Published : 22 Aug 2019 08:19 AM
Last Updated : 22 Aug 2019 08:19 AM

மருத்துவத்தைத் தனியார் மயமாக்குவதே தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் நோக்கம்! - ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேட்டி

ச.கோபாலகிருஷ்ணன்

இந்திய மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மருத்துவக் கல்வித் துறையைச் சீரமைப்பதே அவசரத் தேவை என்று நினைக்கிறது இந்திய அரசு. அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான், சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா. இந்த ஆணையம் மருத்துவக் கல்விக்கான ஒழுங்காற்று வாரியமாகச் செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை நிறுவுகிறது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர ‘நீட்’ தேர்வுபோல எம்பிபிஎஸ் முடித்தவர்கள் மருத்துவராகப் பணியாற்றுவதற்கும், பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கும் ‘நெக்ஸ்ட்’ பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், மருத்துவர்கள் எண்ணிக்கையில் நிலவும் பற்றாக்குறையைச் சமாளிக்க செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், அவசர ஊர்திப் பணியாளர்கள், மாற்று மருத்துவங்களைப் பயின்றவர்கள் எல்லாம் ஆறு மாத இணைப்புப் பயிற்சிக்குப் பின் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவத்தின் தரத்தை உயர்த்தவும், அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கவும் இந்த மாற்றங்களைச் செய்வதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஏன் எதிர்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மருத்துவருமான ஜி.ஆர்.ரவீந்திரநாத்துடன் பேசியவற்றிலிருந்து சில பகுதிகள்...

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ஏன் எதிர்க்கிறீர்கள்?

முதலில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் தனித்துப் பார்க்கக் கூடாது. இதனுடன் தேசிய சுகாதாரக் கொள்கை 2017, தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019, நிதி ஆயோக் தீர்மானங்கள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், இன்றைய மத்திய அரசு மருத்துவத் துறையில் இரண்டு விஷயங்களைச் செய்யப்பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒன்று, மருத்துவக் கல்வி, மருத்துவச் சேவையை முழுமையாகத் தனியார்மயமாக்குவது, வணிகமயமாக்குவது, கார்ப்பரேட்மயமாக்குவது. இரண்டாவது, தங்களுடைய கருத்தியலை மருத்துவக் கல்வியிலும் மருத்துவச் சேவையிலும் புகுத்துவது.

2019 புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் பண்டைய மருத்துவ முறை சிறந்தது என்று சொல்கிறார்கள். சுகாதாரக் கொள்கையில் ஆயுர்வேதம் உள்ளிட்ட பண்டைய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்கள். மாற்று மருத்துவ முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவர்கள் ஆயுர்வேதத்தைக்கூட இன்று அதில் ஏற்பட்டுள்ள அறிவியல்பூர்வ வளர்ச்சிகளுடன் ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. பண்டைய மருத்துவ முறை என்ற பெயரில், வேதகால மருத்துவ முறையைத் திணிக்கப் பார்ப்பதாகவே தெரிகிறது. இதற்கெல்லாம் இந்திய மருத்துவ கவுன்சில் தடையாக இருந்திருக்கும்.

மருத்துவ கவுன்சில் மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?

இந்திய அரசியல்வாதிகள் மீது இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளா? அதற்காக, நம்முடைய அரசமைப்பையே எடுத்துவிட முடியுமா? ஊழலுக்காக அமைப்பையே ஒழிப்பது எப்படித் தீர்வாக முடியும்? ஊழல் இருந்தது, வெளிப்படைத்தன்மை இல்லாதது, போதிய அளவு மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவர்களை உருவாக்கத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகளை கவுன்சில் மீது வைத்தார்கள். ஆனால், இவற்றுக்கு மருத்துவ கவுன்சிலை மட்டும் பொறுப்பாக்கிவிட முடியாது. 1980-களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் வரத் தொடங்கிய பிறகுதான் ஊழல் அதிகரிக்கத் தொடங்கியது. மருத்துவக் கல்வியில் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் தனியார்மயம் இருப்பதைப் பற்றிப் பேசாமல், மருத்துவ கவுன்சிலை இல்லாமல் ஆக்குவதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கலாம் என்று கவுன்சில் விதிகளை மாற்றினார்கள். அதில் லாப நோக்கம் இருக்கக் கூடாது என்ற விதியை இப்போது பாஜக அரசு நீக்கியுள்ளது.

