செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 08:59 am

Updated : : 26 Aug 2019 18:56 pm

 

வேலூர் தேர்தல் முடிவு திமுகவுக்குச் சொல்லும் செய்தி என்ன?

a-message-for-dmk-in-vellore-victory

செல்வ புவியரசன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தவிர, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி. பருவமழைக்கு முன்னமே வேலூரில் கொட்டித் தீர்க்க ஏற்பாடான வரலாறு காணாத பணமழை அம்பலமாகி, இந்தியாவிலேயே மறுதேர்தல் நடந்த ஒரே மாநிலம் என்ற ‘பெருமை’யைத் தமிழகத்துக்குத் தந்தது.

மத்தியில் ஆட்சியில் அமரப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கிற தேர்தலாக வேலூர் தேர்தல் அமையவில்லை. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தலாகவே நடந்தது. 37 தொகுதி களில் வென்ற திமுக கூட்டணி, மறுதேர்தலில் பெரும் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எட்டாயிரத்துச் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் அல்லது ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியிலிருந்து தப்பியிருக்கிறது திமுக.

ஏன் இந்த வீழ்ச்சி?

வேலூர் தேர்தல் முடிவு எங்களுக்கு மாபெரும் வெற்றியே என்று கூறியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தியும் பாஜகவுக்கு அதிமுக வலியப்போய் காட்டும் விசுவாசமும் அதிமுகவுக்கு மிகப் பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என்றே அவரும் நம்பியிருந்தார் என்பதன் வெளிப்பாடாக இதை நாம் பார்க்கலாம்.

நிச்சயமாக அதிமுகவுக்குச் சில சாதக அம்சங்கள் இருந்தன. அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக் கட்சியைத் தொடங்கியிருக்கும் டி.டி.வி.தினகரனால் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க முடியவில்லை என்பது மக்களவைத் தேர்தலிலேயே தெளிவாகிவிட்டது. எனவே, அதிமுகவின் வாக்குகள் இம்முறை ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன. அடுத்து, அதிமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் செல்வாக்கு மிக்க வேட்பாளர்; வேலூர் தொகுதியிலிருந்து 1984லேயே மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 2014 தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கூட்டணியிலும் அல்லாது பாஜக கூட்டணியில் நின்றபோதே 3.2 லட்சம் வாக்குகளை (33%) வாங்கியவர்; 59,393 வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வேட்பாளரிடம் வெற்றியை அப்போது அவர் தவறவிட்டிருந்தார். இம்முறை கடந்த முறை கூட்டணிக் கட்சிகளோடு, அதிமுகவும் சேர்ந்து ஒரே அணியாக நின்ற நிலையில், வலுவான போட்டிக்கான சாத்தியங்கள் இருக்கவே செய்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தல், மாநிலம் தழுவிய அலையைத் திமுகவுக்குச் சாதகமாக உருவாக்கியிருந்த நிலையில், வேலூரிலும் அதுவே தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வேலூரோடு மிக நெருங்கிய தொடர்புடைய திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால், மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது.
நடந்தது என்ன? திமுகவுக்குள்ளேயே வேலூர் தேர்தல் முடிவு சுயபரிசீலனையை வலிறுத்துகிறது என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன. அதிமுக இவ்வளவு செல்வாக்கிழந்திருக்கும் நிலையிலும், இவ்வளவு குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலேயே திமுகவால் வெல்ல முடிந்ததற்குக் கட்சியின் கீழ்மட்டத்தில் மூன்று முக்கியமான காரணங்களைச் சொல்கிறார்கள்.

1) வாரிசு அரசியல் மக்களைச் சலிப்படையச் செய்கிறது. 2) கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியில் இன்று அன்பழகனுக்கு அடுத்து மூத்தவர் ஆகியிருக்கும் துரைமுருகனின் செயல்பாடுகள் – அலட்சியமான அணுகுமுறை – கூட்டணிக் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி சொந்தக் கட்சியினரையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கிவருகின்றன. 3) மக்களை நோக்கி வேட்பாளராகக் கொண்டுவரப்படும்போது, குறைந்தபட்சம் ஏனையோருக்கு உரிய தகுதிகள், பண்புகளையேனும் வாரிசுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - கதிர் ஆனந்த் இன்னமும் கீழே கட்சிக்காரர்களுடன்கூட ஒன்றிணையவில்லை.

