

இயற்கையின் நற்பயனாக, இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழையின் அருங்கொடை கிடைத்துவிட்டது. மேட்டூர் நிரம்பி, கல்லணை தாண்டி தஞ்சைக்குள் ஓடிவருகிறது காவிரி. ஆனால், ஆற்றுநீரைச் சேமித்துவைக்க ஏரி, குளங்கள் தயாரான நிலையில் இல்லை. குடிமராமத்து அறிவிப்புகளைத்தான் தொடர்ந்து கேட்க முடிகிறதே தவிர, களத்தில் எந்தப் பணிகளையும் பார்க்க முடியவில்லை.
தஞ்சைப் பகுதியில் காவிரியும் வெண்ணாறும் பழைய ஆற்றுப்பாசனமாகும். மேட்டூர் அணை மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்த புது ஆற்றுப்பாசனம் உருவானது. தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தென்கிழக்கில் பாயும் வகையில் கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை பகுதிகளில் 3,01,000 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இவற்றுள் புதுக்கோட்டை மட்டும் மன்னரின் சமஸ்தானத்தில் இருந்தது. காவிரி அங்கு பாய்ந்தால், வரி வசூல் மற்றும் நீர் நிர்வாகத்தில் பிரிட்டன் குறுக்கீடு செய்யும் என்பதால், புதுக்கோட்டை மட்டும் தவிர்க்கப்பட்டது. கல்லணைக் கால்வாய் பகுதியில் 2,56,000 ஏக்கர் பாசனம் உருவானது. 45,000 ஏக்கருக்கான நீர் மிஞ்சியது. அதைப் பயன்படுத்த அப்போதைய சென்னை மாகாண அரசு ஒரு உத்தியைக் கையாண்டது. மேட்டூருக்கும் பவானிக்கும் இடையே காவிரியின் வலது கரையிலும், மேட்டூரிலிருந்து பள்ளிப்பாளையம் ஜேடர்பாளையம் வரையிலுமான காவிரியின் இடது கரையிலும் தரிசு நிலங்கள் கிடந்தன. அங்கு விவசாயிகள் பாசன வசதி கோரினர். மேற்கூறிய எஞ்சிய 45,000 ஏக்கர் பாசனப் பகுதி இங்கு மாற்றப்பட்டது.
1955-56ல் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய்கள் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டன. கரிகாலன் கட்டிய கல்லணையின் பாசன முறைக்கும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசன முறைக்கும் வேறுபாடு உண்டு. கல்லணைப் பாசன முறை ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஜனவரி 30-ல் மூடப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய்களுக்கு ஆகஸ்ட் 1-ல் தண்ணீர் திறக்கப்பட்டு டிசம்பர் 15 வரை தரப்பட்டது. கரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பாயும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கும் ஆகஸ்ட் 1-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், மேட்டூரில் 94.57 கன அடி இருந்தால்தான் இவற்றில் தண்ணீர் தரப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பழனிசாமி முதல்வரான பின் அந்த அரசாணைகள் தளர்த்தப்பட்டன. அண்மையில், மேட்டூரின் உபரி நீரைப் பயன்படுத்தி ரூ.565 கோடியில் 100 ஏரிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்த ஏரிகள் அமையும்.
15 டிஎம்சி முதல் 20 டிஎம்சி வரை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் ஒரு சொட்டு நீர் இருந்தால்கூட அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். இந்த அறிவிப்பு சில வினாக்களை எழுப்புகிறது. 1934-ல் பாசனத்துக்கு மேட்டூரில் முதன்முதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகான 85 ஆண்டுகளில் தாமதமாக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதுதான் அதிகம். கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறுவைச் சாகுபடி இல்லை. காரணம், உரிய காலத்தில் மேட்டூருக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இருக்கும் நீர்நிலைகளும் முறையாகத் தூர்வாரப்படவில்லை. பாசனத்துக்குப் பயன்படும் ஏரிகளே பராமரிப்பு இல்லாமல் இருக்கும்போது புதிய ஏரிகளுக்கு என்ன அவசியம் வந்தது?
- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர்,
விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: vjeeva63@gmail.com