இது தவிர, கல்லூரிகளில் 50% இடங்களுக்கு மட்டுமான கட்டணத்தை ஆணையம் ஒழுங்குபடுத்தும் என்கிறார்கள். கட்டணத்தை நிர்ணயிக்கும் என்றுகூட சொல்லவில்லை. இப்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தவிர, தனியார் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் கோட்டா’ உட்பட அனைத்துக் கல்வி இருக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு நியமிக்கும் கட்டண நிர்ணயக் குழுதான் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. இதுவே மாணவர்களுக்கு ஆதரவான நிலை. கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டணம் நிர்ணயிப்பதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதன் மூலம் கிட்டத்தட்ட 100% இருக்கைகளுக்கும் அரசே கட்டணம் நிர்ணயிக்கும் நிலை உருவாகிவந்தது. இப்போது அது 50% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது அப்பட்டமான தனியார் ஆதரவுச் செயல். மருத்துவ கவுன்சிலைவிட மருத்துவ ஆணையம் சிறந்தது என்றால் 100% இருக்கைகளுக்கும் அதுவே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்தானே? கவுன்சில் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை வைத்தார்களோ அவற்றை அதிகரிப்பதாகத்தான் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை தீவிரமாக இருக்கிறது. இதுபோக, மருத்துவர்களில் பலர் முறையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதைச் சமாளிக்கவே மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்போரையும், மாற்று மருத்துவக் கல்வி பெற்றவர்களையும் மருத்துவர்களாகப் பணியாற்றுவதற்கான ஆறு மாத இணைப்புப் பயிற்சியை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள்தான் காரணம். மாநிலங்களுக்கு இடையில் சமமற்ற வளர்ச்சி நிலவுகிறது. கிராமப்புறங்களில் வளர்ச்சி இல்லாததால் அங்கு மருத்துவர்கள் பணியாற்ற முற்படுவதில்லை. உண்மையில், மருத்துவர்களைவிட மருந்தகப் பணியாளர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைதான் அதிகம். அதற்காக, மருத்துவர்கள் போதுமான அளவு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. அங்கு அவர்கள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். இவற்றைச் செய்யாமல் இணைப்புப் பயிற்சியைப் பெறுபவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? உள்கட்டமைப்பைச் சீரமைக்காமல் மருத்துவர்கள் போதவில்லை என்ற குற்றச்சாட்டைப் பேசி அவர்கள் நினைப்பதைச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

சதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பேசுகிறீர்களே?

இல்லை, நான் எழுப்பும் இந்த சந்தேகத்துக்கு முகாந்திரம் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவில் பள்ளிகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பண்டைய கல்வி முறை, மருத்துவ முறை உள்ளிட்டவற்றைப் பயிற்றுவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் என்ற பெயரில் அவர்கள் கருத்தியலுக்கு ஆதரவானவர்களையே நியமிப்பார்கள். இதெல்லாம் ஊகங்களாகத் தோன்றலாம். இந்த ஊகங்கள் உண்மையாவதற்கான வழிகளைத்தான் மத்திய அரசு உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அருண் ஜேட்லி 2018-ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சுகாதார & நல மையங்கள் அமைக்கப்படும் என்றார். இதன்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கீழும் துணைச் சுகாதார மையங்கள் இருக்கின்றன. மலைப் பகுதிகளில் மூவாயிரம் பேருக்கு ஒரு துணை மையமும், மற்ற பகுதிகளில் ஐயாயிரம் பேருக்கு ஒரு துணை மையமும் இருக்கின்றன. ‘பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு’ (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி) அடிப்படையில் பெருநிறுவனங்கள் இவற்றை ஏற்று நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய மருத்துவத் துறையின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய துணைச் சுகாதார மையங்களை, சுகாதார மற்றும் நல மையம் என்று பெயர் மாற்றி அவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறார்கள். அங்கு தன்னார்வலர்களையும், மருத்துவக் கல்வி பெற்ற ஆயுஷ் மருத்துவர்களையும் நியமிக்கப்போகிறார்கள். அவர்களுக்கும் அரசுப் பணி சார்ந்த ஊதிய உயர்வு உத்தரவாதங்கள் எதுவும் இல்லை.

ஆனால், ஆயுஷ் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கிறதே?

ஆயுர்வேத மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அதிகரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் குறைந்த ஊதியத்துக்குக் கிடைப்பார்கள் என்பதால், இணைப்புப் பயிற்சி கொடுத்து அலோபதி மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்போகிறார்கள். இதனால், அலோபதி மருத்துவர்களும் வாய்ப்பை இழப்பார்கள். ஆயுஷ் மருத்துவர்களும் பெருமளவில் எந்தப் பாதுகாப்பும் இல்லாத தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ அமைப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மருத்துவத்தில் பன்மைத்துவம் இருக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. அதைச் சாதிக்க வேண்டும் என்றால் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாறாக, அந்த மருத்துவக் கல்விகளைப் பயின்றவர்களை அலோபதி மருத்துவப் பணியில் ஈடுபடுத்துவது எப்படி பன்மைத்துவத்தைக் கொண்டுவரும்?

மருத்துவர்கள், மருத்துவர் சங்கங்கள் இந்த மசோதாவை எதிர்த்து சில போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அவை தேசிய அளவில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லையே?

உண்மையில், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மருத்துவர்கள் பலர் உணரவில்லை. ‘நெக்ஸ்ட்’ தேர்வு உள்ளிட்ட தங்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய ஒருசில விஷயங்களை மட்டுமே எதிர்க்கிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இது தொடர்பான கருத்தரங்குகள், உரையாடல்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் செப்டம்பர் 29 அன்று சென்னையில் மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதை நிச்சயமாக நாங்கள் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வோம்.

- ச.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x