Published : 20 Aug 2019 07:51 AM
Last Updated : 20 Aug 2019 07:51 AM

ஒரு சதவீத இடஒதுக்கீடு: உயர் கல்வி மறுக்கப்படும் பழங்குடி மாணவர்கள் 

செல்வ புவியரசன்

ஈரோட்டிலிருந்து 100 கிமீ தொலைவில் இருக்கிறது சுண்டபோடு என்கிற பழங்குடி கிராமம். அந்தியூரிலிருந்து 60 கிமீ தொலைவில் வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. கொங்காடை என்ற கிராமத்திலிருந்து 5 கிமீ ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்றுதான் இந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். சுண்டபோடு கிராமத்திலிருந்து இதுவரை ஒருவர்கூட கல்லூரிப் படிப்பில் சேரவில்லை. முதலாவது நபராக, இந்த ஆண்டு இரண்டு கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பித்திருந்தார் சந்திரன்.

சந்திரனின் அப்பா உடுமுட்டி. விவசாயம்தான் தொழில். முக்கால் ஏக்கர் சொந்த நிலம். அதுவும் வானம் பார்த்த பூமி. அந்த நிலத்தின் பெயரிலும் ஐந்து லட்சம் கடன் இருக்கிறது. குழந்தைத் தொழிலாளியாக மாடு மேய்த்துக்கொண்டிருந்த சந்திரன் மீட்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்களுக்கான சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தார். குன்றி என்கிற பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார். அதையடுத்து, கோபிசெட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பிரிவில் சேர்ந்து படித்தார்.

ப்ளஸ் டூ முடித்ததும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பித் திருந்தார் சந்திரன். கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தகுதி மதிப்பெண் பட்டியலில் பழங்குடிப் பிரிவில் முதலாவது இடத்தில் இருந்தார் சந்திரன். அந்தத் தகவலும்கூட அவருடன் பள்ளிக்கூடத்தில் உடன் படித்த மாணவர்கள் சொல்லித்தான் அவருக்குத் தெரியும். அந்த அளவுக்கு, தகவல்தொடர்பிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறது சுண்டபோடு வனக் கிராமம். விண்ணப்பித்த பழங்குடி மாணவர்களில் முதலிடம் பெற்றிருந்தும்கூட சந்திரனுக்குக் கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

மறுக்கப்படும் வாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மொத்தமுள்ள இடங்கள் 360. அவற்றில் வேளாண்மைச் செயல்பாடுகள் பாடப்பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் 18 மட்டுமே. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்தத் தொழிற்பாடப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் 44. மொத்த இடங்களில் தொழிற்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் வெறும் 5% மட்டும்தான் என்பதால், ஒரு சதவீத இடஒதுக்கீட்டு வாய்ப்பு பழங்குடி மாணவர்களுக்கு வாய்க்கவேயில்லை.

இன்னும் பள்ளிக் கல்வியே எட்டாதிருக்கும் சுண்டபோடு வனப்பகுதியில் சந்திரனைப் போன்ற ஒரு மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படித்திருப்பதே ஆச்சரியம். மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து படிக்கவரும் இவரைப் போன்ற மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிடக் கூடாது, கல்லூரி வரைக்கும் அவர்களின் படிப்பைத் தொடரச்செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தொழிற்பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கற்பிக்கப்படும் தொழிற்பாடப் பிரிவுக்கும், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தொழிற்கல்விக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பள்ளிக்கூடங்களில் வேளாண்மையைப் பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு வேளாண் கல்லூரியிலும் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் வெறும் 5% இடங்களை ஒதுக்குவது எப்படிச் சரியாகும்? தொழிற்பாடப் பிரிவில் படித்த ஒரு பழங்குடி மாணவர் இந்தப் படிப்புகளில் சேர வேண்டும் என்றால், அவருடைய ஒரு சதவீத இடஒதுக்கீட்டுக்காக இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது எப்படி நியாயமாகும்?

மனுக்களுக்கு என்ன தீர்வு?

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில், கால்நடை மருத்துவப் படிப்பிலும் வேளாண் படிப்பிலும் பழங்குடி மாணவருக்கான இடஒதுக்கீடு சலுகை கேட்டு மனு கொடுத்திருக்கிறார் சந்திரன். தமிழக முதல்வருக்கும் தனது மனுவை அனுப்பிவைத்திருக்கிறார். தற்போது நடைமுறையில் உள்ள பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகளைத் தளர்த்தாமல் சந்திரனைப் போன்றவர்கள் ஒருபோதும் பயன்பெற முடியாது.

பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. உயர் கல்வியிலோ வேலைவாய்ப்பிலோ நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பைப் பழங்குடியினர் பெற முடிகிறது. இல்லையென்றால், அவர்களின் உயர் கல்விக் கனவுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கே இது எதிரான அணுகுமுறை. கல்லூரியில் குறைவான இடங்களே உள்ளபோது, பழங்குடியினர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

உள் இடஒதுக்கீடு வேண்டும்

இடஒதுக்கீட்டுப் பிரிவில் அருந்ததியர்கள் பயன்பெற முடியவில்லை என்ற நிலையில், அவர் களுக்கு உள் இடஒதுக்கீடு செய்தார் மு.கருணாநிதி. பட்டியலினத்தவருக்கான 18% இடஒதுக் கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு செய்வதற்கான சட்டத்தை 2009-ல் இயற்றினார். அவர் உருவாக்கிக்கொடுத்த வாய்ப்பால் உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆண்டுதோறும் பல நூறு பேர் பயனடைந்துவருகிறார்கள். தற்போது, பழங்குடி மாணவர்கள் விஷயத்திலும் தமிழக அரசு அப்படியொரு நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. இவ்வளவு காலமும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கி யிருப்பவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமைக்கு விதிமுறைகள் தடையாக இருக்கும் எனில், விதிகளைத் தளர்த்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பதுதான் இயற்கை நீதியாக இருக்க முடியும்.
சந்திரன் இப்போது என்ன செய்துகொண்டிருக் கிறார்? அப்பாவுக்குத் துணையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். உடுமுட்டி குடும் பத்தினருக்குச் சொந்தமான ஒரு ஜோடி மாடுகளைப் பராமரிக்கும் பொறுப்பு இப்போது சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது சந்திரன் பார்த்த அதே மாடு மேய்க்கும் வேலையை 12 ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x