Published : 21 Aug 2019 09:49 AM
Last Updated : 21 Aug 2019 09:49 AM

360: மண்டையை உடைத்து சகோதரர் ஆக்க வேண்டாம்!

இறையாண்மை என்பது அதிகாரம் எல்லாம் ஒரே இடத்தில், ஒரே கைகளில் குவிவது அல்ல; இறையாண்மை என்ற வார்த்தைக்கே விரிவான பொருள் உண்டு; இந்த நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள பல சக்திகளால் - இறையாண்மை என்பதற்கான விளக்கமே பல மாற்றங்களைப் பெற்றுவருகிறது. சுயநிர்ணய உரிமை என்பதற்கான விளக்கத்தை வரையறுப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பேரவை வெகு மும்முரமாக இருக்கிறது. சுயநிர்ணய உரிமை என்பதற்கு என்ன பொருள் என்பதை இறுதிசெய்யும் நடைமுறையில் ஐநா குழு தீவிரமாக இருக்கிறது என்று அறிகிறேன். எனவே, இறையாண்மை என்பதை முற்று முழுக்க விளக்கிவிட்டோம் என்றோ, இதுதான் இறையாண்மை என்று அறுதியிட்டுவிட்டதாகவோ நினைக்க வேண்டாம். இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டதாலே நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்தப் பேச்சும், எந்த அதிருப்தியும் தலைதூக்காமல் தடுத்துவிட்டோம் என்றும் நினைத்துவிட வேண்டாம்.

உங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக, உங்களால் நினைத்தபடி ஒரு சட்டத்தை இயற்றச் சுலபமாக முடிந்திருக்கிறது; நானும் சுலபமாக என் மாநிலத்துக்குச் சென்று சொல்வேன், ‘தன்னந்தனியனாகப் போராடினேன்; நம் கோரிக்கைகளைப் பேசக்கூட முடியாதபடிக்கு அவர்கள் சட்டத்தை இயற்றிவிட்டார்கள், நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்பேன். என்னுடைய மக்கள் அதைக் கேட்டுவிட்டு, ‘அப்படியா... சரி அண்ணா, நாம் இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்’ என்பார்கள். எனவே, சட்டம்-ஒழுங்கு கெடக்கூடிய ஒரு நிலையை நீங்களாகவே இதன் மூலம் உருவாக்குகிறீர்கள்; புதிதாக ஒரு சட்டமியற்றச் சிந்திக்கும்போது - என்னுடைய நண்பரான உள்துறை அமைச்சரின் வார்த்தைகளைக் கடன் வாங்குவதாக இருந்தால் – நூறு முறை யோசியுங்கள், இப்படியொரு சட்டம் அவசியமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்; இதற்கு ஒரு தேவை இருக்கிறதா, இது அவ்வளவு அவசரமா, இதில் ஏதேனும் தெளிவு இருக்கிறதா என்று சிந்தியுங்கள்.

இப்படியொரு சட்டம் இயற்றப்பட அவசரமும் இல்லை, அவசியமும் இல்லை. இந்த மசோதாவை எதிர்க்கிறேன்; அப்படி எதிர்க்கும்போது இந்த அவையில் உள்ள எல்லா உறுப்பினர்களின் எண்ணங்களுக்கும் எதிராகப் பேசுகிறேனே என்று வருத்தப்படுகிறேன்; இந்த அவையில் உள்ள எல்லோர் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக கவனமாகச் சிந்தியுங்கள், பரிவோடு சிந்தியுங்கள், சமரச பாவத்தோடு சிந்தியுங்கள். உள்துறை அமைச்சருக்கு நான் இதைக்கூடச் சொல்வேன்; சரி சட்டமியற்றிக்கொள்ளுங்கள், இதை உங்களுடைய நிர்வாகப் படைக்கலத்திலே அல்லது ஆவணக் காப்பகத்திலேயே வைத்துப் பூட்டிவையுங்கள்.
எந்தவொரு சூழ்நிலையையும் எப்படி எதிர்கொள்வது என்று மக்களுக்குத் தெரியும். அந்த நிலைமை வரக் கூடாது என்பதற்காகக் கூறுகிறேன், சட்டம் நிறைவேறினால்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை அமையுங்கள். அதை அதிகாரபூர்வமான குழுவாக அமைக்க வேண்டாம்; வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் குழுவாக அமையுங்கள். சப்ரூவை அதில் உறுப்பினராக இருக்குமாறு கேளுங்கள். பூபேஷ் குப்தாவை அதில் இடம்பெறுமாறு கூறுங்கள். என்னுடைய நண்பர் வாஜ்பாய்கூட அதில் உறுப்பினராக இருப்பதை விரும்புகிறேன். குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு வரட்டும். பதினைந்து நாட்களுக்குத் தங்கி எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களுடைய அரசியல் கருத்துகள் என்ன என்று கேட்கட்டும். அதற்குப் பிறகு அவர்கள் ஓர் அறிக்கை அளிக்கட்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்களும் போதிய தகவல்களை அக்குழுவிடம் அளிப்போம். மக்களிடம் கருத்துகளைக் கேட்டுவிட்டு, நாங்கள் தரும் தகவல்களையும் படித்த பிறகு குழுவினரே எங்களிடம் கூறுவார்கள், ‘இதுதான் உங்களுடைய நிலைமை என்றால், நீங்கள் பிரிவினை கோருவதில் நியாயமில்லை என்று கூறிவிட முடியாது; இருந்தாலும் எங்களுடனேயே சேர்ந்து இருங்கள்!’ என்று.

ஜெர்மானிய மொழியில் ஒரு பழமொழி உண்டு. ‘நீ என்னுடைய சகோதரனாக இல்லாவிட்டால், உன் மண்டையை உடைத்து, உன்னை சகோதரனாக ஏற்பேன்’ என்று. நீங்கள் சமரசத்தை விரும்பினால், அரசியல் சூழல் அமைதியாக இருக்க விரும்பினால், அரசியல் பிரச்சினைகளை அரசியல் களத்திலேயே தீர்க்க விரும்பினால் தயவுசெய்து மண்டைகளை உடைக்காதீர்கள்.
(பிரிவினைவாதத் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட பிறகு, மே 1963-ல் ‘மனசாட்சிக்கு ஒரு வேண்டுகோள்’ (An Appeal to Conscience) எனும் பொருளை மையப்படுத்தி அண்ணா ஆற்றிய உரையிலிருந்து சிறு பகுதி இது.)

- ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...

உற்சாகமான விற்பனையில்...

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகங்களில் காலை 10 - மாலை 5 மணிக்குள்
புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இணையம் வழியாக வாங்குவதற்கு:
https://www.kamadenu.in/publications
அஞ்சல் செலவு ரூ.50 தனி
மேலும் விவரங்களுக்கு:
74012 96562, 74013 29402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x