

கும்பல் கொலைகளுக்கும் சாதி ஆணவக் கொலை களுக்கும் எதிராகத் தனிச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து நாட்டுக்கே வழிகாட்டியிருக்கிறது ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு. மணிப்பூரை அடுத்து இரண்டாவதாக ராஜஸ்தானில் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்ட முன்வடிவு, கும்பல் கொலைகள் மற்றும் சாதி ஆணவக் கொலைகள் நடக்கும் மற்ற மாநிலங்களிலும் இயற்றப்பட வேண்டியது காலத்தின் அவசியம்.
கும்பல் கொலை எது என்பதற்கான விளக்கம் மணிப்பூர் சட்ட முன்வடிவில் இருப்பதைப் போலவே ராஜஸ்தான் இயற்றியுள்ள முன்வடிவிலும் இடம்பெற்றுள்ளது. ‘எந்த விதமான வன்செயலும் தன்னெழுச்சியாகவோ திட்டமிட்டோ நடத்தப்படக் கூடாது; மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், மொழி, உணவுப் பழக்கவழக்கம், பாலின விருப்பம், அரசியல் சார்பு ஆகிய காரணங்களுக்காக யாரும் கொல்லப்படக் கூடாது’ என்கிறது சட்ட முன்வடிவு. இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொன்றாலும் அந்த இருவரையுமே ‘கும்பல்’ என்றே கருத வேண்டும் என்கிறது.
‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அப்பாவிகளை வன்முறைக் கும்பல்கள் தாக்குவதும் கொலை செய்வதும் வரம்பில்லாமல் தொடர்வது நல்லதல்ல. பசுவை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் கொண்டுசெல்வதையும் மாட்டுக்கறி வைத்திருப்பதையும்கூட கடுமையான குற்றமாகப் பார்த்து அதற்காக உயிரையும் பறிக்கத் துணிவது மட்டுமீறிய அக்கிரமமாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் உண்மை என்ன என்றுகூட தெரிந்துகொள்ளாமல் வெறும் வதந்தியையே ஆதாரமாகக் கொண்டு வன்செயல்களில் ஈடுபடுவதே வழக்கமாகிவருவதால் இச்சட்டம் அவசியமாகிறது. குடும்ப கௌரவம் அல்லது சாதி கெளரவத்துக்காகக் கொலை செய்வது வழக்கமாகவும் வெளிப்படையாகவும் ஆகிவிட்டது. கொல்வது சட்டத்துக்குப் புறம்பானது, இதற்குத் தண்டனை உண்டு என்று தெரிந்தும் நடக்கும் இக்கொலைகளைக் கடுமையாக ஒடுக்காவிட்டால் நாளை எந்த குற்றச் செயலையும் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
2014-க்குப் பிறகு நடந்த கும்பல் கொலை அல்லது தாக்குதல் சம்பவங்களில் 86% ராஜஸ்தானில்தான் நடந்துள்ளன. எனவே, இங்கு சட்டம் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார் மாநில சட்டமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர். இந்த இருவகைக் குற்றங்களிலும் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மரண தண்டனை அல்லது ஆயுள்காலச் சிறை என்று சட்ட முன்வடிவு எச்சரிக்கிறது. ரூ.5 லட்சம் வரையில் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவும், சம்பவத்துக்குப் பிறகு வேறிடத்துக்குக் குடியேற நேரிட்டால் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படவும் சட்ட முன்வடிவு இடம் தருகிறது.
நாட்டின் சில மாநிலங்களில் கும்பல் கொலைகளும் சாதி ஆணவக் கொலைகளும் தலைகாட்டத் தொடங்கியபோதே மத்திய அரசு இதுபோல ‘மாதிரிச் சட்டம்’ இயற்றியிருந்தால் இக்கொலைகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தானைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் கும்பல் கொலைகள் மற்றும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டங்களை இயற்ற வேண்டும்.