அடித்தளக் கட்டுமானத்தில் விரிசல்

வாரிசு அரசியல் திமுகவில் சகஜம் என்றாலும், மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன், தங்கம் தென்னரசு, பூங்கோதை ஆலடி அருணா, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று பலர் தங்களுடைய தந்தையின் செல்வாக்கைத் தாண்டியும் தங்களது செயல்பாடுகளால் மக்களிடமும் ஆதரவுபெற்றிருக்கிறார்கள். அப்படி யொரு மக்கள் செல்வாக்கை கதிர் ஆனந்த் இதுவரை கட்சி அளவிலேயேகூட முழுமையாகப் பெறவில்லை. தந்தையின் பெயரைச் சொல்லித்தான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறாரேயொழிய கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்பவராக அவர் இல்லை என்கிறார்கள். அடுத்து, “துரைமுருகன் கிட்டத்தட்ட 50 வருடங்களாக சட்டமன்றத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்; இப்போது அவர் மகன்; இனி அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குப் போய்க்கொண்டேயிருப்பார் என்றால், ஏனையோர் கட்சிக்கு உழைத்து என்ன பயன்?” என்ற விரக்தி வெளிப்படையாக வெளியில் கேட்கிறது.

திமுகவின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் இப்படித் தங்களது வாரிசுகளைக் களத்தில் இறக்குவது கட்சிக்குள்ளேயே அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. தேர்தல் களத்தில் எப்போதும் தீவிரம் காட்டும் திமுக தொண்டர்கள் நடந்து முடிந்த தேர்தலில் மாவட்டப் பொறுப்பாளர்களை ‘எதிர்பார்த்து’ காத்திருந்தது அக்கட்சியின் அடித்தளக் கட்டுமானத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல்.
தொகுதியில் பெரும்பான்மைச் சமூகத்தினர் வன்னியர்கள்; ஏ.சி.சண்முகம் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால், கதிர் ஆனந்த் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் பெரும்பான்மை வன்னியர் சமூகத்தினர் அவரைப் புறக்கணித்திருப்பதாகவும், சிறுபான்மையினர் வாக்குகளே அவரைக் கரைசேர்த்திருப்பதாகவுமான பேச்சு வேலூர் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது. எப்படி பிராந்திய அளவில் வாரிசு அரசியல் சலிப்பை உண்டாக்குகிறதோ, அதேபோல சமூகங்கள் அளவிலும் வாரிசு அரசியல் சலிப்பை உண்டாக்குவதன் வெளிப்பாடாக இதைக் கருதலாம்.

வேலூர் தேர்தல் முடிவு விடுக்கும் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்பட்டதால் கூட்டணிக் கட்சிகளோடு நெகிழ்வான அரசியல் உறவைப் பராமரித்தார் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டும் போட்டியிடுவதற்காக மக்களவையில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாராளம் காட்டினார். சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், வேலூர் மறுதேர்தலில் கூட்டணிக் கட்சியினருடனான உறவில் அதே அணுகுமுறை தொடரவில்லை. அதிமுகவுக்கு ஆதரவாக பிரேமலதாவும் அன்புமணியும் களத்தில் இறங்கி வேலைசெய்தபோது, திமுக சார்பில் உதயநிதியை முன்னிறுத்தி ஊர்வலங்கள் நடந்து கொண்டிருந்தன. துரைமுருகன் வாரிசை ஆதரித்து ஸ்டாலினின் வாரிசு பிரச்சாரம் செய்கிறார் என்று உள்ளூரில் முணுமுணுப்புகள் எழுந்தன.

வாரிசு அரசியல் விஷயத்தை மிக ஜாக்கிரதையாக திமுக அணுக வேண்டும். குடும்பங்களிலிருந்து கட்சிக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் அதற்குரிய தகுதிகள், பண்புகளை வளர்த்துக்கொள்வதையாவது கட்டாயமாக்கி, அதன் பின் தேர்தல் களத்தை நோக்கி அவர்களைக் கொண்டுவர வேண்டும். மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் உயிர்த்தெழ முக்கியமான காரணம், மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தி என்பது யாரும் மறுக்கக் கூடியது அல்ல; யாருக்குமே வெற்றி சாஸ்வதமானதும் அல்ல. திமுகவை நோக்கி மக்கள் திரும்பும் நாட்களில் ‘நாம் எதைச் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்கிற முடிவை அக்கட்சியின் தலைமை எடுக்குமேயானால், விளைவு எப்படியானதாக இருக்கும் என்பதையே வேலூர் தேர்தல் முடிவு எச்சரிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறது.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

வேலூர் தேர்தல் முடிவுதிமுக வெற்றிஸ்டாலின்கனிமொழிஉதயநிதி வாரிசு அரசியல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author