ்தாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதே நாணயத்தின் மறுபக்கமான ‘ஒப்புதல்’ (consent) என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த தெளிவு அவசியப்படுகிறது.

உடை, சமூக அந்தஸ்து, சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் இடம், தோழனுடன் செல்லுதல், முந்தைய பாலியல் உறவுநிலை இவற்றில் எதை வைத்தும் ஒரு பெண் பாலியல் உறவுக்கு உடன்படத் தயாராக இருப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. நவீன பெண்களுக்கு இப்படியான சிக்கல் என்றால், மறுமுனையில் ‘குடும்பப் பெண்’ என்ற சட்டகத்துக்குள் திணிக்கப்படும் பெண்கள் தங்களுடைய பாலியல் விருப்பத்தை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆகையால், அவர்கள் ‘வேண்டும்’ என்பதை ‘வேண்டாம்’ என்பதன் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆக, ஒருபுறம் எதையுமே சொல்லவில்லை என்றாலும் நடை, உடை, பாவனை மூலமாகப் பாலியல் உறவுக்குப் பச்சைக்கொடி காட்டும் நவீனப் பெண். மறுபுறம், ‘வேண்டாம்’ என்று சொல்வதன் மூலமாக ‘வேண்டும்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பாரம்பரியப் பெண். இந்த இரண்டு வகை பெண்கள் மட்டுமே இருப்பதாகத்தான் இங்கு புரிந்துகொள்ளப்படுகிறது.
ஆனால், பெண்ணின் பாலியல் ஒப்புதலை செயல், நடத்தை மூலமாகப் புரிந்துகொள்ள ஆண்கள் பழக வேண்டியுள்ளது. இதில் நடத்தை என்பது மனதளவில் தான் தயார் என்பதை விருப்பமாக வெளிப்படுத்துவது. செயல்வழியாக ஒப்புதலை வெளிப்படுத்துவது என்பதோ ‘தலையசைத்தல்’, ‘ஓகே’, ‘சரி’ என்ற சைகை, வார்த்தைகளில் வெளிப்படலாம். சில நெருக்கடியான சூழலில் ‘சரி’ என்று சொல்வதுகூட சம்மதம் ஆகிவிடாது. அதேபோல, ஒப்புதலோடு தொடங்கும் செயல் ஒருகட்டத்தில் அசௌகரியமாக மாற விலகிப்போகக்கூடும். ஆக, ஒப்புதலாக இருப்பதுகூட வேறுகட்டத்தில் மறுப்பாக மாறலாம். இவை எல்லாவற்றையும் சம்பந்தப்பட்ட இருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இப்படியான நாகரிகம் பார்த்ததால்தான் மின் ரயிலில் பயணித்த இளம் பெண் நேரடியாக அந்த இளைஞரிடம், ‘நோ’ என்று சொல்லாமல் வேறு சைகைகளில் ஈடுபட்டார்.
ஆக, பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாக பாவித்துக்கொள்ளுதல், மறுப்பையே ஏற்பாகக் கற்பனை செய்துகொள்ளுதல் ஆகிய கற்பனைகள் இனியேனும் ஆண்களுக்குக் கலையட்டும்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in


நேர்கொண்ட பார்வைபாலியல் குற்றச்சாட்டுகள்பாலியல் தொல்லைNO means NOSex abuseEve teasing

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author